search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை மாநகராட்சி கல்வி அதிகாரி"

    மாணவர்களை சாதி வாரியாக பிரிக்கக்கூடாது. வருகை பதிவேட்டில் அகரவரிசைப்படி பெயர்களை பதிவு செய்து மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    சென்னை எம்.ஜி.ஆர். நகரில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    நேற்று முன்தினம் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறுவதால் மாணவர்களை சாதி வாரியாக பிரித்து பள்ளிக்கு அழைத்ததாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் பெற்றோர்களிடையே பூதாகரமாக வெடித்தது. மாணவர்களை சாதி அடிப்படையில் பிரித்து எப்படி பள்ளிக்கு அழைக்கலாம் என்ற பிரச்சினை எழுந்தது.

    இது தொடர்பாக மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதில் மாணவர்களை சாதி வாரியாக பள்ளிக்கு அழைத்த வருகை பதிவேடு இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளியின் தலைமை ஆசிரியை வைலட் மேரி அருகில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

    இடமாற்றம்

    பிரச்சினைக்குரிய பள்ளிக்கு ரமா என்ற தலைமை ஆசிரியை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மாநகராட்சி கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மாணவர்களை சாதி வாரியாக பிரிக்கக்கூடாது. வருகை பதிவேட்டில் அகரவரிசைப்படி பெயர்களை பதிவு செய்து மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க வேண்டும். தற்போது அகர வரிசையில் மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்படுகிறார்கள்.

    மேலும் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுதவிர அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.

    மாணவர்களை அகர வரிசையில்தான் பள்ளிக்கு அழைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்...கிளாஸ்கோவில் நடந்த பருவநிலை மாற்ற மாநாட்டில் பேசிய தமிழக மாணவி

    ×