search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைவர்கள் ஆலோசனை"

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். #PulwamaAttack
    புதுடெல்லி:

    காஷ்மீரில் ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 மத்திய படை வீரர்கள் பலியானது ஒட்டுமொத்த இந்தியர்களை ஆவேசம் அடையச் செய்துள்ளது. 40 வீரர்களின் உயிர்த் தியாகத்துக்காக பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் எழுந்துள்ளது.

    பிரதமர் மோடி பேசுகையில், “பயங்கரவாதிகளுக்கும், அவர்களை பின்னால் இருந்து இயக்குபவர்களுக்கும் தக்க பதிலடி கொடுப்போம், நீங்கள் மிகப்பெரிய தவறு செய்து விட்டீர்கள், அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும்” என்று ஆவேசத்துடன் பேசினார்.

    பிரதமர் மோடி நேற்று மத்திய மந்திரிசபையை அவசரமாக கூட்டி ஆலோசனை நடத்தினார். இதில் காஷ்மீரில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்தும் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது பற்றியும் ஆலோசனை நடத்தினார்.

    தேசிய புலனாய்வு அமைப்பு, உளவு அமைப்பான ‘ரா’, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, தேசிய பாதுகாப்பு படை ஆகியவற்றின் உயர் அதிகாரிகளுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை நடத்தினார். இதில் காஷ்மீரில் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி முடிவு செய்யப்பட்டது.

    உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் காஷ்மீரில் இருந்து டெல்லி திரும்பியதும் பிரதமர் மோடி வீட்டில் மீண்டும் மத்திய மந்திரி சபையின் பாதுகாப்பு கமிட்டி கூட்டம் நடந்தது.

    இதில் ராஜ்நாத்சிங் கலந்துகொண்டு காஷ்மீரில் உள்ள நிலைமை தொடர்பாக விளக்கி கூறினார். அறிக்கையும் தாக்கல் செய்தார். இந்த கூட்டத்திலும் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.

    இதற்கிடையே புல்வாமா தாக்குதல் தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு நாடு முழுவதும் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.



    இந்நிலையில், டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் இன்று காலை அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. நிதி மந்திரி அருண்ஜெட்லி மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், அ.தி.மு.க., தி.மு.க. உள்பட அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் புல்வாமா தாக்குதல் தொடர்பான விவரங்களை ராஜ்நாத் சிங் எடுத்துக் கூறினார். எந்த வகையில் பதிலடி கொடுக்கலாம் என்பது குறித்து அனைத்து கட்சி தலைவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு ஆதரவு அளிப்பதாக அனைத்துக் கட்சிகளும் தெரிவித்தன.

    எனவே, பயங்கரவாதிகளுக்கும், அவர்களை இந்தியாவுக்கு எதிராக தூண்டி விடும் பாகிஸ்தானுக்கும் எந்த வகையில் பதிலடி கொடுக்கலாம் என்று மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

    கடந்த 2016-ம் ஆண்டு செம்படம்பர் மாதம் காஷ்மீரில் உரி பகுதி ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் பாகிஸ்தான் வசம் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது குண்டு வீசி துல்லியல் (சர்ஜிகல்) தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகளின் முகாம்கள் அடியோடு அழிக்கப்பட்டது. ஏராளமான பயங்கரவாதிகளும் பலியானார்கள்.

    அதுபோன்ற தாக்குதலுக்கு இந்திய விமானப்படை தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எல்லையில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் பாகிஸ்தானும் தனது எல்லையில் படைகளை உஷார்படுத்தி வருகிறது. இதனால் பாகிஸ்தானையொட்டியுள்ள காஷ்மீர் எல்லையில் பதட்டம் நிலவுகிறது.

    பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதிகளுக்கும் பதிலடி கொடுக்க வேண்டும் என்று உயிர் இழந்த வீரர்களின் குடும்பத்தினரும், நாட்டு மக்களும் தெரிவித்து வருகிறார்கள். மத்திய அரசு பதிலடி கொடுத்தால்தான் அவர்களது ஆவேசம் அடங்கும் என்பதால் ராணுவம் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தெரிகிறது. #PulwamaAttack
    ×