search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக அரசியல் தலைவர்கள்"

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களை விரிவாக பார்க்கலாம். #TiruvarurByElection
    சென்னை:

    திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிற 28-ந் தேதி நடைபெற இருந்த நிலையில், இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    கஜா புயல் நிவாரணப் பணிகள் முடியாததால் திருவாரூரில் தேர்தலை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று காலை அறிவித்தது.

    இந்த அறிவிப்பு குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் கூறியதாவது:

    திருவாரூர் தேர்தலை இன்முகத்துடன் வரவேற்க தயாராக இருந்த நிலையில் ரத்தாகி விட்டது. தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏமாற்றமளிக்கிறது என்று தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

    மாவட்ட தேர்தல் அதிகாரி நடத்திய கூட்டத்தில் அனைத்துக்கட்சிகளும் தேர்தலை எதிர்த்தன. கஜா புயல் நிவாரணப் பணிகள் முடியாததால் திருவாரூரில் தேர்தலை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. பாஜக உள்நோக்கத்துடன் இடைத்தேர்தலை அணுகியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறினார்.

    திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை ரத்து செய்தது சரியான நடவடிக்கையே. எனது கணிப்பின் அடிப்படையில் திருவாரூர் தேர்தல் நடக்கலாம், நடக்காமலும் போகலாம் என்றேன். புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தற்போது தேவை நிவாரணம்தான் தேர்தல் அல்ல என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறினார்.

    முதல்வரை பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சந்தித்தபோதே தேர்தல் ரத்து முடிவாகிவிட்டது. திருவாரூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது என்று  காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.

    இதேபோல் திருவாரூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பான அறிவிப்பை விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    தேர்தல் ரத்து அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாக திருவாரூர் தொகுதியில் அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எஸ். காமராஜ்  கூறினார். இடைத்தேர்தல் திட்டமிட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

    அதிமுக, பாஜக நடவடிக்கைகளை வைத்தே தேர்தல் ரத்தாகும் என முன்கூட்டியே கணிக்க முடிந்ததாக தி.மு.க. வேட்பாளரான பூண்டி கலைவாணன் கருத்து தெரிவித்துள்ளார்.

    மத்திய - மாநில அரசுகள் திட்டமிட்டு தேர்தலை ரத்து செய்துள்ளன என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சாகுல் அமீது கூறினார்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    மேலும் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  #TiruvarurByElection 
    பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #SomnathChatterjee
    சென்னை:

    பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:-

    தலைவர் கலைஞரின் நெருங்கிய நண்பராக இருந்த சோம்நாத் சாட்டர்ஜி பாராளு மன்ற ஜனநாயகத்தின் மாண்புகளை கட்டி காக்கும் தலைவராகவும், மக்களவையை கட்சி மனமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு நடுநிலை தவறாது நடத்தியவர். தமிழ்நாடு சட்டமன்ற பொன்விழாவில் கலைஞர் அழைப்பினை ஏற்று பங்கேற்று தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்தவர். ஜனநாயக மரபுகளை பாதுகாத்த மிகச் சிறந்த தலைவரின் மறைவு பாராளுமன்ற ஜனநாயகத்திற்கும் நாட்டிற்கும் பேரிழப்பாகும்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-

    இந்திய நாடாளுமன்றத்தில் பத்து முறை மக்களவை உறுப்பினராக இருந்து அனைவரின் பாராட்டையும் பெறும் விதத்தில் அனைத்து விவாதங்களிலும் பங்கேற்று தனது ஆணித்தரமான திறமையால் இந்திய நாடாளுமன்றத்திற்கு பெருமை சேர்த்தவர் சோம்நாத் சாட்டர்ஜி. அவரது மறைவு இந்திய நாட்டின் பொதுவாழ்வுக்கும், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

    பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ்:-

    சோம்நாத் சாட்டர்ஜி ஏராளமான சிறப்புகளுக்கு சொந்தக்காரர். புகழ்பெற்ற மனித உரிமை போராளி நிர்மல் சந்திர சாட்டர்ஜியின் புதல்வரான சோம்நாத் சாட்டர்ஜி தலைசிறந்த கல்வியாளர். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 10 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். பொது வாழ்வில் நேர்மையையும், தூய்மையையும் கடை பிடித்தவர். மக்களவைத் தலைவராக பணியாற்றிய போது அரசு மாளிகையில் தங்கியிருந்தபோது தமது சொந்த தேவைகளை சொந்த செலவில் நிறைவேற்றிக் கொண்டார். அவரது மறைவு இடதுசாரி அரசியலுக்கும், நேர்மை அரசியலுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-

    நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு மிகவும் வேதனைக்குரியது. நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் எவ்வாறு செயல்பட்டு தனக்கு வாக்களித்த மக்களுக்கும், நாட்டிற்கும் பயன்தர வேண்டும் என்பதற்கு முன் மாதிரியாக இருந்தவர். அவரது இழப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கும், மேற்கு வங்கத்திற்கும் பேரிழப்பு. அது மட்டுமல்ல அவரது இழப்பு இந்திய நாட்டிற்கே பேரிழப்பு.

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளர் டி.டி. வி.தினகரன்:-

    மூத்த கம்யூனிஸ்டு தலைவரும், முன்னாள் லோக்சபா சபாநாயகருமான சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு செய்தி கேட்டு வருத்தமுற்றேன். பத்துமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், மிகச் சிறந்த பண்பாளராகவும் திகழ்ந்த சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

    சோம்நாத் சாட்டர்ஜி நாட்டில் உள்ள ஏழைகள், பிற்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியோர் நலனுக்காக ஓயாமல் குரல் கொடுத்தவர். இந்திய அரசியலில் அனைவருக்கும் மிகச் சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்தவர். இவரது இழப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #SomnathChatterjee
    காவிரி விவகாரத்தில் தமிழக அரசியல் தலைவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என திருப்பதி ஏழுமலையானிடம் வேண்டியதாக குமாரசாமி தெரிவித்தார். #CauveryIssue #Kumaraswamy
    திருமலை:

    கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி மற்றும் முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று மாலை வந்தனர். அவர்களை, தேவஸ்தான அதிகாரிகள் மலர்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

    சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு ஏழுமலையானை முதல்வர் குமாரசாமியும், தேவேகவுடாவும் தரிசனம் செய்துவிட்டு கொடி மரத்தை தொட்டு வணங்கினர். இரவு விடுதியில் தங்கி ஓய்வெடுத்தனர்.

    இன்று காலை சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை மீண்டும் தரிசனம் செய்தனர். பிறகு, கோவில் வளாகத்தில் முதல்வர் குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


    காவிரி விவகாரத்தில் சட்டத்தின் மூலமாகவோ, நீதிமன்றத்தின் மூலமாகவோ தீர்வு காண முடியாது. தமிழக அரசியல் தலைவர்கள், காவிரி பிரச்சனையில் சுமூக தீர்வுகாண முன்வர வேண்டும்.

    இந்த வி‌ஷயத்தில் தமிழக அரசியல் கட்சி தலைவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என்று ஏழுமலையானிடம் வேண்டினேன்.

    மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழக மக்களுக்கு தான் நன்மை ஏற்படும். இதன் மூலம் காவிரி நீர் கடலில் வீணாகுவதை தடுக்க முடியும். மேலாண்மை வாரியம், அரசியல் சாசனம் மூலம் காவிரி பிரச்சனைக்கு தீர்வுகாண முடியாது.

    காவிரி பிரச்சனையில் இயற்கை ஒத்துழைக்காவிட்டால் பிரச்சனைதான் ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக அரசியல் வாதிகளுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என்று குமாரசாமி பேசியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   #CauveryIssue #Kumaraswamy
    ×