search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி ஆஸ்பத்திரி"

    கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரின் உடல் நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. கடவுளின் கருணையால் அவர் வாழ்ந்து வருவதாக கோவா சட்டசபை துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ தெரிவித்தார். #ManoharParrikar
    புதுடெல்லி:

    கோவா மாநிலத்தில் முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    அந்த கூட்டணியில் கோவா பார்வர்டு கட்சி, மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி மற்றும் மூன்று சுயேட்சைகள் முக்கிய அங்கம் வகித்து வருகிறார்கள்.

    கடந்த ஆண்டு முதல்-மந்திரி மனோகர் பாரிக்கருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மீள முடியாத நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து மனோகர் பாரிக்கர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பினார்.

    இடையிடையே உடல் நலக்குறைவு ஏற்பட்டபோதெல்லாம் அவர் டெல்லி, மும்பை, பனாஜியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் அவர் உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்டது. இதனால் மூக்கில் ‘டியூப்’ பொருத்தப்பட்ட நிலையில் அவர் கோவா சட்டசபைக்கு வந்து பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    இந்த நிலையில் கடந்த 31-ந்தேதி முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரின் உடல் நிலையில் மேலும் பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் டெல்லி அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.



    அங்கு அவருக்கு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. அவரை பா.ஜ.க. மூத்த தலைவர்கள் சிலர் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.

    இதற்கிடையே நேற்றிரவு முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரின் உடல் நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. அவரது உடல்நிலை சற்று மோசமாக இருப்பதாகவும், கடவுளின் கருணையால் அவர் வாழ்ந்து வருவதாகவும் கோவா சட்டசபை துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ தெரிவித்தார். இதனால் கோவா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மனோகர் பாரிக்கர் பதவி விலகினாலோ அல்லது அவருக்கு ஏதாவது ஆகி விட்டாலோ கோவாவில் அரசியல் குழப்பம் ஏற்படும் என்று துணை சபாநாயகர் லோபோ கூறியுள்ளார். மனோகர் பாரிக்கர் பதவி விலகினால் புதிய முதல்-மந்திரியாக தங்கள் கட்சியை சேர்ந்த சுதீன் தவலிக்கரை தேர்வு செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி கூறி வருகிறது. #ManoharParrikar


    டெல்லி ஆஸ்பத்திரியில் 3 பெண்களும் தங்கள் கணவன்மார்களுக்கு சிறுநீரகம் தானம் கொடுக்க முடியாத நிலையில், ஒருவர் மற்றொருவரின் கணவருக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுத்து ஒருவருக்கு ஒருவர் பலன் பெற்று உள்ளனர்.#KidneyDonate
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில், டெல்லியைச் சேர்ந்த முகமது உமர் யூசுப் (வயது 37), அஜய் சுக்லா (40) மற்றும் பீகார் மாநிலம் மதுபானியைச் சேர்ந்த கமலேஷ் மண்டல் (54) ஆகியோர் சிறுநீரக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர்.

    ஆனால் ரத்த பரிசோதனையில் அந்த மூவருக்கும் அவர்களுடைய மனைவிமார்களின் சிறுநீரகங்கள் பொருந்தாது என தெரியவந்தது. மேலும் உறவினர்களிடம் இருந்தும் அவர்களுக்கு சிறுநீரகங்கள் தானம் பெறமுடியவில்லை.

    அதேசமயம் அதிசயமாக, முகமது உமர் யூசுப்பின் மனைவி சனா காதுனின் (26) சிறுநீரகம் அஜய் சுக்லாவுக்கும், அஜய் சுக்லாவின் மனைவி மாயா சுக்லாவின் (37) சிறுநீரகம் கமலேஷ் மண்டலுக்கும், கமலேஷ் மண்டலின் மனைவி லட்சுமி சாயாவின் (40) சிறுநீரகம் முகமது உமர் யூசுப்புக்கும் பொருந்துவது தெரியவந்தது. இதுபற்றி டாக்டர்கள் அந்த பெண்கள் மூவரிடமும் கூறிய போது, அவர்கள் தங்கள் சிறுநீரகத்தை தானம் வழங்க சம்மதம் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து சிறுநீரகம் தானம் பெறும் 3 ஆண்கள், சிறுநீரகம் தானம் கொடுக்கும் 3 பெண்கள் ஆகிய 6 பேருக்கும் ஒரே நேரத்தில் ஆபரேஷன் நடந்தது. சனா காதுனின் சிறுநீரகம் ஆபரேஷன் மூலம் மாயா சுக்லாவின் கணவர் அஜய் சுக்லாவுக்கு பொருத்தப்பட்டது. இதேபோல் மாயா சுக்லாவின் சிறுநீரகம் லட்சுமி சாயாவின் கணவல் கமலேஷ் மண்டலுக்கும், லட்சுமி சாயாவின் சிறுநீரகம் சனா காதுனின் கணவர் முகமது உமர் யூசுப்புக்கும் பொருத்தப்பட்டது. 14 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக அமைந்தது.

    3 பெண்களும் தங்கள் கணவன்மார்களுக்கு சிறுநீரகம் தானம் கொடுக்க முடியாத நிலையில், ஒருவர் மற்றொருவரின் கணவருக்கு தங்கள் சிறுநீரகத்தை தானமாக கொடுத்து ஒருவருக்கு ஒருவர் பலன் பெற்று உள்ளனர்.

    ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாத இன்று 3 தம்பதியினரும் சிறுநீரக தானத்தின் மூலம் நண்பர்களாகி விட்டனர். இந்த மூன்று சிறுநீரக மாற்று ஆபரேஷன்களும் அபூர்வ நிகழ்வு என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.  #tamilnews  #KidneyDonate
    ×