search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு"

    சுப்ரீம் கோர்ட் உத்தரவின் எதிரொலியாக, தீபாவளி அன்று கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. #Diwali #Crackers #TNGovt #SC
    சென்னை:

    தீபாவளி பண்டிகை நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இரவு 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து, பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என்று கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கூடுதல் நேரம் ஒதுக்க மறுத்துவிட்டது. 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டது.

    என்றாலும் பட்டாசு வெடிக்கும் 2 மணி நேரம் எது என்பதை தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியது.

    அதன்படி, தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு நேரம் நிர்ணயித்தது.

    இந்த உத்தரவை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பக்கூடிய சரவெடி போன்ற பட்டாசுகள் வெடிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இதேபோல் பட்டாசு கடைகளில் அதிக புகை வரக்கூடிய மற்றும் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

    பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் பட்டாசு வெடிப்பதை கண்காணிக்கவும், பட்டாசு கடைகளில் பட்டாசு விற்பனை செய்வதை கண்காணிப்பது தொடர்பாகவும் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்த உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது.



    அந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதையும், கடைகளில் பட்டாசுகள் விற்பனை செய்வதையும் கண்காணிக்க தனி போலீஸ் படைகள் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டு இருக்கிறது. அந்தந்த மாவட்டங்களில் இதுதொடர்பாக கண்காணிப்பு தனிப்படைகள் அமைக்க அறிவுரை வழங்கப்பட்டது.

    இதன்பேரில் தமிழகம் முழுவதும் சுமார் 500 கண்காணிப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கோர்ட்டு உத்தரவை மீறி, பட்டாசு வெடித்தால் அது கோர்ட்டு அவமதிப்பு செயல் ஆகும்.

    இதற்கு இந்திய தண்டனை சட்டம் 188-வது பிரிவின் கீழ் 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க வழிவகை உள்ளது.

    எனவே பொதுமக்களும், பட்டாசு வியாபாரிகளும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறாமல் நடந்துகொள்ள வேண்டும் என்று அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

    சென்னையை பொறுத்தமட்டில், நிலைமை உன்னிப்பாக கவனிக்கப்படும் என்றும், கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசுகள் வெடிக்கும் பட்சத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    வழக்கமாக தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பாகவே சென்னை மாநகரம் பட்டாசு வெடியால் கோலாகலமாக காணப்படும். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதில் அதிக ஆர்வம் இல்லாமல் உள்ளனர். #Diwali #Crackers #TNGovt #SC
    திருமணம் ஆன ஆண்-பெண் கள்ள உறவு பற்றிய வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது. #AdulteryLaw #SupremeCourt
    புதுடெல்லி:

    இத்தாலியில் வசிக்கும் இந்தியரான ஜோசப் ஷைன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் திருமணம் ஆன ஆண்-பெண் இடையேயான கள்ள உறவில் ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக்க வகை செய்யும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 497-வது பிரிவு குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் இந்த சட்டப்பிரிவை செல்லாது என்று அறிவிக்கவேண்டும் என்றும் அவர் அதில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வந்தது.

    நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் தனது வாதத்தில், “திருமணம் ஆன ஆண்-பெண் இடையேயான கள்ள உறவு திருமண பந்தத்தின் புனிதத்தை அழித்துவிடும் என்பதை மனதில் கொண்டு இந்த தண்டனைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதுபோன்ற கள்ள உறவு திருமணத்தின் புனிதத்துக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது. வெளிநாட்டு கலாசாரத்துடன் இதை தொடர்புபடுத்துவது சரி அல்ல. இது இந்திய சமூக சூழ்நிலையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. எனவே இந்த தண்டனை சட்டம் தொடரவேண்டும்” என்று வாதிட்டார்.

    அப்போது நீதிபதிகள் அமர்வு, பெண்ணின் கணவரின் சம்மதத்துடன் இதுபோன்ற உறவு நடந்து அது கள்ள உறவு இல்லை என கூறப்படும் என்றால் திருமணத்தின் புனிதம் என்னவாகும்? இது பொதுவில் நல்லதுதானா? என்று கருத்து தெரிவித்தது.

