search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்நடை மருத்துவ படிப்பு"

    • கலந்தாய்வு வருகிற 22-ந்தேதி வரை https://adm.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் நடைபெறுகிறது.
    • செப்டம்பர் 8-ந்தேதிக்குள் தேர்வு செய்த கல்லூரிகளில் மாணவர் சேர வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் 5½ ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்.சி., ஏ.எச்) 660 இடங்கள் இருக்கின்றன.

    இதைத் தவிர திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்களும், ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின் உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்களும் உள்ளன. இந்த 3 பட்டப்படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டவை. இப்படிப்புகளுக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஏற்கனவே நிறைவடைந்து விட்டது. இதைத் தொடர்ந்த பி.வி.எஸ்.சி.-ஏ.எச் படிப்புக்கு பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து கலந்தாய்வு வருகிற 22-ந்தேதி வரை https://adm.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் நடைபெறுகிறது. கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் பதிவு செய்து கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

    தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் சேர்க்கை கடிதத்தை வருகிற 25-ந்தேதி முதல் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செப்டம்பர் 8-ந்தேதிக்குள் தேர்வு செய்த கல்லூரிகளில் மாணவர் சேர வேண்டும்.

    இவ்வாறு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.

    • 4 இளங்கலை கால்நடை மருத்துவ படிப்புகளில் 680 இடங்கள் உள்ளன.
    • 550 இடங்களுக்கு 14 ஆயிரம் விண்ணப்பங்கள் இதுவரையில் பெறப்பட்டுள்ளன.

    சென்னை :

    சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் நாட்டு கோழி கண்காட்சி நடைபெற்றது. இதில் சிறுவிடை, பெருவிடை, தனுவாஸ்-அசீல், நந்தனம் கலப்பினம், கடக்நாத், நிக்கோபாரி, கிளி மூக்கு வால் போன்ற நாட்டு கோழிகள் இடம் பெற்றன.

    இந்த கண்காட்சியை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்வக்குமார் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் '4 இளங்கலை கால்நடை மருத்துவ படிப்புகளில் 680 இடங்கள் உள்ளன. இதில் இட ஒதுக்கீடு போக மீதமுள்ள 550 இடங்களுக்கு 14 ஆயிரம் விண்ணப்பங்கள் இதுவரையில் பெறப்பட்டுள்ளன. தற்போது மருத்துவ படிப்பை போன்று கால்நடை படிப்புக்கும் விண்ணப்பிக்க கடைசிநாள் அக்டோபர் 3-ந்தேதி என்று நீட்டிக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.

    கால்நடை மருத்துவ படிப்புக்கு கடந்த 12-ந்தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை மறுதினத்துடன் (26-ந்தேதி) முடிவடைய இருந்த நிலையில் தற்போது அது நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இதற்கான விண்ணப்பப்பதிவு இணையதளம் மூலம் தொடங்கி இருக்கிறது.
    • விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாக வருகிற 26-ந்தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சென்னை :

    5½ ஆண்டு கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்புகளில் மொத்தம் 580 இடங்கள் காலியாக இருக்கின்றன. இதில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் 120 இடங்களும், தஞ்சாவூர், திருநெல்வேலி, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தலா 100 இடங்களும், சேலம் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 80 இடங்களும், தேனி, உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தலா 40 இடங்களும் வருகின்றன.

    மேலும் சென்னை உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்ப கல்லூரியில் உள்ள 40 உணவு தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கும், 20 பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கும், ஓசூரில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் உள்ள 40 கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கும் என மொத்தம் 680 காலி இடங்கள் இந்த ஆண்டு இருக்கின்றன.

    இதற்கான விண்ணப்பப்பதிவு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம் தொடங்கி இருக்கிறது. விண்ணப்பப்பதிவு தொடங்கிய முதல் நாளில் மட்டும் 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருக்கின்றனர். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாக வருகிற 26-ந்தேதி மாலை 5 மணி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    • திருவள்ளூர் மாவட்டம் கோடுவளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள், பால்வள தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 20 இடங்கள் உள்ளன.
    • உணவுத் தொழில் நுட்ப பட்டப்படிப்புக்கான (பி.டெக்) 40 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 6 இடங்கள் (15 சதவீதம்) போக, மீதமுள்ள 34 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.

    சென்னை:

    தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்த நாடு, சேலம், தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி, வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

    இந்த கல்லூரிகளில் 5½ ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்.சி-ஏ.எச்) 580 இடங்கள் இருக்கின்றன. சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 63 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன. தமிழகத்துக்கு 517 இடங்கள் உள்ளன.

    திருவள்ளூர் மாவட்டம் கோடுவளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள், பால்வள தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 20 இடங்கள் உள்ளன. இதில், உணவுத் தொழில் நுட்ப பட்டப்படிப்புக்கான (பி.டெக்) 40 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 6 இடங்கள் (15 சதவீதம்) போக, மீதமுள்ள 34 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.

    இதேபோல், ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப்படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது.

    இந்த நிலையில் பி.வி.எஸ்.சி.-ஏ.எச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2022-23-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் வரும் 12-ந்தேதி காலை 10 மணி முதல் 26-ந்தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

    அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினர் ஆகியோர்களுக்கான இடஒதுக்கீடு இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விபரங்களையும் இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

    இந்த படிப்புகளுக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.

    ×