search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சியில் கார் கடத்தல்"

    திருச்சியில் சாராய வியாபாரத்துக்கு கார் கடத்தலில் ஈடுபட்ட மன்னனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 6 கார்கள் மற்றும் 30 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
    திருச்சி:

    திருச்சி உறையூர் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 30). இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். நேற்று வியாபாரம் செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அவரிடமிருந்த ரூ.7ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு தப்பியோடிவிட்டார். இதையடுத்து அவர் பேருந்து நிலைய போலீசில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி தேடும் பணியில் ஈடு பட்டனர்.

    அப்போது திருச்சி ஜங்‌ஷன் ரெயில் நிலைய பார்சல் அலுவலகம் அருகே செல்லும் போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கரூர் மாவட்டம் குளித்தலை கீழ பஞ்சப்பட்டியை சேர்ந்த சுரேஷ் (வயது 42) என்பதும் பிரபல சாராய வியாபாரி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது பரபரப்பு தகவல் கிடைத்தது.

    சுரேஷ் முதலில் திருப்பூரில் சாராயம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். இதையடுத்து அவரே வடமாநிலங்களில் இருந்து சாராயம் வாங்கி வந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளார். மேலும் சாராயம் கொண்டு வருவதற்கு வாடகை கார்களை பயன்படுத்தாமல், எங்காவது நிற்கும் கார்களை திருடி அதன் மூலம் கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.

    இதன்மூலம் அவர் தமிழகத்தில் திருச்சி, புதுச்சேரி, திண்டுக்கல் உள்பட பல்வேறு இடங்களில் கார்களை திருடியுள்ளார். மேலும் திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். திருச்சியில் தனியார் பள்ளி நிர்வாகி வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை போன சம்பவத்தில் இவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

    மேலும் சாராய வியாபாரம், கார் கடத்தல் மட்டுமின்றி ஆந்திராவில் இருந்து செம்மரம் கடத்துவதற்கும் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. இந்தநிலையில் போலீசில் அவர் சிக்கிக் கொண்டார். தொடர்ந்து அவரிடம் இருந்து 6 கார்கள் மற்றும் 30 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். திருச்சியில் பிரபல கார் கடத்தல் மன்னன் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×