    இந்த வழக்கில் நேற்றுடன் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்தன. இதைத்தொடர்ந்து வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.  #AdulteryLaw #SupremeCourt  #tamilnews 
    நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் உள்ள கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள பகுதியில் யானைகளின் வழித்தடத்தில் நில ஆக்கிரமிப்பு செய்து ஓய்வு இல்லங்கள் (ரிசார்ட்) மற்றும் ஓட்டல்கள் கட்டுவதற்கு தடை விதிக்குமாறு கோரி சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.



    இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, முன்பு யானை வழித்தடம் என வரையறுக்கப்பட்ட பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விவசாயிகள், ஓய்வு இல்லங்களின் உரிமையாளர்கள், குடியிருப்புவாசிகள் காலி செய்து, நீலகிரி மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த 2011-ம் ஆண்டு உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்ட ஓய்வு இல்லங்களின் உரிமையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது வக்கீல் யானை ராஜேந்திரன் நேரில் ஆஜராகி வாதாடினார்.

    அவர் வாதாடுகையில் கூறியதாவது:-

    சென்னை ஐகோர்ட்டு 2011-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்த போது நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் 136 ஓய்வு இல்லங்கள் மட்டுமே இருந்தன.

    ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட பிறகு, இதுவரை 430-க்கும் மேற்பட்ட ஓய்வு இல்லங்களும், ஓட்டல்களும் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக கட்டப்பட்டு உள்ளன. இந்த கட்டிடங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் மற்றும் தண்ணீரை உடனடியாக துண்டிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்

    இதைத்தொடர்ந்து நீதிபதிகள், நீலகிரி மாவட்டத்தில் யானைகளின் வழித்தடங்களில் எத்தனை கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன? அவற்றின் தன்மை மற்றும் அவற்றால் யானைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பது குறித்து மாவட்ட கலெக்டர் 4 வாரங்களுக்குள் எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    ஐகோர்ட்டு உத்தரவுக்கு முன்பு கட்டப்பட்டவை எத்தனை? அதற்கு பிறகு கட்டப்பட்ட கட்டிடங்கள் எத்தனை? அவற்றில் ஓட்டல் மற்றும் ஓய்வு இல்லங்கள் மற்றும் குடியிருப்புகள் எத்தனை? இந்த கட்டிடங்களுக்கான அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்பது பற்றிய விவரங்களும் அந்த அறிக்கையில் இடம் பெற வேண்டும் என்று அப்போது நீதிபதிகள் கூறினார்கள்.

    அத்துடன், யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து ஏதேனும் கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்தால் அவை இடிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினார்கள். 
    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் அவரது சகோதரி பர்யால் தல்புர் ஆகியோர் வெளிநாடு செல்ல தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Pakistan #AsifAliZardari
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் யுனைடெட் வங்கி மற்றும் சம்மிட் வங்கிகளில் 29 போலி கணக்குகளை தொடங்கி நிதி மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது. இதில் பாகிஸ்தானின் முன்னாள் அதிபரும், பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைத்தலைவருமான ஆசிப் அலி சர்தாரி, அவரது சகோதரி பர்யால் தல்புர் ஆகியோர் உள்பட 20 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இந்த மோசடி தொடர்பாக சம்மிட் வங்கி தலைவரும், சர்தாரியின் கூட்டாளியுமான உசேன் லவாய் கடந்த 6-ந் தேதி கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் அங்கு பூதாகரமாக வெடித்து உள்ளது. இந்த பிரச்சினையில் தலையிட்டுள்ள சுப்ரீம் கோர்ட்டு, 20 பேரையும் 12-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது.

    முன்னதாக இந்த வழக்கில் சிக்கியுள்ள 20 பேரும் பாகிஸ்தானை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது. இதன்மூலம் சர்தாரி மற்றும் அவரது சகோதரி பர்யால் தல்புர் ஆகியோர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் கணவரான ஆசிப் அலி சர்தாரி, கடந்த 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்தவர் ஆவார். #Pakistan #AsifAliZardari #tamilnews 
    ×