search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை இஎஸ்ஐ ஆஸ்பத்திரி"

    • மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டமான கோவையில் அரசு ஆஸ்பத்திரியில் மட்டுமே பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
    • ஒரே இடத்தில் மட்டுமே பிரேத பரிசோதனை செய்வதால், காலதாமதம், வேலைபளு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

    கோவை:

    கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரத்தில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவக்கல்லூரி 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆஸ்பத்திரியில் 31 துறைகள் உள்ளன. இதில், 17 துறைகள் பொதுவானவை, 14 சிறப்பு மருத்துவ துறைகள் உள்ளன. இங்கு புறநோயாளிகள் பிரிவுடன், அவசர சிகிச்சை பிரிவும் செயல்படுகிறது.

    இந்நிலையில் மாவட்ட கலெக்டர், கல்லூரி டீன் ஆகியோர் இணைந்து, கல்லூரி வளாகத்தில் பிரேத பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில், பிரேத பரிசோதனை தொடங்க தமிழக அரசு அரசாணை வழங்கி அனுமதி அளித்துள்ளது.

    இதுகுறித்து இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி டீன் ரவீந்திரன் கூறியதாவது:-

    மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டமான கோவையில் அரசு ஆஸ்பத்திரியில் மட்டுமே பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. ஒரே இடத்தில் மட்டுமே பிரேத பரிசோதனை செய்வதால், காலதாமதம், வேலைபளு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

    இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை நடத்த, சட்ட மருத்துவத் துறையில் போதிய கட்டமைப்பு வசதி உள்ளது. பேராசிரியர் மனோகரன் தலைமையில் சட்டம் சார்ந்த டாக்டர்கள் 6 பேரும், உதவியாளர்கள் 8 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இங்கு தினமும் சராசரியாக 10 உடல்களை பிரேத பரிசோதனை செய்ய முடியும். கோவை மாநகரில் உள்ள 7 போலீஸ் நிலையங்கள், புறநகரில் உள்ள 19 போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட சடலங்களை இங்கு பிரேத பரிசோதனை செய்யப்படும். இந்தியாவில் உள்ள வேறு எந்த இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரிலும் பிரேத பரிசோதனை வசதி இல்லை. கோவையில் தான் முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.

    தற்போது 18 உடல்களை வைக்கும் குளிர்சாதன வைப்பறை வசதி உள்ளது. மேலும் 30 உடல்களை வைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பிரேத பரிசோதனை அரங்கில் சி.சி.டி.வி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    தற்போது ஆண்டுக்கு 100 மருத்துவ மாணவர்கள் இங்கு சேர்க்கப்படுகின்றனர். 5 ஆண்டுகளை சேர்த்து 500 மாணவர்கள் பயில்வார்கள். இவர்கள், பிரேத பரிசோதனை பயிற்சிக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.

    தற்போது இங்கேயே அந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் பயன்பெறுவார்கள். வரும் நாட்களில் இங்கு பிரேத பரிசோதனை தவிர, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குக்கு (போக்சோ) தேவையான பரிசோதனை, வயது பரிசோதனை ஆகியவையும் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×