search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிசு மரணங்கள்"

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிசு மரணங்களை டாக்டர்கள் தடுத்திட வேண்டும் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் அறிவுறுத்தல்
    • மார்ச் 2022 முதல் மே 2022 வரை உள்ள மாதங்களில் நடைபெற்ற 17 சிசு மரணம் மற்றும் 1 மகப்பேறு மரணம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி :

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சிசு மரணம்மற்றும் மகப்பேறு மரணம் தடுப்பது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பொது மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் பிரசவங்கள் நடைபெறுகிறது. அவ்வாறு மார்ச் 2022 முதல் மே 2022 வரை உள்ள மாதங்களில் நடைபெற்ற 17 சிசு மரணம் மற்றும் 1 மகப்பேறு மரணம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.சிசு மரணம் நடைபெற்ற சம்மந்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் சிசு மரணம் குறித்து ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்தனர். இவ்வாய்வறிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இனிவரும் காலங்களில் பிரசவத்தின்போது சிசு மரணம் ஏற்படாதவாறு மருத்துவர்கள் தேவையான அனைத்து மருத்துவ உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி கவனமுடன் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் சிசு மரணம் தடுத்திட பச்சிளம் குழந்தைகளுக்கு கிருமி தொற்று ஏற்படாதவாறு தொடர் கண்காணிப்புகளை மருத்துவர்கள் மற்றும் தாய்மார்கள் மேற்கொள்ள வேண்டும்.மகப்பேறு மருத்துவம் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகளில் தரமாகவும், சிறப்பாகவும், இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் பொதுமக்கள் மகப்பேறுகளுக்கு அரசு மருத்துவமனைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் பொதுமக்கள் கருக்கலைப்புகள் சட்டப்பூர்வமற்ற இடங்களில் மேற்கொள்ளாமல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவரின் உரிய ஆலோசனையின்படி, மேற்கொள்ளவும், அரசின் விதிமுறைகளை மீறி கருக்கலைப்புகளில் ஈடுபடும் மருந்தகங்கள் தனியார் மருத்துவமனைகள் மீதுசட்டப்பூர்வமான கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிசு மரணம் மற்றும் மகப்பேறு மரணம் முற்றிலும் தவிர்க்கப்படுவதற்கு அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்கள், நிலைய மருத்துவ அலுவலர்கள், தலைமை மருத்துவ அலுவலர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் ஆகியோர்கள் கர்ப்பிணி பெண்கள்மீது தனிக்கவனம் செலுத்தி சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை வழங்கிட வேண்டும்.மகப்பேற்றிற்கு பின் பச்சிளம் குழந்தைகளுக்கு கிருமித்தொற்று ஏற்படாதவாறு மருத்துவர்கள் சிறப்பாக மருத்துவப்பணியை மேற்கொள்ள வேண்டும் என கூறினார். அப்போது இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) பாலச்சந்தர், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) பூங்கொடி, அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்கள், நிலைய மருத்துவ அலுவலர்கள், தலைமை மருத்துவ அலுவலர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    ×