search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திகார் சிறை"

    • துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவை பிப்ரவரி 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
    • மணீஷ் சிசோடியா திகார் சிறையிலிருந்து தனது தொகுதி மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் துணை முதல் மந்திரியாக இருந்தவர் மணீஷ் சிசோடியா.

    மதுபானக் கொள்கை மூலம் ஊழலில் ஈடுபட்டதாக இவர்மீது குற்றம்சாட்டப்பட்டது. மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.

    இந்நிலையில், திகார் சிறையிலிருந்து மணீஷ் சிசோடியா தனது சட்டசபைத் தொகுதியான பட்பர்கஞ்ச் மக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    விரைவில் வெளியில் சந்திக்கிறேன். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மக்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பினர்.

    பல ஆண்டுகள் சிறையிலிருந்த மகாத்மா காந்தி மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோர் எனக்கு உத்வேகம் அளித்துள்ளனர்.

    சுதந்திரத்துக்காக மக்கள் போராடியது போன்று நல்ல கல்வி மற்றும் பள்ளிகளுக்கான போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். சிறையில் இருக்கும்போது எனது தொகுதி மக்கள் மீதான அன்பு அதிகரித்துள்ளது. அவர்கள் தான் எனது பலம்.

    வளர்ந்த நாட்டுக்கு நல்ல கல்வி அவசியம். அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் கல்வி புரட்சி நடந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் அனைவரும் உங்களை கவனித்துக் கொள்ளுங்கள் என எழுதியுள்ளார்.

    சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான வழக்கு நாளை டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கெஜ்ரிவாலுக்கு ஏதாவது நடந்தால் நாடு மட்டுமல்ல, கடவுள் கூட அவர்களை மன்னிக்க மாட்டார் என்று டெல்லி மந்திரி அதிஷி தெரிவித்தார்.
    • வீட்டில் சமைத்த உணவை சாப்பிட கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை பாதிக்கப்பட்டு 4½ கிலோ எடை குறைந்துள்ளதாக ஆம்ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக டெல்லி மந்திரி அதிஷி இன்று காலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு கடுமையான நீரிழிவு நோயாளி. அவருக்கு உடல் நலக்குறைவு இருந்த போதிலும் 24 மணி நேரமும் தேசத்திற்கு சேவை செய்ய உழைத்தார். அவர் கைது செய்யப்பட்டதில் இருந்து தற்போது 4½ கிலோ உடல் எடை குறைந்துள்ளார்.

    இது மிகவும் கவலை அளிக்கிறது. அவரது உடல் நிலையை பா.ஜனதா ஆபத்தில் ஆழ்த்துகிறது.

    அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏதாவது நடந்தால் நாடு மட்டுமல்ல, கடவுள் கூட அவர்களை மன்னிக்க மாட்டார் என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே அரவிந்த் கெஜ்ரிவால் நலமாக இருப்பதாகவும், கடந்த 1-ந்தேதி சிறையில் அடைக்கப்பட்ட போது 55 கிலோ எடை இருந்ததாகவும், தற்போதும் இருப்பதாகவும் ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் அவர்கள் கூறும் போது, வீட்டில் சமைத்த உணவை சாப்பிட கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை அவரது சர்க்கரை அளவு குறைந்தது. அவருக்கு சர்க்கரை அளவு தொடர்ந்து ஏற்ற-இறக்கத்துடன் இருந்தததால் திகார் சிறை டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்தார். தற்போது அவரது ரத்த சர்க்கரை அளவு சாதாரணமாக உள்ளது. அவர் யோகா செய்தார் என்றனர்.

    • டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது
    • கெஜ்ரிவாலுக்கு வரும் 15-ந்தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது

    டெல்லி மாநில முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இருந்து வருகிறார். டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் கடந்த மாதம் 21-ந்தேதி (மார்ச்) கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

    டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மார்ச் 28-ந்தேதி அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்பின் மார்ச் 28-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஏப்ரல் 1-ந்தேதி (இன்று) வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று அவர் மீண்டும் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வருகிற 15-ந்தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்

    • திகார் சிறையில் இருக்கும் அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் ஜாமீன் மறுத்து இருந்தது.
    • இதை தொடர்ந்து மணிஷ் சிசோடியா இன்று காலை 10 மணியளவில் திகார் சிறையில் இருந்து புறப்பட்டார்.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி 26-ந் தேதி கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் இருக்கும் அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் ஜாமீன் மறுத்து இருந்தது.

    இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மனைவியை சந்திக்க சிசோடியா டெல்லி கோர்ட்டில் அனுமதி கேட்டார். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 6 மணி நேரம் சந்திக்க அவருக்கு கோர்ட்டு அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து மணிஷ் சிசோடியா இன்று காலை 10 மணியளவில் திகார் சிறையில் இருந்து புறப்பட்டார். வீட்டுக்கு சென்று அவர் மனைவியை சந்தித்தார்.

    • ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை கெஜ்ரிவால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லியின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், சிறையில் உள்ள குளியலறையில் சத்யேந்தர் ஜெயின் இன்று திடீரென விழுந்தார். உடனடியாக அவரை சிறை அதிகாரிகள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை சிறையின் குளியலறையில் விழுந்ததில் அவரது முதுகெலும்பில் அடிபட்டது. இந்த காயத்திற்காக அவர் சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், மீண்டும் இன்று பாதிக்கப்பட்டுள்ளார்.

    அவர் தனது இடுப்பில் பெல்ட் அணிந்து மிகவும் பலவீனமாக காணப்படுகிறார். அவர் கைது செய்யப்பட்டதில் இருந்து சுமார் 35 கிலோ வரை உடல் எடை குறைந்திருப்பதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை கெஜ்ரிவால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் நலம்பெற பிரார்த்தனை செய்வதாக கூறி உள்ளார்.

    சத்யேந்தர் ஜெயின் ஆதரவாளர்களும் கட்சி தொண்டர்களும் அவரது உடல்நிலை குறித்து கவலையை தெரிவித்துள்ளனர். மேலும் அவரை கொல்ல பாஜக முயற்சிப்பதாக குற்றம்சாட்டி உள்ளனர்.

    இந்த குற்றச்சாட்டுகளுக்கு பாஜக பதில் அளித்துள்ளது. கைது செய்யப்படுவதற்கு முன்பு சத்யேந்திர ஜெயின் அதிக உடல் எடையுடன் இருந்ததாகவும், இப்போது எடை குறைந்து சரியான அளவில் இருப்பதாகவும் பாஜக தெரிவித்துள்ளது. 

    • டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயின் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.
    • சத்யேந்தர் ஜெயின் மிரட்டியதாக 2 அதிகாரிகள் புகார் செய்துள்ளனர்.

    புதுடெல்லி :

    டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயின், சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்கில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போதிருந்து டெல்லி திகார் சிறையில் இருந்து வருகிறார்.

    சிறையில் அவர் மசாஜ் செய்து கொள்வதும், வெளி உணவை சாப்பிடுவதும் வீடியோவாக வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.

    இந்தநிலையில், சத்யேந்தர் ஜெயின் மீது திகார் சிறை கூடுதல் ஐ.ஜி., சிறை சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டு, உதவி சூப்பிரண்டு, சட்ட அதிகாரி ஆகியோர் டி.ஜி.பி.யிடம் (சிறைகள்) புகார் தெரிவித்துள்ளனர்.

    அதில், ''சத்யேந்தர் ஜெயின் அனுபவிக்கும் வசதிகளை நாங்கள் தடுக்க முயற்சிப்பதால் அவர் எங்களை வசை பாடுகிறார். 'நான் வெளியே வந்த பிறகு கடுமையான பின்விளைவுகளை சந்திப்பீர்கள்' என்று மிரட்டுகிறார்'' என்று அவர்கள் கூறியுள்ளனர்.

