search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாமதமாக வரும் ரெயில்"

    குளித்தலைக்கு தாமதமாக வரும் ரெயிலால் பயணிகள் அவதியடைகின்றனர்.
    குளித்தலை:

    கரூர் ரெயில் நிலையத்திலிருந்து குளித்தலை வழியாக திருச்சி வரை தினந்தோறும் காலை பயணிகள் ரெயில் சென்று வருகிறது. இந்த ரெயிலில் குளித்தலை ரெயில் நிலையத்திலிருந்து குளித்தலை மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்வோர் என ஏராளமானோர் தினசரி பயணம் செய்து வருகின்றனர். இதில் கல்லூரி மாணவ- மாணவிகள் 3 மாதங்களுக்கு ரெயில் பாஸ் எடுத்துக்கொண்டும், வேலைக்கு செல்வோர் ஒரு மாதத்திற்கு பாஸ் எடுத்துக்கொண்டும் பயணம் செய்துவருகின்றனர்.

    பஸ் கட்டண உயர்வை அடுத்து பஸ்சில் கூடுதல் கட்டணம் கொடுத்து செல்ல இயலாத பலர் திருச்சிக்கு செல்வதற்கு இந்த ரெயிலை பயன்படுத்தி வருகின்றனர். அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ள வகையில் இது உள்ளது. இந்த ரெயில் கரூர் ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு குளித்தலை ரெயில் நிலையத்திற்கு காலை 7.49 மணிக்கு வந்து 7.50 மணிக்கு புறப்பட்டு செல்லும். பல நாட்கள் காலை 8 மணிக்கு கூட இந்த ரெயில் குளித்தலைக்கு வருவதுண்டு.

    இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் தொடக்கம் முதலே இந்த ரெயில் குறித்த நேரத்தில் குளித்தலை ரெயில் நிலையத்திற்கு வராமல் அதிக காலதாமதமாக வருவதாக இதில் பயணம் செய்வோர் தெரிவிக்கின்றனர். காலதாமதமாக ரெயில் வருவதால் குறித்த நேரத்தில் கல்லூரிக்கு செல்ல முடியாமல் மாணவ- மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதுபோல் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்தில் பணிக்கு செல்லமுடியாமல் அவதியடைந்து வருகின்றனராம். அதிக கட்டணம் செலுத்தி பஸ்சில் பயணம் செய்யமுடியாத காரணத்தினால் தான் ரெயில் பாஸ் எடுத்து மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்வோர் ரெயிலில் சென்று வருகின்றனர். இச்சூழ்நிலையில் இந்த ரெயில் மிகவும் காலதாமதமாக வருவதால் அதிக கட்டணம் கொடுத்து பஸ்சில் பயணம் செய்யவேண்டிய இக்கட்டான சூழ்நிலை அனைவருக்கும் ஏற்படக்கூடும். ஆகவே கல்லூரி மாணவ- மாணவிகள் வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரின் நலனை கருத்தில் கொண்டு இந்த பயணிகள் ரெயிலை குறித்த நேரத்தில் இயக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே ரெயில் பயணிகளின் வலியுறுத்தலாக உள்ளது. 
    ×