search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ் எழுத்துக்கள்"

    • கண்டுபிடிக்கப்பட்டுள்ள இச்சிற்பம் பேரரசமர்வு என்னும் மகாராஜாலீலாசனத்தில் சிற்பம் உள்ளது.
    • கேரளா, இலங்கை, அந்தமான் போன்ற இடங்களிலும் அய்யனார் சிலை வழிபாடு வழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் செல்வம், கிருஷ்ணகிரி மாவட்டம், காமன் தொட்டி உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியை ஜெயலட்சுமி, ஆகியோர் தொல்லியல்துறை சார்பில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    தங்கம்மாள்புரத்தில் இருந்து வருசநாடு செல்லும் வழியில் உள்ள ஜி.ஆர்.டி. பண்ணை உச்சிப்பிள்ளையார் கோவில் இருக்கும் இடத்தில், கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவலிங்கம், பேச்சியம்மன் சிலை, அய்யனார் சிலை, தட்சிணாமூர்த்தி சிலை போன்ற பழமையான சிற்பங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.


    தலையில் ஜூவால கிரீடம், இடது கையில் ஒரு பெண்ணை பிடித்து வயிற்றைக் கீறிய நிலையிலும், வலது கையில் ஒரு குழந்தையை ஏந்திய நிலையிலும் பயமுறுத்தும் கண்கள், அகன்ற மூக்கு, நீளமான வாய், பெரிய காதுகள், பெரிய பரந்த பாதங்கள், மார்புக்கூடு எலும்புகள் தெரியும் வகையில், பார்ப்போரை பயமுறுத்தும் வகையில் பேச்சியம்மன் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேச்சு அம்மன் என்பதே பேச்சியம்மன் என்று மருவி விட்டது. கல்விக் கடவுளான சரஸ்வதியின் மறுத்தோற்றமாக கருதப்படும் இந்த அம்மனை வழிபட்டால் மாணவர்கள் தங்கள் கல்வியில் சிறப்பான இடத்தைப் பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. பேச்சி அம்மனுக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல கேரளா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய பகுதிகளிலும் பேச்சியம்மன் வழிபாடு காணப்படுகிறது.

    பொதுவாக அய்யனார் நிலை மண்டலமர்வு எனும் உத்குடி ஆசனத்தில் சிற்பம் வடிவமைப்பதுண்டு. ஆனால் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள இச்சிற்பம் பேரரசமர்வு என்னும் மகாராஜாலீலாசனத்தில் சிற்பம் உள்ளது. தலையில் விரித்த அலங்கார ஜடாபாரம், தனித்தனி இழைகளாக சுருண்டு அழகுற அமைந்துள்ளது. முத்துப்பட்டம், வட்டமான பத்திர குண்டலம், கண்டசரம், சரபள்ளி, சவடி, பூணூல், உத்தரபந்தம், கடகம், கைவளை, காப்பு, இடைக்கச்சை போன்ற அணிகலன்கள் அணிந்து அழகுற அய்யனார் அமர்ந்திருக்கிறார்.

    இவர் சிவபெருமானின் மகன் என்றும் கிராமங்களில் வசிக்கும் எளிய மக்களை காக்க வந்தவர் என்றும் நம்பப்படுகிறது. சங்க காலம் முதலே தமிழகத்தில் அய்யனார் வழிபாடு வழக்கத்தில் உள்ளது. கேரளா, இலங்கை, அந்தமான் போன்ற இடங்களிலும் அய்யனார் சிலை வழிபாடு வழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    சிவனின் அம்சமான தட்சிணாமூர்த்தி வடிவமானது இடது காலை மடக்கி வலது காலை தொங்கவிட்ட சுகாசன நிலையில் அமர்ந்துள்ளார். பூணூல் அணியப்பட்டுள்ளது. கரந்தை மகுடம், கைகளில் வளையல், கால்களில் வீரக் கழல், கால்விரல் அணிகள், அபய வரத முத்திரையுடன் பின் வலது கையில் மழு உள்ளது. இடது மேற்கையில் மான் உருவம் சிதைந்துள்ளது. சாந்த சொரூப நிலையில் சிற்பம் உள்ளது.


    "தெக்கினான்" என்றும் தென்முகக் கடவுள் என்றும் அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி, சிவனின் அம்சமாக கருதப்படுகிறார். மேற்கண்ட சிற்பங்கள் பாண்டியர் காலத்துக்கே உரிய சிற்ப நுட்பத்தோடும் உச்சபட்ச நயத்தோடும் செதுக்கப்பட்டிருக்கின்றன.

    மற்றொரு சிலையான சிவலிங்கம், பத்ம பீடம் (பிரம்மா பகுதி) அதாவது தாமரைப் பூ கவிழ்ந்த நிலை, அதற்கு மேல் ஆவுடை உள்ளது. பெருவுடையார் (லிங்கபாணம்) இல்லாமல் உள்ளது.

    கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றும் உள்ளது. அதில், மதுரை சொக்கநாதருக்கும் பார்வதி அம்மனுக்கும் நெய்விளக்கு தானமாக வழங்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட சிலைகள் மற்றும் கல்வெட்டு மூலம் இந்த இடத்தில் சிவன் கோயில் இருந்தது உறுதி செய்யப்படுகிறது. பாண்டியர் காலத்திலிருந்து நாயக்கர் காலம் வரை தொடர் வழிபாட்டில் இக்கோவில் இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது என்று கூறினர்.

