search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி கூட்டு குடிநீர்"

    • ரூ.144.21 கோடியில் திட்டம்
    • குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் தகவல்

    திருப்பத்தூர்:

    குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியங்களில் 50 ஊராட்சிகளில், 759 கிராமங்கள் பயன்பெறும் வகையில் காவிரி கூட்டு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு வேலூர் மாவட்ட கூட்டுக் குடிநீர் திட்ட 1500 அடி விட்டம் கொண்ட ராட்சச பிரதான குழாயில் இருந்து இணைக்கும் திட்ட பணிகள் நடந்து வருகிறது.

    திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு கூட்ரோடு அருகே சுமார் 10 அடி ஆழத்தில் உள்ள குழாய்களில் இருந்து ஊராட்சிகளுக்கு செல்லும் குழாய்களில் இணைக்கும் பணி பொக்லைன் எந்திரம் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டு கடந்த இரண்டு நாட்களாக இரவு, பகலாக நடந்து வருகிறது.

    இத்திட்ட பணியை குடிநீர் வடிகால் வாரியமேற்பார்வை பொறியாளர்.கிருஷ்ணமூர்த்தி, பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    வேலூர் கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு, மேட்டூர் வழியாக ராட்சச பைப்புகள் அமைக்கப்பட்டு திருப்பத்தூர், ஜோலார்பேட்டை வாணியம்பாடி, , ஆம்பூர், வேலூர், ராணிப்பேட்டை, அரக்கோணம் வரை செல்கிறது.

    இந்த திட்டத்தை தமிழக அரசு விரிவுபடுத்தப்பட்டு ரூ.144.21 கோடி மதிப்பில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்றம்பள்ளி, ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 50 பஞ்சாயத்துகள், 759, குக்கிராமங்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் வழங்கப்பட உள்ளது.

    இதற்கான பிரதான குழாய்களில் இருந்து ஊராட்சிகளுக்கு செல்லும் குழாய்களுடன் இணைக்கும் பணிகள் திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு கூட்ரோடு அருகே 4 வழி சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு இரவு பகலாக பணிகள்நடைபெற்று வருகிறது.

    பணிகள் முடிவடைந்ததும் தேசிய நெடுஞ்சாலையில் தார் சாலை தோண்டப்பட்ட பள்ளங்களும் மூடி புதிய தார்சாலை அமைத்து தரப்படும் இன்னும் 2 நாட்களுக்குள் பணிகள் முழுமையடையும் தற்போது ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கும் பணி 88 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது.

    3 மாத காலத்திற்குள் ஊராட்சிகளுக்கு காவிரி குடிநீர் கிடைக்கும். என தெரிவித்தார். அப்போது நிர்வாக பொறியாளர்.மாணிக்கம், உதவி நிர்வாக பொறியாளர்கள் பற்குணன், தேசிங்குராஜா, மற்றும் உதவி பொறியாளர் பிரகாசம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    50 பஞ்சாயத்துக்கள் 759,கிராமங்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் கிராமங்களுக்கு வழங்கப்பட்டால் திருப்பத்தூர் மாவட்டத்தில் குடிநீர் பஞ்சம் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது.
    • 10 ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்குள் பதிக்கப்பட்ட தண்ணீர் குழாயானது வலு விழந்த நிலையில் தண்ணீர் அழுத்தம் காரணமாக விரிசல் உண்டாகி உடைப்பு ஏற்பட்டு வருகிறது‌.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல்லல் ஒன்றியம் அருகே சொக்கநாதபுரத்தின் வழியாக செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் தற்சமயம் காட்டாற்று வெள்ளம் போல் வீணாக சென்று கொண்டிருக்கிறது.

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில் இருந்து ராமநாதபுரம் வரை செல்லும் இக்கூட்டு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. இந்த குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. தற்போதும் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவதால் அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் இப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்குள் பதிக்கப்பட்ட தண்ணீர் குழாயானது வலு விழந்த நிலையில் தண்ணீர் அழுத்தம் காரணமாக விரிசல் உண்டாகி உடைப்பு ஏற்பட்டு வருகிறது‌.

    எனவே இதைப் போன்ற நிகழ்வுகள் வரும் காலங்களில் ஏற்படாத வண்ணம் புதிய குழாய்களை பதிக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • குடிநீர் வீணாகியது
    • சரி செய்யும் பணி தீவிரம்

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இங்கு சுமார் 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உள்ளனர்.

    இப்பகுதி மக்களுக்காக காவிரி கூட்டு குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு பேரூராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

    வாணியம்பாடி நகர பகுதியில் இருந்து குடிநீர் குழாய் மூலம் பாலாறு படுகையோரம் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு பாலாறு வழியாக உதயேந்திரம் பேரூராட்சிக்கு குடிநீர் குழாய் எடுத்து செல்லப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களாக பெய்த கன மழை காரணமாக பாலாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.

    இதில் உதயேந்திரம் பேரூராட்சிக்கு செல்லக்கூடிய குடிநீர் குழாய்கள் அடித்து செல்லப்பட்டது. இதனால் பல நாட்களாக காவிரி கூட்டு குடிநீர் பாலாற்றில் வீணாக சென்றது.

    இன்று காலையில் பாலாற்றில் நீர் வரத்து குறைந்தது. குடிநீர் குழாயை பேரூராட்சி அதிகாரிகள் பாலாற்று வெள்ளத்தில் இருந்து எடுத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • 150-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
    • அனைத்து குடிநீர் வினியோக பணியாளர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.

    வெள்ளகோவில் :

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றங்கரையோர பகுதியில் உள்ள குடிநீர் கலன்களில், குடிநீர் சேமிக்கப்பட்டு ராட்சத குழாய்கள் வழியாக காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி பகுதிகளுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த பணிகளுக்காக குடிநீர் நீரேற்று நிலையம், குடிநீர் வினியோக மையங்களில் சுமார் குடிநீர் மின் மோட்டார் இயக்குபவர்கள், குடிநீர் வினியோக பணியாளர்கள் மொத்தம் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பணியாளர்கள் அனைவருக்கும் காவிரி குடிநீர் வினியோகம் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் ஆண்டிற்கு ஒரு முறை ஒப்பந்தம் செய்து ரூ.9 ஆயிரத்து 500 முதல் ரூ.16 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கடந்த ஜூன் மாதம் வரை சென்னை தனியார் ஒப்பந்த நிறுவனம் எடுத்த ஒப்பந்தம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு அனைத்து குடிநீர் வினியோக பணியாளர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் காலக்கெடு கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில் கடந்த ஜூலை, ஆகஸ்டு ஆகிய 2 மாதங்களுக்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நேரடியாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் காவிரி குடிநீர் மின் மோட்டார் இயக்குபவர்கள், குடிநீர் வினியோக பணியாளர்கள் அனைவருக்கும் நிலுவையில் உள்ள கடந்த 2 மாத பாக்கி ஊதியம் வழங்கப்படவில்லை.

    இதனால் கடந்த 2 மாத ஊதியத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வழங்காததை கண்டித்தும், உடனடியாக வழங்க கோரியும் நாளை 7-ந்தேதி (புதன்கிழமை) காலை 6 மணி முதல் குடிநீர் மின் மோட்டார் இயக்குபவர்கள், குடிநீர் வினியோகம் செய்பவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

    ×