search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சபைகள்"

    • வலுவின்மையில் தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்.
    • இகழ்ச்சியிலும், இன்னலிலும் கிறிஸ்துவை முன்னிட்டு அகமகிழ்ந்தார்.

    இறைமகன் இயேசு கிறிஸ்துவின் விண்ணுலகப் பயணத்திற்கு பிறகு அவருடைய சீடர்கள் மறை பரப்புப் பணியைச் செய்தனர். அவர்களோடு திருத்தூதுவர்கள் பலரும் இணைந்து இத்திருப்பணியைத் திறம்படச் செய்து வந்தனர். இவர்களில் மிகவும் முக்கியமானவர் தூய பவுல் அடிகளார். இவருடைய தீவிர நற்செய்திப் பணியின் காரணமாக பல திருச்சபைகள் உருவாயின. செயலற்றுப் போயிருந்த பல திருச்சபைகளை உயிர்ப்போடும், இறையியற் தெளிவோடும் செயல்பட வைத்தார்.

    தூய பவுல், ஆண்டவரின் திருவாக்காக கூறுகிறார்: 'என் அருள் உனக்குப் போதும் வலுவின்மையில் தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்'. (2 கொரி.12:9)

    தன் பலவீனத்தில் இறைபலத்தை உணர்ந்த தூய பவுல், யூத சமயத்தின் மீதிருந்த பக்தி வைராக்கியத்தினால் யூத சமயத்தின் தலைவர்களின் அனுமதியுடன் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதற்காக தமஸ்கு சாலையில் பயணம் செய்தவர், கிறிஸ்துவின் தூதுவராக அழைக்கப்படுகிறார்.

    தான் உருவாக்கிய பல திருச்சபைகளுக்கு கடிதங்களை எழுதி அவர்களோடு நல்ல தொடர்பில் இருந்தார். நற்செய்தி பணிக்காக பல்வேறு துன்பங்களையும், இழப்புகளையும், தண்டனைகளையும், சிறைக்கூட அனுபவங்களையும் மகிழ்ச்சியோடும், பெருமையோடும் ஏற்றுக்கொண்டார். தன் பலவீனங்களைக் குறித்தும் அவர் மேன்மை பாராட்டினார். 'என் வலுவின்மையே எனக்குப் பெருமை' (2 கொரி.12:5) என்கிறார்.

    உடலில் தைத்த முள்

    கடவுளின் வழிநடத்துதலை நேரடியாகவும், மறைமுகமாகவும், இறைத்தூதர்கள் மூலமாகவும் பல்வேறு வெளிப்பாடுகளை பெற்ற தூய பவுல் அடிகளார் தன் உடலில் இருக்கின்ற ஒரு மாபெரும் பலவீனத்தைக் குறித்து பெருமையோடு கூறுகிறார். தூய பவுல் அடிகளார் எவ்விதத்திலும் பெருமை அடையாதபடி துன்பப்படுத்தும் ஒரு நோயை அவர் அனுபவிக்க வேண்டியதாயிற்று.

    அதனால் தான் 'உடலில் தைத்த முள்' என்பதற்கு பல்வேறு விளக்கங்கள் சொல்லப்படுகிறது. சிலர் `கிட்டப்பார்வை குறைபாடு' என்றும், வேறு சிலர் `மலேரியா காய்ச்சல்' என்றும், இன்னும் சிலர் `காக்காய் வலிப்பு' என்றும் கூறுவர். (கலா 4:13-15).

    ஆனால் உண்மை அடிப்படையில் `உடலில்' என்பதை `உடலின் நிமித்தம்' என்று வாசிப்பது தான் மிகவும் பொருத்தமானது. அப்படியானால் இங்கே `முள்' எனக் குறிப்பிடுவது ஒரு கடுமை மிக்க ஆவிக்குரிய சோதனையைக் குறிக்கும். அவரின் பலவீனம் அவருடைய மறை பரப்பு பணியைப் பெரிதும் தடைசெய்யும் இன்னல்களை, வலிகளைக் கொடுத்த போதும் அச்சம் கொள்ளவும், நம்பிக்கை இழக்கும்படியான சோதனைக்குட்பட்டார் என்பது உண்மை.

