search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருத்தணி போராட்டம்"

    • இலவச வீட்டு மனைகள் பெற்ற பயனாளிகள் மனித உரிமை ஆணையத்திடம் புகார் செய்தனர்.
    • புகாரின் மீது விசாரணை நடத்தி பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைகள் அளவீடு செய்து வழங்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.

    திருத்தணி:

    திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே ஆர்.கே. பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ராஜாநகரம் கிராமத்தில் வசித்து வரும் ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்டது.

    தங்கள் வீடுகளுக்கு அருகில் ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜநகரம் கிராமத்தைச் சார்ந்த மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், பல ஆண்டுகளாக பயனாளிகளுக்கு சர்வே செய்து நிலம் வழங்கப்படாத நிலை நீடித்து வந்தது.

    இந்த நிலையில், இலவச வீட்டு மனைகள் பெற்ற பயனாளிகள் மனித உரிமை ஆணையத்திடம் புகார் செய்தனர்.

    புகாரின் மீது விசாரணை நடத்தி பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைகள் அளவீடு செய்து வழங்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.

    அதன்பேரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருத்தணி ஆர்.டி.ஒ. சத்யா தலைமையில் வருவாய்த்துறையினர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரணீத் தலைமையிலான 500க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் இலவச வீட்டு மனைகள் சர்வே செய்து பயனாளிகளிடம் ஒப்படைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை திடீரென்று கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு இலவச வீட்டுமனை சர்வே செய்து அமைக்கப்பட்டிருந்த அளவீட்டு கற்களை அகற்றினர். இச்சம்பவம் தொடர்பாக கிராமத்தைச் சேர்ந்த கவிகண்ணன், விநாயகம், ஜெயராமன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    இதனால் ஆத்திரமடைந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பள்ளிப்பட்டு - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    மேலும் மாநில நெடுஞ்சாலையில் மரங்களை வெட்டி சாய்த்தனர். பொதுமக்களுடன் பேச்சுவார்த்தைக்கு சென்ற ஆர்.கே. பேட்டை தாசில்தார் தமயந்தியை சிறைபிடித்தனர். பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் பிடியில் சிக்கி 3 மணிநேரம் போராடிய தாசில்தார் திடீரென்று மயக்கம் அடைந்தார்‌. அவரை கடும் போராட்டத்திற்கு பிறகு பொதுமக்களிடமிருந்து போலீசார் மீட்டனர்.

    அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது திடீரென்று போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரை, மின்சாரத்தை தடை செய்து சரமாரியாக கற்கள் கொண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தால் போலீசார் அங்கிருந்து தப்பி ஓடினர். நேற்று மாலை இரவு வரை நடந்த இந்த சம்பவத்தில் ஆர்.கே பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

    இந்த பரபரப்பான நிலையில் காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. சத்ய பிரியா, திருவள்ளூர் எஸ்பி கல்யாண் ஆகியோர் ஆர்.கே.பேட்டையில் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலையிலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ×