search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவலர்கள் புகார்"

    புழல் சிறையில் குற்றவாளிகளுக்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுக்க ரூ.2 லட்சம் வரையில் லஞ்சம் கொடுக்கப்படுவதாக சிறை காவலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
    செங்குன்றம்:

    புழல் சிறையில் சட்ட விரோதமாக பல்வேறு செயல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

    இந்த நிலையில் சிறையில் குற்றவாளிகளுக்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுக்க ரூ.2 லட்சம் வரையில் லஞ்சம் கொடுக்கப்படுவதாக சிறை காவலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இது தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட சிறை காவலர்கள் போலீஸ் டி.ஜி.பி. மற்றும் சிறை துறை தலைவர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    புழல் மத்திய சிறையில் சிறை விதிகளுக்கு புறம்பாகவும், எதிராகவும் பணம் படைத்த குற்றவாளிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் குறிப்பிட்ட சில ரவுடிகளுக்கும், ஆதரவாக சிறை நிர்வாகம் செயல்பட்டதன் விளைவாக சிறை அபாய கட்டத்தை நெருங்கி விட்டது.

    பணம் படைத்த மற்றும் பல கோடி மோசடி வழக்குகளில் (குட்கா வழக்கில் உள்ள குற்றவாளிகளுக்கும்) செல்போன், கஞ்சா, சிகரெட் மற்றும் பலவிதமான சுவையான உணவுகள் வழங்கப்படுகின்றன. இதற்கு சிறை துறை அதிகாரிகள் உதவி செய்கிறார்கள்.

    குற்றவாளிகளை சந்திக்க வரும் நண்பர்கள், உறவினர்கள் சிறப்பு நேர்காணல் என்ற பெயரில் தனியாக சந்திக்க அனுமதிக்கப்படுகிறார்கள். அது போன்று வருபவர்களிடமும் பணம் வசூலிக்கப்படுகிறது.

    ஒரு குற்றவாளிக்கு சலுகைகள் கிடைக்க வேண்டுமென்றால் முதல் கட்டமாக ரூ.2 லட்சம் கொடுக்க வேண்டும். போதைப் பொருள் கடத்தல், கொலை வழக்கு கைதிகள், தீவிரவாதிகளுக்கும் சலுகைகள் காட்டப்படுகின்றன.

    அவர்கள் அடைக்கப்பட்டுள்ள பகுதி சட்ட விரோத செயல்களுக்கு கூடாரமாக இருந்து வருகிறது. எந்த ஒரு சிறைக் காவலரும் அங்கு செல்ல இயலாது. தீவிரவாதிகள் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

    போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகள் சிறையின் உள்ளே இருந்தபடியே வெளிநாடுகளுக்கு போதை பொருளை கடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு தேவையான செல்போன்களையும் சிம்கார்டுகளையும் கடத்தி சென்றும் சிறைக்கு வெளியில் இருந்து வீசியும் உதவிகள் செய்யப்படுகின்றன.

    தீவிரவாதிகள் எங்களில் பலரை கொலை செய்து விடுவதாகவும் மீறி அவர்களை எதிர்த்து செயல்பட்டால் பணியிட மாற்றம் செய்து விடுவதாகவும் மிரட்டுகிறார்கள். ஏற்கனவே இது போன்ற நேர்மையாக இருந்த பல சிறைக் காவலர்களை பணியிட மாற்றம் செய்துள்ளதாகவும் கூறி மிரட்டுகிறார்கள்.

    இதுபற்றி சிறை துறை அதிகாரியிடம் கூறியபோது இவையெல்லாம் அரசு சம்பந்தப்பட்டது. நீங்கள் இதை கண்டு கொள்ள வேண்டாம் என்று புறக்கணித்து விட்டார். மேலும் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டவை எல்லாம் நாம் எதுவும் செய்ய இயலாது. காவல் துறைதான் செய்ய வேண்டும். அதனால் உங்கள் பணிகளை மட்டும் நீங்கள் செய்யுங்கள் எனக் கூறி விட்டார்.

    புழல் சிறையில் நடக்கும் முறைகேடுகளுக்கு அதிகாரிகள் துணை போவது பற்றி நேரடியாக எங்களிடம் ரகசிய விசாரணை மேற்கொண்டால் நாங்கள் எங்களிடம் உள்ள பல ஆதாரங்களை தர தயாராக உள்ளோம். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #PuzhalJail
    ×