search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாவித்திரி"

    • வெகுநேரமாகியும் பாலா வரவில்லை. சோர்ந்து போய் நின்றவரை ஊரார் சமாதானம் செய்தார்கள்.
    • அப்படியும் முயற்சியைக் கைவிடாதவர் மூன்றாம் நாளும் ஆற்றில் இறங்கித் தேடினார்.

    'நான் யாரைப் பார்க்க நினைக்கிறேனோ, அவர்கள் மட்டுமே என்னைப் பார்க்க வர முடியும்.

    ஏனெனில் எனது அழைப்பும் வேண்டும்.'

    நெமிலியில் குடிகொண்டிருக்கும் அன்னை பாலாவின் அருள்வாக்கு இது.

    வேலூர் மாவட்டம் தாங்கி என்னும் சிற்றூரில் வசித்தவர் ராமசுவாமி அய்யர்.

    கடவுளுக்குத் தொண்டு செய்து காலம் செலுத்திய வேதவிற்பன்னரான ராமசுவாமி அய்யருக்கும் கஷ்ட காலம் வந்தது.

    அதிலிருந்து மீள முடியாமல் தனது குடும்பத்தோடு ஊரை விட்டே கிளம்பினார்.

    கால்நடையாகவே வந்தவர்கள் அரக்கோணம் அருகிலுள்ள நெமிலி கிராமத்தை வந்தடைகிறார்கள்.

    அங்கு சத்திரம் ஒன்றைக் கண்டவர்கள், நிரந்தரமான வசிப்பிடம் கிடைக்கும் வரை இங்கேயே தங்கலாம் எனத் தீர்மானிக்கிறார்கள்.

    ஆனால், சத்திரத்தின் திண்ணையில் அமர்ந்திருந்தவர்களோ, இது மோகினிப் பிசாசு குடியிருக்கும் இடம் என்று அச்சமூட்டுகிறார்கள்.

    அய்யர் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.

    தூசிபடிந்து கிடந்த சத்திரத்தை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து தீபம் ஏற்றினார் அய்யரின் மனைவி சாவித்திரி.

    அன்று இரவு உணவை உண்டு அனை வரும் உறங்கிப் போனார்கள்.

    ஆனால், ராமசுவாமி அய்யர் விடிய விடியக் கண்விழித்து மந்திரங்களைப் பாராயணம் செய்து கொண்டே இருந்தார்.

    பொழுது விடிந்ததும் சத்திரத்துக்கு ஓடிவந்த ஊர் மக்கள், அங்கே அய்யரும் அவரது மனைவி மக்களும் நலமுடன் இருந்ததைக் கண்டார்கள்.

    இவர்களிடம் ஏதோ தெய்வ சக்தி இருக்கிறது என்ற முடிவுக்கு வந்த ஊர்மக்கள், அய்யர் குடும்பம் நிரந்தரமாக தங்கள் ஊரிலேயே தங்கி இருக்க வசதிகளை செய்து கொடுத்தார்கள்.

    காலங்கள் கடந்தன. ஒருநாள் இரவு, ராமசுவாமி அய்யரின் இரண்டாவது மகன் சுப்பிரமணியனின் கனவில் ஒன்பது வயது சிறுமி ஒருத்தி காட்சி கொடுத்தாள்.

    "அன்னை ராஜ ராஜேஸ்வரியின் அருளாசிப்படி பாலாவாகிய நான் கொசஸ்தலை ஆற்றில் மிதந்து வந்து கொண்டிருக்கிறேன்.

    அங்கிருந்து என்னை நீ எடுத்து உனது இல்லத்தில் வைத்து அமர்த்திக்கொள்; நீ தொட்டது அனைத்தும் துலங்கும்"

    என்று சொல்லி மறைந்தாள் சிறுமியாய் காட்சிதந்த பாலா.

    அன்னை பராசக்தியே தனது இல்லத்தில் அவதரிக்கப் போவதாகப் பேரானந்தம் கொண்டார் சுப்பிரமணியன்.

    விடிந்தும் விடியாததுமாய் ஊரார் சிலரோடு கொசஸ்தலை ஆற்றுக்கு ஓடினார்.

    ஆற்றில் இக்கரைக்கும் அக்கரைக்குமாய் அலையடித்தது வெள்ளம். அதில் இறங்கி, பாலாவைத் தேடினார் சுப்பிரமணியன்.

    வெகுநேரமாகியும் பாலா வரவில்லை. சோர்ந்து போய் நின்றவரை ஊரார் சமாதானம் செய்தார்கள்.

    மறுநாள், தான் மட்டும் ஆற்றுக்கு ஓடினார் சுப்பிரமணியன். இம்முறையும் பாலா பிரசன்னமாகவில்லை.

    அப்படியும் முயற்சியைக் கைவிடாதவர் மூன்றாம் நாளும் ஆற்றில் இறங்கித் தேடினார்.

