search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தஞ்சை சாக்கடை கழிவுநீர்"

    தஞ்சை பூக்காரத் தெருவில் பாதாள சாக்கடை உடைந்து சாலையில் தேங்கி இருக்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பூக்காரதெரு முருகன் கோவில் அருகே செல்லும் சாலை நாஞ்சிக்கோட்டை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளது.

    இந்த பகுதியில் பள்ளிகள், கல்லூரிகள் அதிகமாக உள்ளன. மேலும் பூக்கார தெருவில் பூக்கடைகள் உள்பட பல கடைகள் உள்ளன. இந்த சாலையை தினமும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.

    பூக்கார தெரு, முருகன் கோவில் அருகே உள்ள நாஞ்சிக்கோட்டை சாலையில் பாதாள சாக்கடை உள்ளது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக இந்த பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறி கொண்டே உள்ளது. இதனால் சாலையில் சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடி துர்நாற்றம் வீசுகிறது.

    மேலும் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் பாதாள சாக்கடை உடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியாமல் அதில் விழுந்து விடுகின்றனர். அவர்களுக்கு பலத்த காயமும் ஏற்பட்டு வருகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சாலையில் உள்ள பாதாள சாக்கடை உடைப்பில் கற்களை வைத்துள்ளனர். இதையறிந்து அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் சுதாரித்து செல்கின்றனர். இந்த பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறுவதால் அந்த பகுதியில் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி பல விதமான நோய்கள் பரவுகிறது.

    இதனால் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாக்கடை உடைப்பை சரி செய்ய வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ளவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×