search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு சட்டமன்ற கூட்டம்"

    கேரளாவில் மழை பாதிப்புகள் குறித்து விவாதிப்பதற்காக வரும் 30-ம் தேதி சிறப்பு சட்டமன்றக் கூட்டம் நடத்துவது தொடர்பாக ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. #KeralaFloods #KeralaSpecialAssembly
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வந்த நிலையில், கடந்த 8-ந் தேதி முதல் 18-ந்தேதி வரை பேய் மழை பெய்தது. 11 நாட்கள் இடைவிடாது பெய்த மழையால் கேரளாவின் 14 மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கியது. இயற்கை சீற்றத்தில் சிக்கிய மக்களை மீட்க ராணுவமும், தேசிய பேரிடர் மீட்பு குழுவும், சமூக ஆர்வலர்களும் களம் இறங்கினர்.

    இவர்கள் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு முகாம்களில் சேர்த்து வருகிறார்கள். இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.

    கேரளாவில் பேய் மழையும், நிலச்சரிவும் ஏற்பட்டு ஏராளமான பயிர் நிலங்கள் சேதம் ஆனது. சாலைகள், பாலங்கள், ரெயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மாநில அரசு எடுத்த முதற்கட்ட கணக்கீட்டில் மழை சேதம் ரூ.20 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

    மழையால் இதுவரை 368 பேர் பலியாகி விட்டதாகவும் மாநில அரசு தெரிவித்தது. இன்னும் மண்ணுக்குள் புதைந்தவர்கள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு கண்டு பிடிக்கப்படாதவர்கள் எண்ணிக்கையையும் சேர்த்தால் இறந்தோர் எண்ணிக்கை இன்னும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

    எனவே கேரளாவை தேசிய பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கேரள அரசு கோரியது. இதை ஏற்ற மத்திய அரசு தற்போது கேரளாவை அதிதீவிர இயற்கை பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவித்துள்ளது.

    இதன் மூலம் கேரளாவுக்கு கூடுதல் நிவாரண உதவிகள் கிடைக்கும். தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்தும் பணம் ஒதுக்கீடு செய்யப்படும். தேசிய சாலைகள், ரெயில் பாதைகள், பாலங்கள் செப்பனிடும் பணியிலும் மத்திய அரசு உதவி செய்யும்.

    மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து திருவனந்தபுரத்தில் இன்று முதல்-மந்திரி பினராய் விஜயன் தலைமையில் மந்திரி சபை அவசர கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் மழை நிவாரணப் பணிகள் மற்றும் மத்திய அரசிடம் கூடுதலாக நிவாரண நிதி கேட்பது, சுகாதார திட்டங்களை நிறைவேற்ற உதவி கோருவது, சாலைகளை செப்பனிடுவது குறித்த திட்டங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.



    இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன், கேரளாவில் மழை பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக ஆகஸ்ட் 30-ம் தேதி சிறப்பு சட்டசபை கூட்டத்தை நடத்த அமைச்சரவையில் முடிவு செய்திருப்பதாக கூறினார். மேலும், சிறப்பு சட்டசபை கூட்டம் தொடர்பாக ஆளுநருக்கு பரிந்துரை செய்திருப்பதாகவும் கூறினார்.

    ஆளுநர் ஒப்புதல் அளித்ததும் சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரணப் பணிகள், மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, இன்று மாலை திருவனந்தபுரத்தில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் மந்திரி சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அனைத்து கட்சி தலைவர்களும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் கேரளாவில் நிறைவேற்றப்பட வேண்டிய உடனடி நிவாரண பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. #KeralaFloods #KeralaSpecialAssembly
    ×