search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடியரசு தின விழாவையொட்டி"

    • குடியரசு தின விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
    • வழிபாட்டு தலங்களிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    இந்தியாவின் 74 -வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்கள் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பை தீவரப்படுத்தியுள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்திலும் குடியரசு தின விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு பஸ் நிலையம், ஜி. எச். ரவுண்டானா, கருங்கல்பாளையம், காளை மாட்டு சிலை, பன்னீர்செல்வம் பார்க் உள்பட மாநகர் பகுதி முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதேபோல் வழிபாட்டு தலங்களிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதே போல் கோபி, அந்தியூர், பவானி, மொடக்குறிச்சி, சத்தியமங்கலம், பெருந்துறை உள்பட மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதுபோல் ஈரோடு ரெயில் நிலையத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.

    ரெயில் நிலையம் நுழைவாயிலில் பயணிகள் உடமைகள் தீவிர பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு பயணிகள் உடமை பரிசோதிக்கப்படுகிறது.

    சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரணை நடத்துகின்றனர். அவர்கள் பெயர், முகவரி, செல்போன் எண்களை வாங்கிக் கொண்டு அனுப்பி விடுகின்றனர்.

    இதுபோல் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு ெரயில்களையும் ெரயில்வே போலீசார், பாதுகாப்பு படை போலீசார் ஒன்றிணைந்து தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

    ரெயில் நிலையங்களில் கேட்பாராற்று கிடக்கும் பொருட்கள் இருந்தால் அதனை தொட வேண்டாம். அது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

    குடியரசு தின விழாவையொட்டி ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் நாளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசிய கொடி ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

    பின்னர் சிறப்பாக பணியாற்றிய போலீசார் அலுவலர்களை பாராட்டி பதக்கம், சான்றிதழ் வழங்குகிறார். இதனைத் தொடர்ந்து தியாகிகளை கவுரவப்படுத்துகிறார்.

    இதனைத் தொடர்ந்து பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் 600 மாணவ, மாணவிகள் பங்கேற்கிறார்கள்.

    ×