search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குட்டையில் விளையாடிய"

    • வனப்பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் விவசாய நிலத்திற்குள் புகுந்த ஆண் யானை ஒன்று அங்கு இருந்த குட்டையில் இறங்கி தண்ணீரில் விளையாடி உள்ளது.
    • வனத்துறையினர் ரோந்து சென்ற போது யானை உயிரிழந்து இருப்பது தெரியவந்தது.

    டி.என்.பாளையம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டி.என்.பாளையம் வனச்சரகத்தில் ஏராளமான யானை, சிறுத்தை, புலிகள் உள்ளது.

    யானை உள்ளிட்ட வன விலங்குகள் வன எல்லையில் உள்ள கிராம பகுதிக்குள்ளும், விவசாய நிலங்களுக்குள் புகுந்தும் பயிர்களை சேதப்படுத்தி வந்தன.

    இதனால் வன எல்லையில் மின்வேலி அமைத்தும், அகழி வெட்டியும், வனவிலங்குகள் கிராம பகுதிக்குள் வராமல் வனத்துறையினர் தடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று டி.என்.பாளையம் வனசரகம் கொங்கர்பாளையம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து மின்வேலிகளை உடைத்து வன எல்லையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள மாரப்பன் என்பவரது நிலத்திற்குள் புகுந்த சுமார் 12 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று அங்கு இருந்த சிறிய அளவிலான குட்டையில் இறங்கி தண்ணீரில் விளையாடி உள்ளது.

    சிறிது நேரத்தில் அந்த யானை குட்டையிலேயே விழுந்து உயிரிழந்தது, வனத்துறையினர் ரோந்து சென்ற போது யானை உயிரிழந்து இருப்பது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மாவட்ட வன அலுவலர் மற்றும் துணை இயக்குனர் கிருபா சங்கர் மற்றும் டி.என்.பாளையம் வனசரகர் கணேஷ் பாண்டியன் தலைமையிலான வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அதைத்தொடர்ந்து இன்று காலை கால்நடை மருத்துவர் சதாசிவம் சம்பவ இடத்திற்கு வந்து உடற்கூறு ஆய்வு பணி மேற்கொண்டு வருகிறார்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, சுமார் 12 வயது மதிக்கத்த ஆண் யானை கூட்டத்தை விட்டு வெளியேறி விவசாய நிலத்திற்குள் வந்து குட்டையில் இறந்து கிடந்தது, உடற்கூறு ஆய்விற்கு பின்னரே யானை இறப்பிற்கான காரணம் முழுமையாக தெரிய வரும் என்று கூறினர்.

    ×