search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுசிக் காந்தி"

    • 3 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
    • குவாலிபயர் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சேலம்:

    6-வது டி.என்.பி.எல். போட்டியில் நெல்லை ராயல் கிங்சை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 5-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    சேலத்தில் நடந்த "குவாலிபயர் 1" ஆட்டத்தில் முதலில் விளையாடிய நெல்லை ராயல் கிங்ஸ் அணி 20 ஓவரில் 140 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு 141 ரன் இலக்காக இருந்தது.

    பாபா அபராஜித் அதிக பட்சமாக 33 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), ஷாஜகான் 13 பந்தில் 25 ரன்னும் (3சிக்சர்) எடுத்தனர். மணிமாறன் சித்தார்த், சோனு யாதவ், சந்தீப் வாரியர் தலா 2 விக்கெட்டும், சாய்கிஷோர் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    சாய் கிஷோர் 27 பந்தில் 43 ரன்னும் (2 பவுண்டரி ,4 சிக்சர்) கேப்டன் கவுசிக் காந்தி 46 பந்தில் 40 ரன்னும் (1பவுண்டரி, 2 சிக்சர்), ஆர்.சதீஷ் 19 பந்தில் 31 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். கார்த்திக் மணிகண்டன் 3 விக்கெட்டும், அதிசயராஜ் டேவிட்சன் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    3 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த வெற்றி குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் கவுசிக் காந்தி கூறியதாவது:-

    தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் ஒரே ஒரு போட்டி மட்டும் தான் உள்ளது என்பதால் எதையும் வித்தியாசமாக செய்யாமல் அதிகம் வெற்றி பெற மட்டுமே முயற்சிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆட்டநாயகன் விருது பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் சாய்கிஷோர் கூறும்போது, 'மிகுந்த நம்பிக்கையுடன் என்னை தயார்படுத்திக் கொண்டே இருந்தேன். கிடைக்கும் தருணத்தில் ஷாட்களை அடித்தேன்" என்றார்.

    தோல்வி குறித்து நெல்லை ராயல் கிங்ஸ் கேப்டன் பாபா இந்திரஜித் கூறும்போது, 'நாங்கள் இன்னும் 20 ரன்கள் கூடுதலாக எடுத்து இருக்க வேண்டும். எங்களின் பந்து வீச்சாளர்கள் முடிந்தவரை போராாடினார்கள். இன்னும் ஒரு வாய்ப்பு இருப்பதால் அதில் வென்று மீண்டும் எங்கள் பயணத்தை தொடருவோம்' என்றார்.

    கோவையில் நாளை இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 'குவாலிபயர் 2' ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு 2-வது அணியாக தகுதிபெறும்.

    ×