search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதர் பள்ளி"

    • கடந்த நிதியாண்டில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படுகின்ற பள்ளிகள், கல்லூரிகளுக்கு கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தந்திட சுமார் 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் சொந்தமான இந்த இடத்தில் கலவல கண்ணன் செட்டி அறக்கட்டளையின் பள்ளிக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று சென்னை, கீழ்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையிலுள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    பள்ளி மாணவ, மாணவியருக்கான புதிதாக கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படவுள்ள இடத்தினையும் பார்வையிட்டதோடு, தற்போதைய பள்ளி கட்டிடங்களில் செய்யப்பட வேண்டிய மராமத்துப் பணிகள் குறித்தும் அலுவலர்களுக்கும், பொறியாளர்களுக்கும் அறிவுரைகளை வழங்கினார்.

    அதனைத்தொடர்ந்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    கடந்த நிதியாண்டில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படுகின்ற பள்ளிகள், கல்லூரிகளுக்கு கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தந்திட சுமார் 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் சொந்தமான இந்த இடத்தில் கலவல கண்ணன் செட்டி அறக்கட்டளையின் பள்ளிக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது. 1998-ம் ஆண்டு அந்த குத்தகை காலம் முடிந்த பிறகும் வாடகைத் தொகை நிலுவையில் இருந்ததால் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று, நீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி 2021- ம் ஆண்டு இங்கு நடைபெற்று வந்த பள்ளியை அதன் அறக்கட்டளை இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைத்தது.

    தற்போது 1180 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். அடுத்த ஆண்டில் கூடுதலாக 300 மாணவர்கள் புதிதாக சேர்வார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இப்பள்ளியின் மாணவர்களுக்காக ரூபாய் 13 கோடி செலவில் 42 அறைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட உள்ளது.

    அதில் 32 வகுப்பறை கட்டிடங்கள், 4 ஆய்வுக்கூடங்கள், ஒரு நூலகம், 4 ஆசிரியர்கள் அறைகள், ஒரு கணினி அறை அமைக்கப்படுகிறது.

    தற்போது இந்த பள்ளியில் 40 ஆசிரியர்கள் இருக்கின்றார்கள் கூடுதலாக பகுதி நேர ஆசிரியர்களாக 7 ஆசிரியர்களையும், 17 ஆசிரியர் அல்லாத பணியாளர்களையும் நியமித்திருக்கின்றோம். ஒட்டுமொத்தமாக 64 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளனர்.

    இந்து சமய அறநிலையத்துறை இந்த பள்ளியை ஏற்றுக்கொண்ட பிறகு ரூ.1.47 கோடி செலவில் மராமத்து பணிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பகுதியானது வறுமைக் கோட்டிற்கு கீழும், நடுத்தர மக்களும் அதிகமாக மக்கள் வசிக்கின்ற பகுதி என்பதால் கல்விக் கட்டணத்தையும் வெகுவாக குறைத்துள்ளதோடு, இரண்டு செட்டு சீருடைகள், புத்தகப்பை வழங்கி இருக்கின்றோம்.

    தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற 27 பள்ளிகளில் பயின்று வரும் 13 ஆயிரத்து 863 மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டுக்காக இதுபோன்ற பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×