search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ணகிரி தொழிலாளி கொலை"

    ராயக்கோட்டையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தறி தொழிலாளியை கொன்றதாக கைதான கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையை அடுத்த கெலமங்கலம் அருகே உள்ள தொட்டபேளூர் கிராமத்தை சேர்ந்தவர் மாதேஸ் (வயது 35). தறி தொழிலாளி.

    இவரது மனைவி அம்பிகா (28). இவர்களுக்கு  2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    அம்பிகாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்திக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த மாதேஸ் அம்பிகாவை கண்டித்ததார்.

    கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதால் ராமமூர்த்தி நேற்று முன்தினம் இரவு மாதேசின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கெலமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    கொலை தொடர்பாக மாதேஸின் மனைவி அம்பிகாவிடம் விசாரணை நடத்த போலீசார் அழைத்து சென்றனர். மேலும், கொலையாளிகளையும் தீவிரமாக தேடிவந்தனர்.

    இந்த நிலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டபோது மாதேசை கொன்ற ராமமூர்த்தியையும், அவரது நண்பர் முரளி என்பவரையும் கைது செய்தனர்.

    கைதான ராமமூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியதாவது:

    எனது வீட்டின் அருகே மாதேஸ் வசித்து வந்தார். அவருக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு அம்பிகா என்பவருடன் திருமணம் நடந்தது. அம்பிகாவுக்கும், எனக்கும் கடந்த 8 ஆண்டுகளாக கள்ளக்காதல் தொடர்பு இருந்து வந்தது. இதனை அறிந்த மாதேஸ் பலமுறை 2 பேரையும் கண்டித்துள்ளார். இதனால் அவர் மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    2 பேரையும் ஒருமுறை பஞ்சாயத்தில் நிற்க வைத்து ஊர் பெரியவர்கள் முன்பு இனிமேல் அம்பிகாவை நான் சந்திக்கமாட்டேன் என்று கூறும்படி செய்தார்.

    அதனால் சிறிது காலம் நான் அம்பிகாவை சந்திக்காமல் இருந்து வந்தேன். ஆனால், என்னால் அம்பிகாவை மறக்க முடியவில்லை.

    இதுகுறித்து நான் அம்பிகாவிடம் தெரிவித்தேன். அதற்கு அவர், நம்முடைய கள்ளக்காதலுக்கு எனது கணவர் இடையூறாக இருக்கிறார் என்று தெரிவித்தார். எனவே, நான் மாதேசை கொலை செய்ய முடிவு செய்தேன்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை எனது மாடு மாதேசின் நிலத்தில் மேய்ந்தது. அப்போது அங்கு வந்த அவர் எனது மாட்டை விரட்டினார். உடனே நான் அவரிடம் சென்று மாட்டை எதற்காக விரட்டினாய் என்று தகராறில் ஈடுபட்டேன். அப்போது எனது நண்பர் முரளியும் உடன் இருந்தார்.

    இதில் ஆத்திரம் அடைந்த அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து எங்கள் மீது வீசினார். உடனே நானும், முரளியும் விலகினோம்.

    ஏற்கனவே அம்பிகாவின் மீது இருந்த மோகத்தில் அவரை கொலை செய்ய வேண்டும் என்று ஆத்திரத்தில் இருந்தேன். அப்போது கீழே கிடந்த கத்தியை எடுத்து நானும், முரளியும் சேர்ந்து மாதேசை துரத்தி சென்று அவரது வீட்டில் வைத்து கத்தியால் கழுத்தை அறுக்க முயன்றோம். அப்போது எங்களை அவர் தடுத்து தாக்கினார். இதில் முரளியின் கைவிரலில் காயம் ஏற்பட்டது.

    பின்னர் 2 பேரும் சேர்ந்து அவரை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து கத்தியை எடுத்து கொண்டு பாரந்தூர் வரை நடந்தே சென்றோம். பின்னர் அங்குள்ள ஒரு நிலத்தில் கத்தியையும், ரத்த கறை படித்த சட்டையையும் புதைத்து விட்டு, பின்னர் தேன்கனிக்கோட்டையில் உள்ள ஏரி பகுதிக்கு சென்றோம்.

    அங்கு இரவு தங்கி விட்டு நேற்று காலை அங்கிருந்து புறப்பட்டு முரளியின் நண்பர் வீட்டிற்கு செல்வதற்காக ஓசூர் புறப்பட்டோம். இதைத்தொடர்ந்து ஊருக்குள் என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக தொட்டபேளூருக்கு புறப்பட்டு வந்தோம்.

    அதற்குள் அம்பிகா போலீசாரிடம் மாட்டி கொண்டதால் மாதேசை நான்தான் கொலை செய்திருப்பேன் என்று தகவலை அறிந்த போலீசார் எங்களை தேடி கொண்டிருந்தனர்.

    அப்போது நானும், முரளியும் ஊருக்கு திரும்பி வந்தபோது சின்னட்டி என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் எங்களை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கொலையில் அம்பிகாவுக்கும் தொடர்பு உள்ளதாக மாதேசின் தம்பி கனகராஜ் கொடுத்த புகாரின் பேரில் அம்பிகாவையும் போலீசார் கைது செய்தனர்.

    கைதான அம்பிகா, அவரது கள்ளக்காதலன் ராமமூர்த்தி, முரளி ஆகிய 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ராமமூர்த்தியையும், முரளியையும் சேலம் மத்திய சிறையிலும், அம்பிகாவை சேலம் மகளிர் சிறையிலும் அடைத்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக கூறி தறி தொழிலாளி கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையை அடுத்த கெலமங்கலம் அருகே உள்ள தொட்டபேளூர் கிராமத்தை சேர்ந்தவர் மாதேஸ் (வயது 35). தறி தொழிலாளி.

    இவரது மனைவி அம்பிகா (28). இவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி சஞ்சனாஸ்ரீ(10), தன்யஸ்ரீ(8) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    அம்பிகா பெங்களூருவில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். தினமும் கம்பெனி வேனில் வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பி வந்துவிடுவார்.

    அதே பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ராமமூர்த்தி (23). விவசாயி. இவருக்கு திருமணமாகி சுமா என்ற மனைவியும், ஒரு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையும் உள்ளது.

    அம்பிகாவுக்கும், ராமமூர்த்திக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த மாதேஸ் அம்பிகாவை கண்டித்ததார். ஆனாலும், அம்பிகாவும், ராமமூர்த்தியும் தொடர்ந்து கள்ளத்தொடர்பில் ஈடுபட்டதாக தெரியவந்தது.

    தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக மாதேஸ் இருப்பதால் அவரை கொலை செய்ய ராமமூர்த்தி முடிவு செய்தார்.

    இந்த நிலையில் நேற்று அம்பிகா வேலைக்காக கார்மெண்ட்சுக்கு சென்றுவிட்டார். அவரது 2 பெண் குழந்தைகளும் பள்ளி விடுமுறை காரணமாக தேன்கனிக்கோட்டையில் உள்ள அம்பிகாவின் தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

    இரவு 8 மணியளவில் மாதேஸ் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ராமமூர்த்தி வீட்டிற்குள் சென்று மாதேசின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    அப்போது அம்பிகா வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது மாதேஸ் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே அங்கு திரண்டனர்.

    இதுகுறித்து அவர்கள் கெலமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் சிவலிங்கம், கெலமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராகவன் மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மாதேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த அம்பிகாவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய ராமமூர்த்தியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×