search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாயல்குடி"

    சாயல்குடி அருகே குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டி கணவர் கொலை செய்தார்.

    சாயல்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கடுகுச்சந்தைசத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி, விவசாயி. இவரது மனைவி அழகுவள்ளி (வயது60).

    இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவர் திருமணமாகி தங்கச்சிமடத்தில் வசித்து வருகிறார்.

    கடந்த சில ஆண்டுகளாக குருசாமிக்கும், அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டது. நேற்று இரவும் கணவன்-மனைவி இடையே சச்சரவு ஏற்பட்டது. அதன் பிறகு அழகுவள்ளி தூங்கி விட்டார்.

    ஆனால் குருசாமி கோபத்துடன் இருந்தார். இன்று அதிகாலை 4 மணிக்கு எழுந்த அவருக்கு மனைவியை பார்த்ததும் மீண்டும் ஆத்திரம் ஏற்பட்டது. அது கொலை வெறியாக மாற வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த அழகுவள்ளியை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

    இந்த சம்பவம் கடுகுச் சந்தைசத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கொலை குறித்து சாயல்குடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். அழகுவள்ளி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய போலீசார் மனைவியை வெட்டிக்கொலை செய்த குருசாமியை கைது செய்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் சுனாமி ஒத்திகை பயிற்சி சாயல்குடி அருகே உள்ள கன்னிராஜபுரம் ரோஜ்மாநகர் கடற்கரையில் நடைபெற்றது.
    சாயல்குடி:

    தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சுனாமி குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று தமிழக கடலோர மாவட்டங்களில் மாதிரி சுனாமி ஒத்திகை பயிற்சியை நடத்தியது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஒத்திகை பயிற்சி சாயல்குடி அருகே உள்ள கன்னிராஜபுரம் ரோஜ்மாநகர் கடற்கரையில் நடைபெற்றது.

    காலை 8.45 மணிக்கு பயிற்சி தொடங்கியது. இதில் போலீசார், தீயணைப்பு வீரர்கள், அரசு அலுவலர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஒத்திகை பயிற்சியின் தொடக்கத்தில் ஒலிபெருக்கி மூலம் கடலோர கிராமங்களில் சுனாமி குறித்து எச்சரிக்கப்பட்டது. அதன் பின்னர் பொதுமக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சுனாமியில் சிக்கியவர்களை எப்படி மீட்க வேண்டும் என தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினர். பின்னர் சுனாமியில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து அரசு டாக்டர்கள் விளக்கமளித்தனர்.

    சுனாமி அறிவிப்பு வந்த உடனே பொதுமக்கள் பீதியடையாமல் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஒத்திகை பயிற்சிக்கு சப்-கலெக்டர் விஷ்ணு சந்திரன், கீழக்கரை போலீஸ் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமை தாங்கினர். இதில் கடலாடி வட்டாட்சியர் முத்து லட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி, கடலாடி ஆணையர் இளங்கோ, மீன்வளத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார், டாக்டர் சரவணன், துணை வட்டாட்சியர் செந்தில் வேல்முருகன், சாயல்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் லிங்கம், கால் நடை மருத்துவர் லிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.
    சாயல்குடி அருகே குருவாடி கிராமத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளி புதிய கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சாயல்குடி:

    குருவாடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் குருவாடி, கொக்காடி, அவத்தாண்டை, எஸ்.எம்.இலந்தைகுளம் கிராமங்களிலிருந்து மாணவ படித்து வருகின்றனர்.

    1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பழைய ஓட்டுக் கட்டிடத்திலேயே பள்ளி இயங்கி வருகிறது ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை 300 மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்

    இப்பள்ளியில் இட நெருக்கடி இருப்பதால் வெளியே மரத்தின் நிழலில் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். இடவசதி இல்லாத காரணத்தால் பொது மக்கள் கோரிக்கையின் பேரில் ஆறு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக குருவாடியிலிருந்து சாயல்குடி செல்லும் சாலையில் நபார்டு வங்கியின் மூலம் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

    பணி நிறைவடைந்து 6 மாதங்கள் ஆன நிலையிலும் மாணவ-மாணவிகள் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படாமல் பழைய கட்டிடத்திலேயே இந்த பள்ளி இயங்கி வருகிறது.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் சுற்று வட்டார கிராம பகுதியிலிருந்து பள்ளிக்கு மாணவ -மாணவிகளை அனுப்புகிறோம்.

    கடந்த ஆண்டுகளில் பள்ளியின் ஓடுகள் கீழே விழுந்து மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். பழைய கட்டிடம் என்பதால் இடிந்து விழும் நிலையில் மாணவ மாணவிகள் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று படித்து வருகின்றனர்.

    இடநெருக்கடி காரணமாக 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 6 மாத காலம் ஆகிவிட்டது.

    புதிய கட்டிடத்திற்கு பள்ளியை மாற்றாமல் பழைய கட்டிடத்திலேயே இயங்கி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மாணவ- மாணவிகளின் நலன் கருதி புதிய பள்ளி கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றனர்.
    சாயல்குடி அருகே பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மீனவர் பலியானார். இது குறித்து பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    சாயல்குடி:

    சாயல்குடி அருகே உள்ள தெற்கு மூக்கையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் செல்வகுமார் (வயது 28) மீனவர். நேற்று இரவு நரிப்பையூரில் இருந்து சாயல்குடிக்கு செல்வகுமார் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    மாணிக்கம் நகர் பஸ் நிறுத்தம் அருகே தனியார் பஸ்சில் பயணிகளை இறக்கிக் கொண்டிருந்தனர். அதனை செல்வகுமார் சரியாக கவனிக்கவில்லை. இதனால் பஸ்சின் பின் புறத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது.

    இந்த விபத்தில் செல்வகுமார் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தூத்துக்குடி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செல்வகுமார் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவருடைய சகோதரர் திருமேணி சாயல்குடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோக்கின்ஜெரி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து பஸ் டிரைவர் கிருஷ்ணமூர்த்தி (42) கைது செய்யப்பட்டார்.

    பலியான செல்வ குமாருக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். #tamilnews
    ×