search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜவுளி உற்பத்தி தொழில்"

    • மின் கட்டண உயர்வு, ஜவுளி உற்பத்தித் தொழிலை மிகப் பெரிய அளவில் பாதிப்படையச் செய்துள்ளது.
    • அபரிமிதமான நூல் விலை ஏற்றத்தால், ஆர்டர்கள் வருவதில்லை.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் தென்னிந்திய நாடா இல்லா தறி நெசவாளர்கள் சங்க (சிஸ்வா) ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். இதில் சங்க செயலாளர்கள் கோகுல்குமார், ரவிச்சந்திரன், பொருளாளர் கோவிந்தராஜ், துணைத்தலைவர் தங்கவேல், சங்க ஆலோசகர் வெங்கடாசலம் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சங்க தலைவர் வெங்கடேசன் கூறியதாவது :- தமிழ்நாடு மின்சார வாரியம் நடைமுறைப்படுத்தியுள்ள மின் கட்டண உயர்வு, ஜவுளி உற்பத்தித் தொழிலை மிகப் பெரிய அளவில் பாதிப்படையச் செய்துள்ளது. கொரோனா தொற்று, நூல் விலையேற்றம், உலகப் பொருளாதார மந்தநிலை போன்றவற்றால் ஏற்கனவே,கடும் நஷ்டத்தில் தொழில் புரிந்து வருகிறோம். இந்த நிலையில் மின் கட்டண உயர்வை மாற்றி அமைக்க வேண்டும் என மின்துறை அமைச்சரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

    அரசு அறிவித்த உச்சகட்ட மின் கட்டண குறைப்பு அறிவிப்பு, எந்த விதத்திலும் பாதிப்பை ஈடு செய்யாது. சிறு, குறு தொழில்களின் கீழ் உள்ள நாடா இல்லா தறிகளுக்கு தனியாக மின்கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்.ஜவுளி அமைச்சகத்தின் கீழ் தனி குழு அமைத்து எங்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்ய வேண்டும். ஜவுளி உற்பத்தி துறை கடந்த ஓராண்டாக வலுவிழந்ததுடன், அபரிமிதமான நூல் விலை ஏற்றத்தால், ஆர்டர்கள் வருவதில்லை.

    தொழில் நிறுவனங்கள் 30 சதவீதம் இயங்காத நிலையில், ரிசர்வ் வங்கியின் 2 சதவீத வட்டி உயர்வு மிகப் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. தொழில்துறையினர் வங்கிக்கு செலுத்த வேண்டிய தவணையை ஓராண்டு தள்ளி வைக்க வேண்டும். சோலார் வாயிலாக மின் உற்பத்தி செய்ய கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும்.மின் கட்டணத்தை குறைக்காவிட்டால் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பை கூட்டத்தை கூட்டி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×