search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனோவா"

    பாலகோட் தாக்குதலின்போது ரபேல் விமானங்கள் இருந்திருந்தால் முடிவு இன்னும் நமக்கு சாதகமாக அமைந்து இருக்கும் என்று விமானப்படை தளபதி தனோவா கூறினார். #RafaleFighter #Balakot #Dhanoa
    புதுடெல்லி:

    காஷ்மீர் புலவாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பிப்ரவரி 26-ந் தேதி பாகிஸ்தான் பகுதியில் உள்ள பாலகோட்டில் பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை வான் தாக்குதல் நடத்தியது.

    இந்நிலையில் டெல்லியில் இந்திய விமானப்படை சார்பில் மறைந்த மார்ஷல் அர்ஜன் சிங் நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டி ‘2040-ல் விண்வெளி சக்தி; தொழில்நுட்பத்தின் தாக்கம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாலகோட் தாக்குதலில் நம்மிடம் இருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி துல்லியமாக தாக்கக்கூடிய ஆயுதங்கள் மூலம் மிகச்சரியாக இலக்கு தாக்கப்பட்டது. மிக்-21, பைசன்ஸ் மற்றும் மிராஜ்-2000 போர் விமானங்களை நாம் மேம்படுத்துவதன் மூலம் அடுத்தடுத்த நிகழ்வுகளில் நாம் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்.



    நாம் உரிய நேரத்தில் ரபேல் போர் விமானங்களை நமது படையில் இணைத்திருந்தால் இந்த முடிவு இன்னும் நமக்கு சாதகமாக அமைந்து இருக்கும். ரபேல் மற்றும் தரையில் இருந்து விண்ணில் சென்று தாக்கும் ஏவுகணை எஸ்-400 ஆகியவற்றை நமது படையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதன்மூலம் அடுத்த 2 முதல் 4 ஆண்டுகளில் தொழில்நுட்பம் மேலும் நமக்கு சாதகமாக மாறும். இது 2002-ம் ஆண்டு நடைபெற்ற பராகராம் சம்பவத்தின்போது நடைபெற்றதைப்போல இருக்கும்.

    நமது ராணுவத்தின் அனைத்து படைகளையும் விட நம்மை தான் தொழில்நுட்பம் மிகவும் பாதிக்கிறது. தரையில் உள்ள படைகள் குறிப்பாக வீரர்களுடன் போரிடும்போது கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் கருவிகளை இயக்குகிறார்கள். ஆனால் போர் விமானத்தில் இது மிகச்சிறிய கருவிகளாக இருக்கும்.

    மோசமான வெப்பநிலை மற்றும் காற்றழுத்த நிலைமை ஆகியவற்றையும் பொருத்ததாக இது இருக்கும். தொழில்நுட்ப மாற்றத்திலும் விமானப்படையின் சக்தி மிகவும் பிரச்சினைக்குரியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியா பிரான்சிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டிருப்பதுபோல, கடந்த ஆண்டு ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகள் வாங்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஏவுகணை 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எதிரிகளின் போர் விமானம், ஏவுகணை, ஏன் ஆளில்லா குட்டி விமானங்களையும் (டிரோன்) அழிக்கும் திறன் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.  #RafaleFighter #Balakot #Dhanoa
    எதிர்க்கட்சிகளால் ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டு வரும் ரபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கு விமானப்படை தளபதி தனோவா ஆதரவு தெரிவித்து உள்ளார். #RafaleDeal #Dhanoa
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடியில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 23-ந் தேதி மோடி அரசு கையெழுத்து போட்டது. இந்த விமானங்கள் அடுத்த ஆண்டு (2019) செப்டம்பர் முதல் இந்தியாவுக்கு வழங்கப்படும்.

    இந்த ஒப்பந்தத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் விமானப்படைக்கு 126 போர் விமானங்கள் தேவைப்படும் நிலையில், வெறும் 36 விமானங்கள் மட்டுமே வாங்குவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பி இருந்தன.



    இந்த நிலையில் வெறும் 36 ரபேல் விமானங்கள் வாங்கும் ரபேல் ஒப்பந்தத்தை, விமானப்படை தளபதி தனோவா வலுவாக ஆதரித்து உள்ளார். டெல்லியில் நேற்று நடந்த விமானப்படை மறுசீரமைப்பு தொடர்பான கருத்தரங்கில் உரையாற்றும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அணுஆயுத பலம் வாய்ந்த 2 அண்டை நாடுகளிடம் இருந்து பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டு வந்த ஒரு காலத்தில், போதிய தாக்குதல் ரக விமானங்கள் இல்லாமல் இந்திய விமானப்படை தத்தளித்துக்கொண்டு இருந்தது. ஆனால் இந்த 36 ரபேல் போர் விமானங்களும், தற்போதைய சூழலில் சவால்களை எதிர்கொள்வதற்கான வலிமையை விமானப்படைக்கு வழங்கும்.

    விமானப்படைக்கு நவீன ஆயுதங்கள் தேவைப்படுவதாக எப்போதெல்லாம் அரசு கருதுகிறதோ, அப்போதெல்லாம் சர்வதேச அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் மூலம் அவரசமாக தளவாடங்களை வாங்குகிறது. கடந்த காலங்களிலும் இதுபோன்ற அவசரமான ஆயுத கொள்முதல்களை பலமுறை அரசுகள் மேற்கொண்டுள்ளன.

    சர்வதேச அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்த முறையில், வேகமாக கொள்முதல் நடைபெறுவதுடன், இந்திய விமானப்படை விரைவான செயல்பாட்டு வழிமுறையை அடையவும் முடியும்.

    ரபேல் விமானங்களை தவிர ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளும் மத்திய அரசு கொள்முதல் செய்கிறது. ரபேல் போர் விமானங்களும், எஸ்-400 ரக ஏவுகணைகளும் விமானப்படையை மேலும் வலுப்படுத்தும்.

    இவ்வாறு விமானப்படை தளபதி தனோவா கூறினார்.  #RafaleDeal #Dhanoa
    ×