search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீனிவாச பிரசாத்"

    ராஜீவ் காந்தி பற்றிய மோடியின் பேச்சுக்கு கர்நாடக பா.ஜனதா தலைவர்களில் ஒருவரும், சாம்ராஜ நகர் தொகுதி வேட்பாளருமான சீனிவாச பிரசாத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். #Rajivgandhi #PMModi
    பெங்களூர்:

    பிரதமர் மோடி உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தந்தையுமான ராஜீவ்காந்தியை விமர்சனம் செய்தார்.

    மோடி பேசும்போது, “உங்கள் தந்தை (ராஜீவ்காந்தி), அவரது விசுவாசிகளால் கறைபடியாதவர் என்று புகழப்பட்டார். ஆனால் அவரது வாழக்கை இறுதியில் ஊழல்வாதி என்றே முடிந்தது” என்றார்.

    மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், “மோடியின் போர் முடிந்து விட்டது. உங்கள் கர்மா உங்களுக்காக காத்திருக்கிறது. என் தந்தை மீதான உங்களது உள் நம்பிக்கைகளை பரவுவது உங்களை பாதுகாக்காது” என்று பதிலடி கொடுத்தார்.

    இந்த நிலையில் ராஜீவ் காந்தி பற்றிய மோடியின் பேச்சுக்கு கர்நாடக பா.ஜனதா தலைவர்களில் ஒருவரும், சாம்ராஜ நகர் தொகுதி வேட்பாளருமான சீனிவாச பிரசாத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    சீனிவாச பிரசாத் முதலில் காங்கிரஸ், ஜே.டி.எஸ். கட்சிகளில் இருந்தார். 2016-ம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

    வாஜ்பாய் அமைச்சரவையில் மந்திரியாகவும் இருந்தார். அவர் கூறியதாவது:-

    ராஜீவ்காந்தியை எனக்கு நன்றாக தெரியும். அவர் எப்போதுமே ஊழலில் ஈடுபட்டது கிடையாது. மோடி மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ஆனால் அவர் ராஜீவ்காந்தியை ஊழல்வாதி என்று கூறியதை ஏற்று கொள்ள முடியாது.

    போபர்ஸ் வழக்கில் ராஜீவ்காந்தி மீதான லஞ்ச குற்றச்சாட்டை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. மோடியின் குற்றச்சாட்டு பொருத்தமானதல்ல. ராஜீவ்காந்தியுடன் நான் அருகில் இருந்து பழகியவன். மோடி குற்றச்சாட்டை நாட்டில் உள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ராஜீவ்காந்தி பற்றி மோடி இப்படி பேசியிருக்க கூடாது. அதற்கான அவசியமும் இல்லை.

    ராஜீவ்காந்தி சிறிய வயதிலேயே மிகப்பெரிய பொறுப்புகளை ஏற்றார். அவரை குறித்து வாஜ்பாய் போன்ற அரசியல் தலைவர்கள் நல்ல கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அவர் உயிரிழக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜனதா வேட்பாளரான சீனிவாச பிரசாத்தை ஆதரித்து கடந்த ஏப்ரல் 9-ந் தேதி மோடி பிரசாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Rajivgandhi #PMModi
    ×