    • ஆங்கிலேயர்கள் வைத்த மைல் கற்கள் இன்றும் காணக் கிடைக்கிறது.
    • ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழ் சொற்றொடரில், தமிழ் எழுத்துக்களையே பயன்படுத்தி வந்துள்ளனர்.

    திருப்பூர்,

    நம்மை அடக்கி ஆண்ட ஆங்கிலேயர்கள் கூட தங்கள் ஆட்சியின் போது தமிழுக்கும் இடம் கொடுத்து மைல் கற்கள் மற்றும் கைகாட்டி பலகைகளில் தமிழ் எண்களில் தொலைவை குறிக்க பயன்படுத்தி தமிழை காத்துள்ளனர். மேலும் தமிழில் பகுதிகளை குறிக்க கல்வெட்டுகளை தமிழில் வைத்துள்ளனர் என்பதை திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் காண முடிகிறது.

    இதற்கான சான்றாக திருப்பூர் மாவட்டம் அவிநாசி சுற்று வட்டார பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் பிற‌ பகுதிகளில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில்,ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு செல்லும் வழி குறித்தும்,அதற்கான தொலைவு பற்றியும் ஆங்கிலேயர்கள் வைத்த மைல் கற்கள் இன்றும் காணக் கிடைக்கிறது.சில இடங்களை தவிர மற்ற இடங்களில் உடைந்தும், சாலையோர குழிகளில் தூக்கி வீசப்பட்டும், கட்டுமானங்களுக்கு அடிக்கல்லாகவும் கிடப்பதை காண முடிகிறது.இவற்றில் ஊர்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும், தொலைவுகள் மைல் கணக்கில் எண்களால் குறிக்கப்பட்டும்,தமிழ் எண்களாலும் குறித்து அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த அமைப்புகள் வாயிலாக ஆங்கிலேயர்கள் தமிழ் எண்களை பயன்படுத்தி இருப்பதற்கான ஆதாரமாக திருப்பூர் அருகே 200 ஆண்டு பழமையான தமிழ் எண்களுடன் கூடிய மைல் கல் நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தமிழ் எழுத்துக்கள் மட்டுமன்றி ய,க,உ,கூ என தமிழ் எண்களும் நடைமுறையில் இருந்துள்ளன.தற்போது நடைமுறையில் உள்ள எண்களை பின்பற்ற துவங்கியதும்,தமிழ் எண்களை எழுதும் வழக்கம் குறைந்து அழிந்து,பலருக்கும் அது தெரியாத சூழலே ஏற்பட்டுள்ளது.

    ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழ் சொற்றொடரில், தமிழ் எழுத்துக்களையே பயன்படுத்தி வந்துள்ளனர். சாலைகளில் ஊரின் தொலைவை தமிழ் எண்களிலேயே குறிப்பிட்டு வந்துள்ளனர்.இது தொடர்பாக 200 ஆண்டு பழமையான மைல் கற்கள் திருப்பூர் மாவட்டம் பல்லடம், அவிநாசி,பெருமாநல்லூர்,செங்கப்பள்ளி ஆகிய பகுதிகளில் கிடைத்துள்ளது .

    இது குறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகையில்,மைல் கற்கள் வைக்கும் நடைமுறை தமிழகத்தில் கி.பி.10 ம் நூற்றாண்டில் துவங்கியது.இதில் ரோமன்,அராபிக் மற்றும் தமிழ் எண்களில் எழுதப்பட்ட மைல் கல் கிடைத்துள்ளது . இக்கல்லில்இன்றைய அரபி மற்றும் தமிழ் எண்கள் காணப்படுகின்றன.இதில் பல்லடம் 11 மைல் என்பது பல்லடம் "கக" என்றும்,பல்லடம் 4 மைல் என்பது பல்லடம் ' ச ' எனவும் எழுதப்பட்டுள்ளது.

    இதே போல் அவிநாசி காவல் நிலையம் அருகே உள்ள மைல் கல்லில் அவிநாசியில் இருந்து செங்கப்பள்ளி 11 மைல் என்பதை தமிழில் "கக" எனவும்,கருமத்தம்பட்டி 9 மைல் என்பதை "கூ" என தமிழ் எண்ணிலும் குறிப்பிட்டுள்ளனர்.இதே போல் அன்னூர் 12 மைல் என்பதை "கஉ" என பொறிக்கப் பட்டுள்ளது. மைல் கற்கள் பல்வேறு அளவுகளில் காணப்பட்டாலும்,அவை பெரும்பாலும் 70 செ.மீ உயரம்,50 செ.மீ. , அகலம் கொண்டுள்ளன.

    தற்போது கிலோ மீட்டரில் குறிக்கப்படும் அளவு,அன்று மைல் கணக்கில் நடைமுறையில் இருந்தது . ஆங்கிலேயர் கூட , தமிழ் எண்களை பயன்படுத்திய நிலையில்,தற்போது இந்நடைமுறை பின்பற்றப்படாதது வருத்தமளிக்கும் செயலாக இருந்தாலும், இது போன்ற வரலாற்றுடன் தொடர்புடைய ஆவணங்களை பாதுகாக்க வழியின்றி அழிந்து வருவது பெரும் துயரமானது என அவர்கள் தெரிவித்தனர்.

    ×