search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக லாரி டிரைவர்கள்"

    தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் எடுத்த நடவடிக்கையால் தற்போது ராணுவ முகாமில் பாதுகாப்பாக வசதியாக இருக்கிறோம் என்று மீட்கப்பட்ட தமிழக லாரி டிரைவர்கள் கூறினர்.
    சென்னை:

    தமிழகத்தைச் சேர்ந்த 18 லாரி டிரைவர்கள் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பணியில் சிக்கி உணவு கூட இல்லாமல் இரண்டு வாரங்களுக்கும் மேலாக தவித்துக் கொண்டிருப்பதாக வீடியோ ஒன்று வெளியானது. இதுபற்றி தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

    இதை அடுத்து அவர்களை மீட்கும் முயற்சியில் அவர் இறங்கினார். நேற்று இரவு தெலுங்கானா ஏ.டி.சி. துஷார் ஸ்ரீயிடம் காஷ்மீரில் தமிழக லாரி டிரைவர்கள் சிக்கி இருக்கும் தகவலை கூறி உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

    தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்

    அதன்பேரில் ஜம்முவில் உள்ள ராணுவ உயர் அதிகாரிகளுடன் அவர் தொடர்பு கொண்டார். இதையடுத்து உயர் அதிகாரிகள் மட்டத்தில் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் பாதுகாப்பு படையினர் லாரி டிரைவர்கள் தங்கியிருந்த பகுதிக்கு சென்றனர்.

    அங்கிருந்த தமிழகத்தை சேர்ந்த 18 டிரைவர்களையும் மீட்டு ராணுவ முகாமுக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர்களை முகாமில் தங்க வைத்து உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். இதுபற்றி ஸ்ரீநகரில் சிக்கியுள்ள டிரைவர்களில் ஒருவரான சேலம் ஆத்தூரை சேர்ந்த சுரேஷ் என்பவரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கடந்த மாதம் 12-ந் தேதி பாலக்காட்டில் இருந்து 18 லாரிகளில் கேபிள்களை ஏற்றிக்கொண்டு காஷ்மீருக்கு புறப்பட்டோம். கடந்த 20-ந் தேதி ஸ்ரீநகருக்கு சென்றடைந்தோம். அங்கு பனிப்பொழிவு மிகக் கடுமையாக உள்ளது.

    பனிக்கட்டிகளால் எல்லா பகுதிகளும் மூடிக் கிடக்கின்றன. ஸ்ரீநகரில் இருந்து லடாக் 170 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. ஆனால் பனி உறைந்து கிடப்பதால் ரோடுகள் மறைந்துவிட்டன. எங்களால் அங்கிருந்து நகர முடியவில்லை.

    பனி உறைந்து கிடக்கும் வாகனங்கள்

    கடுமையான பனியின் காரணத்தால் ஓட்டல்கள் அனைத்தையும் மூடி விட்டனர். சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்காமல் கடந்த 15 நாட்களாக தவித்தோம். தமிழ்நாட்டிலிருந்து எடுத்து வந்த உணவு பொருட்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டது.

    என்னுடன் இருக்கும் டிரைவர்கள் அனைவரும் சேலம் ஆத்தூர் திருவண்ணாமலை பகுதியை சேர்ந்தவர்கள். அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தோம். இதுபற்றி உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வீடியோ மூலம் தகவல் அனுப்பினோம்.

    இதை அறிந்து தெலுங்கானா கவர்னர் தமிழிசை எடுத்த நடவடிக்கையால் தற்போது ராணுவ முகாமில் பாதுகாப்பாக வசதியாக இருக்கிறோம். நாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு இன்னும் 6 மாதம் வரை வாகனங்கள் செல்ல முடியாது என்று ராணுவ தரப்பில் கூறினார்கள்.

    ஆனால் சரக்கை ஏற்றி அனுப்பிய முதலாளிகள் எப்படியாவது அங்குதான் கொண்டு இறக்க வேண்டும். ரோடு சரி இல்லை என்றெல்லாம் காரணம் சொல்லக் கூடாது என்கிறார்கள். தொடர்ந்து இங்குள்ள நிலவரத்தை பற்றி சொல்லி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    ×