search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குரு சீடன்"

    அகங்கார துறவி அவர் இனத்தின் மீது கொண்டிருந்த கர்வத்தையும், பிறரை அவர் தாழ்வாக நினைப்பதை எப்படி சீடன் அவருக்கு உணர்த்தினான் என்பதையும் பார்க்கலாம்.
    அழகு மலர்களும் அன்பான விலங்குகளும் சூழ்ந்த அந்த அடர் வனத்தில் நெடுங்காலமாக ஆன்மிக தவம் புரிந்து ஞானியான துறவி ஒருவர் இருந்தார். அவரைக் காண மக்கள் விரும்பினாலும் முற்றும் துறந்தவரான அவர் ஊர் வாழ்க்கையை விரும்பாததால் யாரையும் காண விரும்பாமல் சிந்தனை முழுவதும் சிவனே என்று வாழ்ந்து வந்தார். ஆனாலும் அவரின் தவவலிமையால் அவரின் புகழ் எப்படியோ மக்களிடம் பரவியது. அவரின் பெயரே ‘வனத்துறவி’ என்றாயிற்று.

    வனத்தின் அருகில் இருந்த ஊரில் வசித்து வந்த ஆனந்தன் என்ற இளைஞன், இறை சிந்தனை மிகுந்து துறவியாகும் ஆர்வத்தில் இருந்தான். வனத் துறவியைப் பற்றி கேள்விப்பட்டு அவரையே தன் குருவாக ஏற்க விருப்பம் கொண்டான்.

    வனத்திற்குச் சென்று துறவியுடன் தங்கினான். அவர் பாராமுகம் காட்டினாலும், அவருக்குத் தேவையான சேவைகளை செய்து அவரின் மனதில் இடம் பிடித்தான். இருவரும் குருவும் சீடனுமாக நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டனர். ஆன்மிக வாயிலாக குருவுடன் ஒத்துப் போன இளைஞனால், தான் பிறந்த இனத்தின் மீது கர்வம் கொண்டிருந்த துறவியையும், பிறரை அவர் தாழ்வாக நினைப்பதையும் அவனால் ஏற்க முடியவில்லை.

    எப்படியாவது தனது குருவின் உயர்வு, தாழ்வு எண்ணத்தை, அகங்காரத்தை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அதற்கான நாளும் நெருங்கியது.

    ஒரு முறை துறவிக்கு திருவண்ணாமலை ஈசனை வணங்க வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. இதற்காக துறவியும், இளைஞனும் காட்டை விட்டு வெளியேறி திருவண்ணாமலை நோக்கி புறப்பட்டனர்.

    வழியில் பிறரிடம் பிச்சை கேட்டு வாங்கி உணவருந்தினர். அப்போதும் கூட உயர்வானவர்களைப் பார்த்தே பிச்சை வாங்கி உண்டார் துறவி. அதைக் கண்டு இளைஞன் வருந்தினான்.

    ஒரு இடத்தில் இரண்டு பாதைகள் பிரிந்தது. எந்த திசையில் செல்வது என்று இருவருக்குமே தெரியவில்லை. தோராயமாக ஒரு பாதையைத் தேர்வு செய்து சென்றனர். ஆனால் அது ஆள் நடமாட்டம் இல்லாத பாதையாக இருந்தது. வன விலங்குகளின் ஒலி கேட்டுக் கொண்டே இருந்தது.

    ஒரு கட்டத்தில் இருவருக்கும் பசி, களைப்பு ஏற்பட்டது. உணவருந்த ஏதாவது கிடைக்குமா? என்று ஏங்கினர். களைப்பு மிகுதியில் ஒரு மரத்தின் அடியில் ஒதுங்கி உட்கார்ந்தனர்.

    அப்போது அங்கு விலங்குகளை வேட்டையாட வந்த வேடன், இருவரையும் பார்த்து, ‘இந்த அடர்ந்த காட்டில் எப்படி வந்து சிக்கினீர்கள்?’ என்று கேட்டான்.

    விவரம் அறிந்து கொண்ட வேடம், துறவியையும், இளைஞனையும் தன்னுடைய குடிலுக்கு அழைத்துச் சென்றான். இளைஞன் உற்சாகமாகச் சென்றாலும், துறவி வேண்டா வெறுப்பாகத் தான் உடன் சென்றார். ஏனெனில் வேடன் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவனாயிற்றே.

    பசி மயக்கத்தில் இருந்த துறவிக்கும், இளைஞனுக்கும் வேடனின் மனைவி சூடான உணவை பரிமாறினாள்.

    நன்றி உணர்வுடன் ஆனந்தன் அந்த உணவை ரசித்து ருசித்துக் கொண்டிருக்க, துறவியும் வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாக உணவை உண்டார். பசி தீர்ந்ததும், சரியான பாதையில் அவர்கள் இருவரையும் வேடன் அனுப்பி வைத்தான்.

    செல்லும் வழியில் “என்ன ஆனந்தா பசி தீர்ந்ததா?” என்று கேட்டார் குரு.

    “ஆம் குருவே! அற்புதமான ருசியுடன் அருமையான வெல்லம் போன்ற உணவு” பதிலளித்தான் சீடன்.

    “என்னவோ போ.. பசியில உனக்கு ருசி கூட தெரியல.. வேட்டையாடிய உணவைக் கொண்டு சமைத்ததோ என்னவோ, சாக்கடை மண்ணு மாதிரி அவ்வளவு துர்நாற்றம்” முகம் சுளித்தபடி கூறினார் துறவி.

    பசிக்கு உணவிட்டவர்களுக்கு நன்றி சொல்லாவிட்டாலும், இழிவாக பேசாமல் இருக்க துறவிக்கு தெரியவில்லையே என்று இளைஞன் வருந்தினான்.

    துறவி மீண்டும் தொடர்ந்தார். “சரி.. நீ சாப்பிட்ட உணவை வெளியேற்று. அது வெல்லமாக வருகிறதா? விவகாரமாக வருகிறதா? என்று பார்ப்போம்” என்றார்.

    குருவின் கட்டளையை மீறாத சீடனாய் ஆனந்தனும் மூச்சை இழுத்துப்பிடித்து உண்ட உணவின் சிறு பகுதியை வெளியேற்றினான். அதிர்ந்து போனார் துறவி. காரணம் வெல்லம் கலந்த பாயசமாக வந்தது உணவு.

    “பார்த்தீர்களா குருவே! நான் சொன்னது சரியானது” என்ற இளைஞன் “நீங்கள் சாப்பிட்டதும் இதே உணவுதானே, உங்களுக்கு மட்டும் எப்படி அது மண்ணாகும்” என்றான்.

    எதிர்பாராத விதமாக வாந்தி எடுத்த துறவியின் வாயில் இருந்து சாக்கடை நாற்றத்துடன் உணவு வந்து விழுந்தது. அது அந்த இடத்தையே அசுத்தமாக்கியது.

    அதைப் பார்த்த இளைஞன், “குருவே! தங்களின் மனதில் இருந்த அகங்காரமே இப்படி சாக்கடையாக நாற்றம் அடிக்கிறது. வேடனை பசியைத் தீர்க்க வந்த சகமனிதனாகத் தான் நான் பார்த்தேன். ஆனால் நீங்களோ அவனை தீண்டத்தகாத மனிதனாகத்தான் நினைத்தீர்கள். இனியாவது உங்கள் மனதிலிருக்கும் அகங்காரத்தை ஒழித்து மகானாக மாறவேண்டும்” என்றான்.

    குரு தன் தவறை உணர்ந்து வருந்தினார்.
    ×