search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோழித்தீவனம்"

    • கடந்த 2 ஆண்டுகளாக கோழித் தீவன மூலப்பொருட்கள் எதிா்பாராத அளவுக்கு விலை உயா்ந்துள்ளன.
    • மத்திய இணை அமைச்சா் எல்.முருகனிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    தமிழ்நாடு முட்டை கோழிப் பண்ணையாளா்கள் மாா்க்கெட்டிங் சொசைட்டி தலைவா் வாங்கிலி வி.சுப்பிரமணியம், நிா்வாகிகள் சாா்பில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகனிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

    கடந்த 2 ஆண்டுகளாக கோழித் தீவன மூலப்பொருட்கள் எதிா்பாராத அளவுக்கு விலை உயா்ந்துள்ளன. இதற்கு ஏற்றாற்போல் முட்டை விலையை உயா்த்த முடியவில்லை. தற்போதைய சூழலில் கோழிப்பண்ணைத் தொழில் பேரிழப்பைச் சந்தித்து வருகிறது. 25 சதவீத கோழிப்பண்ணையாளா்கள் நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் மூடிவிட்டனா். இதே நிலை தொடா்ந்தால் மீதமுள்ள பண்ணைகளையும் தொடா்ந்து செயல்படுத்த முடியாமல் மூட வேண்டிய அபாயம் நேரிடும்.

    தீவன மூலப் பொருள்களில் முக்கியமாக விளங்கும் மக்காச்சோளம் விலை உயா்ந்து கிலோ ரூ.28 ஆகியுள்ளது. மேலும், தேவையான மக்காச் சோளமும் கிடைப்பதில்லை. அண்மையில் பெய்த கனமழையால் கா்நாடகத்தில் பயிரிட்டுள்ள மக்காச்சோளப் பயிா்கள் நீரில் மூழ்கி வீணாகியுள்ளன. இதனால் கோழிப் பண்ணைகளுக்கான மக்காச்சோளம் அதிளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோழித் தீவனத் தயாரிப்பும் இதனால் முற்றிலும் முடங்கிப் போயுள்ளது.

    எனவே, வெளிநாடுகளில் இருந்து மரபணு ரீதியாக மாற்றப்பட்ட உடைத்த மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவற்றை மத்திய அரசு சாா்ந்த நிறுவனங்களாகிய எம்எம்டிசி மற்றும் டிஜிஃஎப்டி மூலம் இறக்குமதி செய்து கோழிப் பண்ணையாளா்களுக்கு வழங்கி தொழிலை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கோழி தீவனங்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது பண்ணையாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
    • பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக கோழி தீவனங்களின் விலை அதிகரித்தது.

    பல்லடம் :

    பல்லடம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா,கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் கோழி தீவனங்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது பண்ணையாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து கறிக்கோழி பண்ணையாளர்கள் கூறுகையில்,கொரோனா ஊரடங்கு காலத்தில் கறிக்கோழி விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு விற்பனையை எதிர்பார்த்திருந்த வேளையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக கோழி தீவனங்களின் விலை அதிகரித்தது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ ரூ.35 ஆக இருந்த சோயா புண்ணாக்கு விலை தற்போது ரூ. 60 ஆக விலை உயர்ந்துள்ளது. அதே போல் ஒரு கிலோ ரூ.14 ஆக இருந்த மக்காச்சோளம் தற்போது ரூ.25 ஆகவும் உயர்ந்துள்ளது.

    வேன், லாரி வாடகை, ஆட்கள் கூலி உள்ளிட்டவையும் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கறிக்கோழி தீவனமான சோயா புண்ணாக்கு, மக்காச்சோளம், போன்றவை மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் தீவனங்கள் தொடர்ந்து விலை ஏறி வருவது கோழிப்பண்ணையாளர்களுக்கு கவலையளிக்கிறது. மேலும் கோழி தீவனங்கள் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுவதால் விலையும் அதிகரிக்கிறது. எனவே தீவன ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும் .மேலும் கோழி தீவனங்களுக்கு தேவையான முக்கிய மூலப்பொருட்களான மக்காசோளம், கம்பு மற்றும் சோயா ஆகியவற்றை வெளி மாநிலங்களை நம்பியே கொள்முதல் செய்யும் நிலை உள்ளது. எனவே அவைகளின் உற்பத்தியை தமிழகத்தில் அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ரெயில்கள் மூலம் கொண்டு வரும் கோழி தீவனப் பொருட்களுக்கு மத்திய அரசு ரெயில் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து சோயா இறக்குமதிக்கு வரி விலக்கு அளித்து சோயா இறக்குமதியை அதிகரிக்க அனுமதி அளிக்க வேண்டும். இதன் முலம் கறிக்கோழி வளர்ப்பில் செலவுகளைக் கட்டுப்படுத்தி நஷ்டத்தை தவிர்க்க முடியும். மேலும் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் சத்தான கோழி இறைச்சியை குறைந்த விலையில் வழங்க முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×