search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிரியா அரசு படைகள்"

    சிரியாவில் கிளர்ச்சிப் படைகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் அரசுப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் பொதுமக்கள் தரப்பில் 21 பேர் உயிரிழந்தனர்.
    டமாஸ்கஸ்:

    சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆதரவு அரசுப் படைகளுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 7 வருடங்களாக அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சி படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்ய படைகள் வான் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.

    கிளர்ச்சி படைகள் வசம் உள்ள பெரும்பாலான பகுதிகளை அரசுப் படைகள் கைப்பற்றி உள்ள நிலையில், வடமேற்கு பகுதியில் உள்ள இட்லிப் மாகாணத்தில் உள்ள சில நகரங்கள் இன்னும் மீட்கப்படவில்லை. இதற்காக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கிளர்ச்சி படை ஆதிக்கம் உள்ள இட்லிப் மாகாணத்தின் பல்வேறு நகரங்கள் மற்றும் அலெப்போ புறநகர்ப்பகுதிகளில் அரசுப் படைகள் நேற்று இடைவிடாமல் வான்தாக்குதல் நடத்தின. பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மீது விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டதில் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன.

    இந்த உக்கிரமான தாக்குதலில் 9 குழந்தைகள் உள்பட 21 பேர் உயிரிழந்திருப்பதாக, மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மேலும் பலர் காயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

    கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும், அரசுப் படைகள் மற்றும் ரஷிய படைகள் நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் தரப்பில் 229 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சிரியாவில் நடக்கும்  கொடூரமான தாக்குதல் மற்றும் பேரழிவை தடுத்து நிறுத்த வலிமை வாய்ந்த நாடுகள் எதுவும் செய்யவில்லை என ஐநா சபை கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×