    அத்தகைய சோதனை ஏற்பட கடவுளின் அனுமதி இருந்தாலும் `அதை எனைக்குட்டும் சாத்தானின் தூதன்' எனக்கூறுகிறார். 'குட்டும்' எனும் போது தொடர்ந்து இடைவிடாமல் நிகழும் தன்மையை குறிப்பிடுகிறார். பவுல் அடிகளார், 'அதை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு மூன்று முறை ஆண்டவரிடம் வருந்தி வேண்டினேன்' (2 கொரி 12:8) என்கிறார்.

    ஆனால் ஆண்டவர், 'என் அருள் உனக்குப் போதும். வலுவின்மையில் தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்' என்கிறார். ஆண்டவர் இயேசு கெத்சமனே தோட்டத்தில் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும் என்று மூன்று முறை ஜெபித்தார். நேர்ந்த இன்னல் நீக்கப்படவில்லை. ஆனால் அதை தாங்குவதற்கு வலிமை அளிக்கும் விதமாக அப்போது விண்ணகத்திலிருந்து ஒரு தூதர் தோன்றி அவரை வலுப்படுத்தினார்.

    அதேபோல் பவுல் அடியாருக்கும் ஆண்டவர் 'என் வல்லமை பூரணமாக விளங்கும்' என்ற பதிலையேத் தருகிறார். ஒருமுறை மட்டும் தான் இத்திருவாக்கு அருளப்படினும் அதன் நிறைபலனைத் தொடர்ந்து அனுபவித்து வருகிறார். பவுலடியார் தன் பலவீனத்தைக் குறித்துப் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறார். தன் வலுவின்மையிலும், இகழ்ச்சியிலும், இன்னலிலும் கிறிஸ்துவை முன்னிட்டு அகமகிழ்ந்தார். ஏனெனில் தான் வலுவற்றிருக்கும் போது வல்லமை பெற்றவனாக உணர்ந்தார்.

    பிரியமானவர்களே, நீங்களும் உங்கள் பலவீனத்தைக் குறித்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்கலாம். உங்கள் பலவீனத்தால் உங்கள் வாழ்வு பொருளிழந்து, அருளிழந்து, மகிழ்விழந்து போனதாக நீங்கள் உணர்ந்து கொண்டிருக்கலாம்.

    `கடவுளே இந்த பலவீனம் மட்டும் என் வாழ்வில் இல்லாமல் போயிருந்தால் நான் எப்படியோ இருந்திருப்பேன். என் வாழ்க்கைத் தரம் மென்மேலும் உயர்ந்து இருக்கும். என் வாழ்வில் இருக்கின்ற இந்த பலவீனம் என் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப் போட்டு விட்டது. என் வாழ்வின் முன்னேற்றத்தைக் குலைத்து என் வாழ்வின் நிலை உயரமுடியாமல் செய்துவிட்டது' என்று மனதிற்குள்ளாக நீங்கள் கலங்கிக்கொண்டிருக்கலாம்

    ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். உங்களிடம் இருக்கும் இந்த பலவீனம் தான் கடவுளின் கிருபையை, வலிமையை, அன்பின் ஆழத்தை உங்களுக்கு உணர்த்துகிறது. உங்கள் பலவீனத்தில் தான் கடவுளின் நிறைவான இறையாற்றலை உங்களில் அனுபவிக்க வாய்ப்புத் தருகின்றது. உங்கள் பலவீனம் தான் இறைவனோடு உங்களுக்கு இருக்கின்ற உறவை, ஐக்கியத்தை வலுப்பெறச்செய்கின்றது. ஆதலால் உங்களுடைய பலவீனத்தைக் குறித்து தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் நம் வலுவின்மையில் தான் கடவுளின் வல்லமை நிறைவாய் வெளிப்படும்!

    ×