search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுயஉதவிக்குழுவினர்"

    • பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் திட்டத்தில் தொழில் தொடங்க சுயஉதவிக்குழுவினர், கூட்டுறவு சங்கங்கள் விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தொழில் வளம் பெருகு வதற்காக தமிழ்நாடு அரசு மானியத்துடன் கூடிய கடனுதவித் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் ஒன்று,மத்திய அரசின் 60சதவீத நிதிப்பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் 'பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டம் (PMFME)" ஆகும்.

    இந்த திட்டத்தின் கீழ் பழச்சாறு, பழக்கூழ் தயாரித்தல், மீன் மற்றும் இறால் கொண்டு செய்யப்படும் ஊறுகாய், அரிசி ஆலை, இட்லி, தோசைக்கான மாவு தயாரித்தல், மரச்செக்கு எண்ணெய், பேக்கரி பொருட்கள், இனிப்பு மற்றும் கார வகை தின்பண்டங்கள் தயாரித்தல், செட்டிநாட்டு பலகாரங்கள் தயாரித்தல் மற்றும் சாம்பார் பொடி,இட்லிப்பொடி போன்ற மசால்வகை பொடிகள் தயாரித்தல், காப்பிக் கொட்டை அரைத்தல், பால் பொருட்கள் தயாரித்தல், இறைச்சி வகைகள் பதப்படுத்தல் போன்ற தொழில்களைத் தொடங்கவும், குறுந்தொழில் நிறுவனங்கள் விரிவாக்கம், தொழில்நுட்ப மேம்படுத்தல், தொழில்நுட்ப ஆலோசனைகள்,திறன் மேம்பாட்டுப் பயிற்சி,திட்ட அறிக்கை தயாரிக்கவும் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.

    தொழில் நடத்த தேவையான உரிமங்கள், தரச்சான்றிதழ்கள் பெறவும் சந்தைப்படுத்தலை மேம்படுத்தத் தேவையான உதவிகளும் வழங்கப்படுகின்றன.

    இந்த திட்டத்தின் கீழ் புதிதாகத் தொழில் தொடங்குவோர், ஏற்கனவே உணவுப்பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டு ள்ளோர் மற்றும் சுயஉதவிக்குழுவினர், கூட்டுறவு சங்கங்கள் ஆகியோர் பயன்பெறலாம்.

    ரூ.1 கோடி வரையிலான உணவுப் பதப்படுத்தும் தொழில் திட்டங்கள் இந்த திட்டத்தின் கீழ் உதவி பெறத்தகுதி பெற்றவை ஆகும். திட்டத் தொகையில் 10சதவீதம் முதலீட்டாளர் பங்காகவும், 90 சதவீதம் வங்கிகளால் பிணையமில்லாக் கடனாகவும் வழங்கப்படும்.

    அரசு 35சதவீதம் மானியம், அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை வழங்கும். சுய உதவிக்குழுவினர் உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.40 ஆயிரம் வீதம் தொடக்க நிலை மூலதனமாக வழங்கப்படும்.

    தனியான தொழில் திட்ட ங்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி மட்டு மன்றி, தொகுப்புக் குழுமங்க ளுக்குத் தேவையான பொதுக் கட்டமைப்பு வசதிகள், பொது வசதியாக்க மையங்கள் ஏற்படுத்த திட்டத் தொகையில் 35 சதவீதம் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும்.

    தற்பொழுது இந்த திட்டம் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மாவட்டத் தொழில் மையங்கள் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. உணவுப்பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்களை நிறுவவும், விரிவாக்கம் மற்றும் தொழில்நுட்ப மேம்படுத்தல் மேற்கொள்ள pmfme. mofpi. gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    இத்திட்டம் பற்றிய கூடுதல் விவரங்கள் பெற மாவட்ட தொழில் மையம்,மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,சிவகங்கை என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 04575-240257, 8925533989 என்ற தொலைபேசி வழியாகவோ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பரமத்தி வேலூரில் ரூ.48 லட்சம் மோசடி, வங்கி ஊழியர்களை கண்டித்து சுயஉதவிக்குழுவினர் முற்றுகையிட்டனர்.
    • இந்த போராட்டத்தால் வங்கி முன்பு சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வேலூரில் இந்தியன் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி கிளையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழுவினர் தொழில் தொடங்க கடன் பெற்றுள்ளனர். கடனை மாதந்தோறும் மகளிர் சுய உதவிக் குழுவினர் செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா காலத்தில் வங்கி மூலமாக சுய உதவிக் குழுவினரிடம் பணம் வசூல் செய்வதற்காக தற்காலிக வணிக தொடர்பாளராக சரண்யா, ஹோமா ஆகிய இரு பெண்கள் நியமிக்கப்பட்டு சுய உதவிக் குழுவினரிடம் மாதமாதம் பணத்தை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

    வசூல் செய்த பணத்தை வங்கியில் செலுத்தாமல் இருவரும் 4 மாதத்தில் ரூ.48 லட்சம் மோசடி செய்ததை அறிந்த மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த பெண்கள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வங்கி மேலாளர் அழகரசனிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் அழகரசன் இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்வதாக கூறி காலதாழ்த்தி வந்துள்ளார். வங்கி கிளை மேலாளர் அழகரசன் பணிமாறுதல் சென்றதை அறிந்த பாதிக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவை பெண்கள் இந்தியன் வங்கி முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த வேலூர் காவல் ஆய்வாளர் வீரம்மாள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பின்னர் வங்கியில் உள்ள உதவி மேலாளர் சுப்பிரமணியத்திடம் மனு கொடுத்தனர்.

    மனுவில், மோசடி செய்த சரண்யா, ஹோமா மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் வங்கி மேலாளர் அழகரசன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

    புகார் மனுவை பெற்ற சுப்பிரமணியம் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு மனுவை அனுப்பி விசாரணை நடத்த கூறியதையடுத்து பெண்கள் கலைந்துசென்றனர். இந்த போராட்டத்தால் வங்கி முன்பு சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

    ×