search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு"

    கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறிவிட்டது. #KudankulamPlant #SupremeCourt
    புதுடெல்லி:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையம் செயல்படுவதற்கு கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் அனுமதி வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, அணுமின் நிலையம் பாதுகாப்பாக இயங்குவது தொடர்பாக, 17 விதிமுறைகள் அடங்கிய பரிந்துரையை வழங்கியது. அதில் முக்கிய நிபந்தனை, அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே பாதுகாப்பாக வைப்பதற்கான வசதிகள் கொண்ட கட்டமைப்பை அணுமின் நிலையம் 5 ஆண்டுகளில் உருவாக்க வேண்டும் என்பதாகும்.



    இந்த 5 ஆண்டு கால அவகாசம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், மேலும் 5 ஆண்டு கால அவகாச நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று கோரி இந்திய அணுமின்சக்தி கழகம் கடந்த பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த வசதியை கட்டமைப்பதற்கான தொழில் நுட்பம் முழுவதும் கைவராத நிலையில் அதனை அமைப்பதில் சிக்கல்களை சந்தித்து வருவதாகவும் அதனால் மேலும் 5 ஆண்டுகள் அவகாசம் தேவை என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதற்கிடையே, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில் அணுக்கழிவுகளை உலைக்கு உள்ளேயே சேகரித்து வைப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் போதிய வசதிகளை கட்டி முடிக்கும் வரை கூடங்குளத்தில் உள்ள 2 உலைகளில் இருந்து மேலும் கழிவுகள் உண்டாகாமல் இருக்கும் வகையில், இந்திய அணுமின்சக்தி கழகத்தின் கோரிக்கையை நிராகரித்து பாதுகாப்பு வசதியை ஏற்படுத்தி முடிக்கும் வரை இரு அணுஉலைகளிலும் மின் உற்பத்தியை நிறுத்தி வைத்து அணுமின் நிலையத்தை மூட உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அணுமின் நிலையத்தை மூட உத்தரவிடவேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

    இந்த வழக்கில், கூடங்குளம் அணு உலையில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாளும் வகையில் என்னென்ன நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறித்த நிலைத்தகவல் அறிக்கையை ஏற்கனவே இந்திய அணுமின்சக்தி கழகம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து இருந்தது. அந்த நிலைத்தகவலை ஏற்றுக்கொள்வதாக அறிவித்த நீதிபதிகள், அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே பாதுகாப்பாக வைப்பதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த மத்திய அரசுக்கு வருகிற 2022-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.

    மேலும் அதுவரை கூடங்குளம் அணு உலை இயங்குவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும், அணு உலையின் பாதுகாப்பு குறித்தும் விளக்கி தனியாக ஒரு மனுவை மனுதாரர் விரும்பினால் தாக்கல் செய்யலாம் என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷணிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.  #KudankulamPlant #SupremeCourt #Tamilnews

    ×