search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமை ஆசிரியை கொலை"

    • கணவர் தனது சம்பள பணத்தை தன்னிடம் கொடுக்காமல் ஆசிரியையிடம் கொடுத்து வந்ததால்தான் நதியா கொலை திட்டத்தை வகுத்துள்ளார்.
    • தலைமை ஆசிரியை கொலை வழக்கில் அவரது தம்பி மனைவியே முக்கிய குற்றவாளியாக சிக்கி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கான்பா நகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சிதம் (வயது 52). இவர் தென்மாபட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

    இவரது கணவர் ராஜேந்திரன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் வெளியூரில் வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி ரஞ்சிதம் தனது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் தலைமையில் போலீசார் சில்லாம்பட்டி விலக்கு பகுதியில் நேற்று வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் நெடுமரம் கிராமத்தை சேர்ந்த சூர்யா (24) என்பதும், அவர் தலைமை ஆசிரியை ரஞ்சிதத்தை கொலை செய்திருப்பதும் தெரியவந்தது.

    இதுதொடர்பாக அவரிடம் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

    கொலை செய்யப்பட்ட தலைமை ஆசிரியை ரஞ்சிதத்துக்கு பாண்டி வேல்முருகன் என்ற தம்பி உள்ளார். அவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி நதியா (31) மற்றும் அவர்களது குழந்தைகள் 3 பேர் நெடுமரத்தில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் பாண்டி வேல்முருகன் வெளிநாட்டில் சம்பாதிக்கும் பணத்தை தனது அக்காள் ரஞ்சிதத்துக்கு அனுப்பி வந்துள்ளார். அவரிடம் நதியா செலவுக்கு பணம் வாங்கி கொள்ள ஏற்பாடு செய்திருந்தார். இது நதியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே நதியாவுக்கும், நெடுமரத்தை சேர்ந்த சூர்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதனால் நதியா கள்ளக்காதலன் மூலம் ரஞ்சிதத்தை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி சூர்யாவிடம் தனது திட்டத்தை தெரிவிக்க நதியா அதற்கான ஆலோசனைகளையும் வழங்கி உள்ளார்.

    இதைத்தொடர்ந்து கடந்த 6-ந்தேதி இரவு சூர்யா தலைமை ஆசிரியை ரஞ்சிதம் வீட்டுக்கு சென்று பின்புற சுவர் ஏறி குதித்து மறைந்து இருந்துள்ளார். இரவில் ரஞ்சிதம் பாத்ரூம் செல்வதற்காக வெளியே வந்தபோது சூர்யா அவரது முகத்தையும், வாயையும் பொத்தி கீழே தள்ளி உள்ளார். இதில் அவர் மயங்கி உள்ளார்.

    இதைத்தொடர்ந்து வீட்டுக்குள் புகுந்த சூர்யா பீரோவில் வைக்கப்பட்டிருந்த 60 பவுன் நகை, ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வெளியே வந்துள்ளார்.

    அப்போது ரஞ்சிதம் முனங்கும் சத்தம் கேட்டதால் கத்தியை எடுத்து ரஞ்சிதத்தின் கை, கால் நரம்புகளை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். பின்னர் கொள்ளையடித்த நகை மற்றும் பணத்தை நதியாவிடம் சூர்யா கொடுத்துள்ளார்.

    நகை-பணத்துக்காக கொள்ளையர்கள் தலைமை ஆசிரியை ரஞ்சிதத்தை கொலை செய்துவிட்டு சென்றதுபோல் காட்டுவதற்காக நகை-பணத்தை சூர்யா எடுத்து சென்றுள்ளார்.

    இந்த நிலையில் போலீசாரின் பிடியில் சூர்யா சிக்கியதை தொடர்ந்து அவருக்கு மூளையாக செயல்பட்ட நதியாவையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 60 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த கொலை வழக்கில் போலீசார் 5 நாட்களில் குற்றவாளிகளை பிடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கணவர் தனது சம்பள பணத்தை தன்னிடம் கொடுக்காமல் ஆசிரியையிடம் கொடுத்து வந்ததால்தான் நதியா இந்த கொலை திட்டத்தை வகுத்துள்ளார். இதில் அவரது கள்ளக்காதலனை ஏவி அவரையும் கொலையாளி ஆக்கிவிட்டார்.

    தலைமை ஆசிரியை கொலை வழக்கில் அவரது தம்பி மனைவியே முக்கிய குற்றவாளியாக சிக்கி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×