search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சி அரசு ஆஸ்பத்திரி"

    • புதிய தமிழகம் கட்சியினர் இன்று திருச்சி அரசு மருத்துவமனை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
    • போராட்டம் காரணமாக அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

    திருச்சி:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ் காந்தி. இவர் மலைக்கோட்டை பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேனாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அதிகாரிகளின் அஜாக்கிரதையால் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    அவரது உடல் திருச்சி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் உள்ளது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மின்வாரிய அதிகாரி ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்த நிலையில் ராஜீவ் காந்தியை உரிய பாதுகாப்பு இல்லாமல் பணி செய்ய கூறிய மேலும் சில அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்த கேங்மேன் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினர் இன்று திருச்சி அரசு மருத்துவமனை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    இதற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் மருத்துவமனை வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் வடக்கு, தெற்கு, மேற்கு மாவட்ட செயலாளர்கள் பிச்சைமுத்து, தினகரன், வக்கீல் இளையராஜா மற்றும் சின்னையன் ஆகியோர் மற்றும் கேங்மேன் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் போலீஸ் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று கலெக்டரிடம் மனு அளித்தனர். இந்த போராட்டம் காரணமாக அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

    ×