search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரிமினல் அவதூறு வழக்கு"

    அஜித் தோவலின் மகன் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேசுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. #JairamRamesh #AjitDoval #VivekDoval
    புதுடெல்லி:

    இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் விவேக் தோவல், கேமன் தீவுகளில் நிறுவனம் நடத்தி வருவதாகவும், பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் முதலீடுகளில் சந்தேகம் இருப்பதாகவும், ‘தி கேரவன்’ இதழில் கடந்த ஜனவரி மாதம் கட்டுரை வெளியானது. இதனை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

    தன் மீதான குற்றச்சாட்டுகளை விவேக் தோவல் மறுத்தார். அத்துடன், கட்டுரை எழுதிய கவுசல் ரோப், கட்டுரை வெளியிட்ட கேரவன் ஆசிரியர் பரேஷ் நாத், கட்டுரையை சுட்டிக்காட்டி செய்தியாளர் சந்திப்பு நடத்திய ஜெய்ராம் ரமேஷ் ஆகியோருக்கு எதிராக டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட் வளாகத்தில் உள்ள பெருநகர நீதிமன்றத்தில், விவேக் தோவல் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.



    இவ்வழக்கு கடந்த மாதம் 25-ம் தேதி பெருநகர நீதிமன்ற கூடுதல் தலைமை நீதிபதி சமர் விஷால் முன்பு விசாரணைக்கு வந்தது.  கவுசல் சரோப், பரேஷ் நாத் ஆகியோர் ஆஜராகினர். ஜெய்ராம் ரமேஷ் ஆஜராகவில்லை. இதையடுத்து ஆஜரானவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஜெய்ராம் ரமேஷ் மே 9-ம் தேதி நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெய்ராம் ரமேஷ், நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரது ஜாமீன் மனுவை பரிசீலித்த நீதிபதி சமர் விஷால், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 20 ஆயிரம் ரூபாய் பிணைத் தொகை செலுத்தி ஜாமீன் பெற்றுக்கொள்ளும்படி தெரிவித்தார்.

    இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மே 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 27-ம் தேதி சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்படும்.  #JairamRamesh #AjitDoval #VivekDoval
    ×