search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவிஞர் வைரமுத்து"

    அண்ணாவையும், கருணாநிதியையும் தமிழர்கள் நெஞ்சில் நிறுத்த வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து கூறினார். #Vairamuthu #Karunanidhi #MKStalin
    சென்னை:

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை, கவிஞர் வைரமுத்து நேற்று சந்தித்தார். அப்போது, அண்ணா அறிவாலயத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சிலை அமைத்ததற்காக மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தார்.

    அப்போது, கவிஞர் வைரமுத்துவுக்கு கருணாநிதியின் மார்பளவு சிறிய வெண்கல சிலையை நினைவு பரிசாக வழங்கி மு.க.ஸ்டாலின் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். இந்த சந்திப்பின்போது, தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, எ.வ.வேலு எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    சந்திப்பு முடிந்து வெளியே வந்த கவிஞர் வைரமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:-

    மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் சிலையை பரிசாக தந்துள்ளார். கருணாநிதியின் தமிழுக்கும், அவரது ஆற்றலுக்கும், இனமொழி போராட்டத்துக்கும், அவரது பேரறிவுக்கும் அடையாளமாக இந்த சிலை என்னோடு இருந்து வழிகாட்டும் என்று நான் நம்புகிறேன்.

    கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும் ஒருவருக்கொருவர் தாங்கள் ஆற்ற வேண்டிய பணிகளை செய்துவிட்டனர். இதன் மூலம், திருவள்ளுவர் தந்த இலக்கணத்துக்கு தந்தையும், மகனும் இலக்கியமாக திகழ்கிறார்கள்.

    கருணாநிதியின் சிலை திறப்பு விழா என்பது வெறும் விழா அல்ல. அது சடங்கு அல்ல. சம்பிரதாயம் அல்ல. அந்த விழா கருணாநிதியை உயிராக கருதியவர்கள், அவரை இன்னும் நெஞ்சில் சுமந்து கொண்டு இருப்பவர்கள் அத்தனை பேரின் கண்களிலும் ஈரம் கட்டிய நிகழ்ச்சி அது. அந்த நிகழ்ச்சி என்பது கருணாநிதிக்கு, மு.க.ஸ்டாலின் செய்த மிகப்பெரிய வரலாற்று திருப்பணி என்று நான் நினைக்கிறேன்.



    அதுவும், அண்ணாவுக்கு பக்கத்தில் கருணாநிதியை நிறுத்தி வைத்த அந்த அருஞ்செயலுக்காகவே மு.க.ஸ்டாலினை நான் கொண்டாடுகிறேன். அண்ணா வேறு, கருணாநிதி வேறு அல்ல. மிக முக்கியமாக தமிழர்கள் கவனிக்க வேண்டியது ஒன்று உண்டு. தமிழுக்காகவும், இனத்துக்காகவும், நாட்டுக்காகவும் பாடுபட்ட அந்த இருபெரும் தலைவர்களும் அருகருகே துயில் கொண்டு இருக்கிறார்கள். அருகருகே நின்று கொண்டு இருக்கிறார்கள். தமிழர்களும் இந்த 2 பேரையும் நெஞ்சில் அருகருகே நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Vairamuthu #Karunanidhi #MKStalin
    நோயின் பிடியில் இருந்து கருணாநிதி புத்துயிர் பெற்று வருவார் என்று கவிஞர் வைரமுத்து நம்பிக்கை தெரிவித்தார். #Karunanidhi #KauveryHospital #Vairamuthu
    சென்னை:

    சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் கருணாநிதி உடல்நலன் குறித்து கவிஞர் வைரமுத்து தினமும் நேரில் வந்து நலம் விசாரித்து செல்கிறார். அதன்படி காவேரி ஆஸ்பத்திரிக்கு நேற்று வருகை தந்த கவிஞர் வைரமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:-

    பின்னடைவு இல்லை என்பதே ஓர் ஆறுதலாக இருக்கிறது. கருணாநிதியுடைய வாழ்வில் சோதனைகள் வந்த காலம் எல்லாம் அது அவருக்கு மேன்மையே தந்து இருக்கிறது.

    நெருக்கடி நிலை என்ற சோதனை வந்த போது ஒரு இயக்கத்தை ஒரு தலைவன் எப்படி காப்பாற்ற முடியும் என்ற புகழை அவர் ஈட்டினார். எம்.ஜி.ஆர். பிரிந்த பிறகு 13 ஆண்டுகள் ஆட்சி இல்லாமல் ஒரு தலைவன் எப்படி இயக்கத்தை வழி நடத்த முடியும், கட்டிக்காக்க முடியும் என்ற புகழை அவர் பெற்றார்.

    ஒவ்வொரு சோதனையிலும் காலம் அவர் புகழை வளர்த்தே வந்திருக்கிறது. இப்போது இந்த நோயின் தாக்கம் உடல்நலக்குறைவு என்ற இந்த பின்னடைவு கூட கருணாநிதிக்கு நன்மையே தந்து இருக்கிறது என்று சமூக உணர்வாளர்கள் கருதுகிறார்கள்.