    இதுபோல், நோட்டீஸ் கொடுக்க சென்ற தங்களை சத்யேந்தர் ஜெயின் மிரட்டியதாக 2 அதிகாரிகள் புகார் செய்துள்ளனர். இதுகுறித்து ஆம் ஆத்மி தரப்போ, டெல்லி அரசு தரப்போ எதுவும் கூறவில்லை.

    • திகார் சிறையில் சொகுசு வசதிகளுடன் சத்யேந்திர ஜெயின் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
    • துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா, சிறையில் அவருக்கு சகல வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என விளக்கமளித்தார்.

    பணமோசடி குற்றச்சாட்டில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு இருக்கும் டெல்லி மந்திரி சத்யேந்திர ஜெயின் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

    இதற்கிடையே, திகார் சிறையில் சொகுசு வசதிகளுடன் சத்யேந்திர ஜெயின் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், சிறையில் சொகுசு படுக்கைகளுடன் சத்யேந்திர ஜெயின் மசாஜ் செய்வது போன்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

    இதற்கு, முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக 2 முறை அறுவை சிகிச்சை செய்துள்ளதால் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது எனக் கூறிய துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா, சிறையில் அவருக்கு சகல வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என விளக்கமளித்தார்.

    இந்நிலையில், டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் சிறையில் ஓட்டலில் இருந்து வரவழைக்கப்பட்டு வகைவகையான ஆடம்பர உணவு உண்ணும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிறையில் அமைச்சர் உல்லாச வாழ்க்கை அனுபவிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
    • பாஜகவால் மட்டுமே காயம்பட்டவருக்கு சிகிச்சை அளிக்கும் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு நகைக்க முடியும்.

    தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். அவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்திர ஜெயின்.

    இதற்கிடையே, சத்யேந்திர ஜெயினை அமலாக்கத் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், சிறையில் உள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு ஒருவர் மசாஜ் செய்துவிடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த சிறையில் அமைச்சர் உல்லாச வாழ்க்கை அனுபவிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    வீடியோ தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறுகையில், " உண்மையிலேயே சத்யேந்திர ஜெயின் முதுகெலும்பு பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பாஜகவால் மட்டுமே காயம்பட்டவருக்கு சிகிச்சை அளிக்கும் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு கொடூரமான நகைச்சுவைகளை செய்ய முடியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக கொலை
    • துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வந்ததால் பரபரப்பு

    நாகர்கோவில் :

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் செய்யது அலி. இவரும் அதே பகுதியை சேர்ந்த வாசிம் என்பவரும் கம்பளி வியாபாரத்திற்காக கடந்த 2010-ம் ஆண்டு குமரி மாவட்டத்திற்கு வந்தனர்.

    நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கி இருவரும் கம்பளி விற்பனை செய்து வந்தனர்.

    சம்பவத்தன்று பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வாசிம் கத்தியால்செய்யதுஅலியை குத்தி கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்துகோட்டார்

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவான வாசிமை தேடிவந்தனர்.

    இந்த நிலையில் வாசிம் டெல்லியில் அடுத்தடுத்து இரண்டு பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இந்த நிலையில் வாசிம் திகார் ஜெயிலில் இருப்பதை அறிந்த கோட்டார் போலீசார் செய்யதுஅலி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்தனர்.

    இது தொடர்பாக வழக்கு நாகர்கோவில் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

    இதையடுத்து திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த வாசிமை டெல்லி போலீசார் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வந்தனர். குமரி மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட வாசிமை போலீசார் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    இதையடுத்து நாகர்கோவில் கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட வாசிமை வழக்கு விசாரணை முடியும் வரை நாகர்கோவில் ஜெயிலில் அடைக்க வேண்டுமென்று கோட்டார் போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    ×