    அப்போதும் கிடைக்கவில்லை. இறுதியாக, பாலாவை நினைத்தபடி ஆற்றில் ஒருமுறை மூழ்கி எழுந்தார்.

    வலைவீசித் தேடியும் கிடைக்காத பாலா, சுப்பிரமணியனின் கையில் வாகாய் வந்தமர்ந்தாள் என்று சொல்லப்படுகிறது.

    விரல் அளவிலான பாலாவைப் பார்த்துப் பரவசம் கொண்டவர் பாலா விக்கிரகத்துடன் வீடுவந்து சேர்ந்தார்.

    நவராத்திரிக்கு சில தினங்களே இருந்த நிலையில் குழந்தை பாலா, சுப்பிரமணிய அய்யரின் இல்லத்தில் குடியேறிய செய்தி கேட்டு நெமிலியே திரண்டுவந்தது.

    அந்த ஆண்டு நவராத்திரிக் கொண்டாட்டங்களின் நாயகி ஆனாள் பாலா.

    ஒன்பது நாட்களும் ஹோமம், அபிஷேகம், பூஜைகள், அன்னதானம், வஸ்திரதானம் என அமர்க்களப்பட்டது பாலா குடில்.

    தான் குடிகொண்ட கிராமத்தையும் தன்னை வணங்கிச் சென்ற மக்களையும் செல்வ செழிப்பாக்கினாள் பாலா.

    இப்படித்தான் சுப்பிரமணிய அய்யரின் இல்லம் பாலா பீடமானது.

    பாலாவுக்கென ஒரு கோவில் தனியாக, இந்த உலகெங்கிலும் தேடிப் பார்த்தாலும் கிடையாது.

    அப்படி என்றால் இந்த பாலா பீடம் என்பது கோவில் இல்லையா? ஆம் பாலா பீடம் என்பது கோவில் அல்ல, ஒரு வீடு.

    பாலா தனக்கெனத் தேர்ந்தெடுத்துக்கொண்ட ஒரு வீடுதான் இந்த பாலா பீடம்,

    ஆற்றிலே மிதந்து வந்த அன்னை பாலா அய்யரவர்கள் துயர் நீக்கி,

    அவர்தம் துன்பத்தைப் போக்கி அருளை வாரி வழங்கி காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி போல நெமிலியிலே தனி ஒரு அரசாட்சி நடத்திவருகிறாள்.

    அன்னை பாலாவின் அரசாட்சி, அகிலமே புகழும் அருளாட்சி, காண கண் கொள்ளா கண்காட்சி.

    பாலா அவள் உத்தரவின்றி அவள் வீட்டிலே நுழைய முடியாது.

    அவளது ஒப்புதலின்றி அவ்விடத்தில் சிறு உப்பும் சுவை தராது.

    அளவிலாத லட்சங்களுக்கு அதிபதி ஆனாலும் அவள் உத்தரவின்றி உள்ளே நுழைய முடியாது.

    நெமிலியில் அவள் அமர்ந்திருக்கும் பீடத்திலே அவள் வைத்ததுதான் சட்டம்.

    அவள் சொல்வதுதான் தீர்ப்பு.

    நான் பார்க்க நினைப்பவர்கள்தான் என்னைப் பார்க்க வருவார்கள்.

    என்னைப் பார்க்க நினைப்பவர்கள் கோவிலுக்குத்தான் செல்வார்கள்.

    கோவிலுக்கு செல்ல அழைப்பு தேவையில்லை.

    நினைப்பு போதும், என் வீட்டிற்குள்ளே நுழைய நினைப்பு மட்டும் போதாது. என் அழைப்பும் வேண்டும்.

    இதுதான் அன்னை பாலாவின் அருள்வாக்கு.

    அகிலம் புகழும் அற்புத வாக்கு. இதுதான் பாலா பக்தர்களுக்கு வேத வாக்கு.

    நெமிலியிலே ஆற்றினை அடுத்த வீதியில் அமைந்திருக்கும் அழகிய வீட்டிலே நடுக்கூடத்திலே தான் ஸ்ரீபாலா அமர்ந்திருக்கிறாள்.

    நடு வீடு பீடமாகி எனும் வார்த்தைகள் அன்றே சித்தர் பாடிய சத்திய வார்த்தைகள்.

    அவள் வந்து அமர்ந்த அந்த வீடுதான் பாலா பீடமாகியது.

    எவ்வளவு தீர்க்க தரிசனமாக 800 ஆண்டுகளுக்கு முன்னரே கருவூர் சித்தர் எழுதிவிட்டார்.

    நெமிலியெனும் அந்த சிற்றூரிலே வந்து ஸ்ரீபாலா பீடம் எங்கே என்று கேட்டால் அதுங்களா நம்ம ஐயர் வீட்லதான் இருக்கு என்று கூறுவார்கள்.

    கருவூர் சித்தர் பாடலும் அதனையே வலியுறுத்துகிறது. ஆம் ஆலயமல்ல. அது பாலாவின் வீடு. வீடு வீடுதான்.

    ×