    கருணாநிதி மீது இருந்த வசை கழிந்துவிட்டது. கருணாநிதி மீது இருந்த விமர்சனம் ஒழிந்துவிட்டது. கருணாநிதி மீது சொல்லப்பட்ட குறைகள் எல்லாம் சலவை செய்யப்பட்டு விட்டது. ஒட்டுமொத்த சமூகமும் கருணாநிதியின் பெருமைகளை உணர்ந்துக் கொள்வதற்கு இந்த சந்தர்ப்பம் பெரிய வாசலை திறந்து விட்டிருக்கிறது என்று நாங்கள் கருதுகிறோம்.



    கருணாநிதியின் பெருமையை இப்போது தான் தமிழகம் கருத்து வேறுபாடின்றி ஒப்புக்கொண்டு இருக்கிறது. கைரிக்‌ஷாக்களை ஒழித்த தலைவர் இவர் தான் என்ற செய்தி இளைய உலகத்துக்கு தெரிந்து இருக்கிறது.

    இலவச மின்சாரம் பெற்ற விவசாயிகள் கருணாநிதியை வாழ்த்துகிறார்கள். இட ஒதுக்கீட்டு மூலமாக வாழ்வில் முன்னேறிய பழைய தலைமுறை இப்போது தான் கருணாநிதி புகழை பாடுகிறது.

    செம்மொழி என்ற பெருமையை தமிழுக்கு பெற்று தந்த தலைவன் என்பதை ஊடகங் கள் இப்போது உயர்த்தி பிடிக் கின்றன. விமர்சனங்கள் என்ற கரைகள் எல்லாம் இந்த குறையால் தீர்ந்து விட்டது என்று நாம் கருத வேண்டி இருக்கிறது. உலகத்தில் மிக அதிகமாக கவனித்துக்கொண்டிருப்பவரும், உலகத்தில் தமிழர்களால் அதிகம் கொண்டாடப்படுகிறவரும் கருணாநிதி என்ற செய்தி ஓரளவு எங்களுக்கு ஆதரவு தருகிறது. எல்லா சோதனைகளிலும் புகழோடு மீண்டு வந்த கருணாநிதி நோயின் பிடியில் இருந்தும் மீண்டு புத்துயிர் பெற்று வருவார் என்ற நம்பிக்கை தமிழர்கள் நெஞ்சில் இப்போது நிறைந்திருக்கிறது. காலம் கருணாநிதியை வாழ்த்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Karunanidhi #KauveryHospital  #Vairamuthu

    கருணாநிதி தனக்கு பரிசளித்த பேனாவால் கவிதை படைத்த கவிஞர் வைரமுத்து, ‘தொட்டகோல் துலங்க செய்வேன்’ என்று கூறியுள்ளார். #Karunanidhi #KavignarVairamuthu
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியை கவிஞர் வைரமுத்து தன்னுடைய பிறந்தநாளையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்து வாழ்த்து பெற்றார். கருணாநிதியை சந்தித்த அந்த நேரத்தில், தனக்கு ஒரு பிறந்தநாள் பரிசு வேண்டும் என்று கருணாநிதியிடம், கவிஞர் வைரமுத்து கேட்டார்.

    முகம் தூக்கி பார்த்த கருணாநிதி, ‘என்ன வேண்டும்’ என்பது போல் வைரமுத்துவை உற்று நோக்கினார். ‘நீங்கள் தமிழ் எழுதிய உங்கள் பேனா வேண்டும்’ என்றார் கவிஞர் வைரமுத்து. உடனே கருணாநிதி அருகிலிருந்த மகள் கனிமொழியிடம், கண்காட்டி ஆணையிட, கனிமொழி வீட்டிற்குள் சென்று கருணாநிதி எழுதி வந்த பேனாவை கொண்டுவந்து, கருணாநிதியிடம் கொடுத்தார்.



    சிரித்த முகத்துடன் கருணாநிதி அதை கவிஞர் வைரமுத்துவுக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கினார். அந்த நேரத்தில் உள்ள மகிழ்வுடன் பேனாவை பெற்றுக்கொண்ட கவிஞர் வைரமுத்து, “என் வாழ்நாளில் கருணாநிதியிடம் நான் பெற்ற பெரும் பரிசு இதுதான்” என்று உள்ளம் உருகினார்.

    கருணாநிதியிடம் அவர் எழுதிய பேனாவை பெற்ற வைரமுத்து அந்த பேனாவால் கவிதை படைத்துள்ளார். அந்த கவிதை வருமாறு:-

    கண்ணிலே குடியிருக்கும்

    கலைஞரே! கொஞ்ச நாளாய்ச்

    சின்னதாய் எனக்கோர் ஆசை

    செவிசாய்த்தே அருள வேண்டும்

    பொன்பொருள் வேண்டாம்; செல்வ

    பூமியும் வேண்டாம்; வேறே

    என்னதான் வேண்டும்; உங்கள்

    எழுதுகோல் ஒன்று வேண்டும்

    எழுதுகோல் அன்று; நாட்டின்

    எழுகோடித் தமிழர் நெஞ்சை

    உழுதகோல்; உரிமைச் செங்கோல்!

    உழைக்கின்ற ஏழையர்க்காய்

    அழுதகோல்; இலக்கியத்தின்

    அதிசய மந்திரக்கோல்

    தொழுதுகோல் கொண்டேன்;

    நீங்கள் தொட்டகோல் துலங்கச்செய்வேன்

    இவ்வாறு அந்த கவிதையில் வைரமுத்து கூறியிருந்தார்.  #Karunanidhi #KavignarVairamuthu
    ×