search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாதகமான தீர்ப்பு"

    தகுதிநீக்க வழக்கில் சாதகமான தீர்ப்பு வரவேண்டும் என்பதற்காக தாமிரபரணி புஷ்கர நிகழ்வில் புனித நீராட வந்திருப்பதாக தங்க.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். #DisqualifiedMLAs #ThangaTamilSelvan
    குற்றாலம்:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்டு மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி எம்.சத்திய நாராயணன் ஒத்திவைத்து உத்தரவிட்டார். அநேகமாக நாளை தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் குற்றாலம் வந்து சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். 18 பேரில் சிலர் வெளிநாடு செல்ல முடிவு செய்திருந்து தெரியவந்ததால், தீர்ப்பு வரும் வரை தமிழ்நாட்டில் இருக்கும்படி டிடிவி தினகரன் கூறியிருக்கிறார். அதன்படி குற்றாலம் வந்து தங்கியிருக்கின்றனர்.

    தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரவேண்டும் என்பதற்காக பாபநாசம் சென்று தாமிரபரணி புஷ்கர நிகழ்வில் புனித நீராட உள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இன்றும் நாளையும் குற்றாலத்தில் தங்கி ஓய்வு எடுக்கப்போவதாகவும் கூறியிருக்கிறார்.



    மேலும், அமைச்சர் ஜெயக்குமார் தொடர்புடைய ஆடியோ வெளியானதில் அமமுகவுக்கு தொடர்பு இருப்பதாக ஜெயக்குமார் கூறியிருப்பது பற்றி கேட்டதற்கு, அந்த ஆடியோவுக்கும் அமமுக-வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.

    தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என டிடிவி தரப்பினர் மிகுந்த நம்பிக்கையில் உள்ளனர். அவ்வாறு தீர்ப்பு வந்தால் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்படும். அவர்கள் தரப்பில் இருந்து தொடர்பு கொள்வதை தவிர்க்கும் வகையில் குற்றாலம் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியில் பிளவு ஏற்பட்டபோது, எம்எல்ஏக்கள் கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கியிருந்ததுபோன்று இப்போது தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் குற்றாலத்தில் முகாமிட்டிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #DisqualifiedMLAs #ThangaTamilSelvan
    ×