search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன்னியாகுமரி சிறுவன் கொலை"

    தந்தை வாங்கிய கடனுக்காக ஒன்றும் அறியாத அப்பாவி சிறுவனை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தென்தாமரைகுளம்:

    கன்னியாகுமரி அருகே உள்ள ஆரோக்கியபுரத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய கெபின்ராஜ் (வயது 36) மீனவர். இவரது மனைவி சகாய சிந்துஜா (32). இந்த தம்பதியின் 4 வயது மகன் ரெய்னா.

    நேற்று காலை சிறுவன் ரெய்னா தனது வீடு அருகே விளையாடிக்கொண்டு இருந்தான். சிறிது நேரம் கழித்து அவனை பெற்றோர் தேடியபோது அவன் மாயமாகி இருந்தான். இதனால் அக்கம், பக்கத்தினரிடம் பெற்றோர் விசாரித்தனர்.

    அப்போது அதே ஊரை சேர்ந்த அந்தோணிசாமி (38)என்பவர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்ததாகவும், அவர் தனது மோட்டார் சைக்கிளில் ரெய்னாவை அழைத்துக் கொண்டு சென்றதை பார்த்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், செல்போன் மூலம் அந்தோணிசாமியை தொடர்பு கொண்டனர். மேலும் அவரது வீட்டிற்கு தேடிச் சென்றபோது வீடு பூட்டப்பட்டு இருந்தது. அக்கம், பக்கத்து வீட்டாரிடம் விசாரித்தபோதும் அந்தோணிசாமி மற்றும் மாயமான ரெய்னா பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி போலீசில் ஆரோக்கிய கெபின்ராஜ் புகார் செய்தார்.

    அந்தோணிசாமியிடம் ரூ.58 ஆயிரம் கடன் வாங்கி இருந்ததாகவும், அதை உடனே திருப்பிக் கேட்டு அவர் அடிக்கடி தகராறு செய்துவந்ததாகவும், இதனால் தனது மகன் ரெய்னாவை அந்தோணிசாமி கடத்திச் சென்றுவிட்டதாகவும் அவர் புகாரில் கூறியிருந்தார்.

    உடனே போலீசாரும் அந்தோணிசாமியின் செல்போன் டவர் மூலம் விசாரணையை தொடங்கினார்கள். அந்தோணிசாமி கேரள மாநிலம் பாலக்காட்டில் இருப்பதாக செல்போன் டவர் மூலம் தெரியவந்தது. உடனடியாக கன்னியாகுமரி போலீசார் பாலக்காடு விரைந்தனர். அங்கு வைத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    ஆனால் அவருடன் சிறுவன் ரெய்னா இல்லை. இதனால் போலீசார், ரெய்னா பற்றி அந்தோணிசாமியிடம் விசாரித்த போது அவன் கொல்லப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது. தன்னிடம் வாங்கிய கடனை திருப்பி கொடுக்கும்படி கேட்டு ஆரோக்கிய கெபின்ராஜிடம், அந்தோணிசாமி அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

    நேற்றும் அவர் ஆரோக்கிய கெபின்ராஜ் வீட்டுக்கு சென்று கடன் பணத்தை கேட்டு உள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரத்துடன் அங்கிருந்து வெளியே சென்ற அந்தோணிசாமி வீடு அருகே விளையாடிக் கொண்டு இருந்த சிறுவன் ரெய்னாவை பார்த்து உள்ளார். உடனே அவனிடம் நைசாக பேச்சுக் கொடுத்து தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு தென்தாமரைகுளம் அருகே உள்ள கீழ மணக்குடி-முகிலன் குடியிருப்பு இடையே உள்ள கடற்கரையில் உள்ள தென்னந்தோப்புக்கு சென்றார்.

    அங்குள்ள தண்ணீர் தொட்டியில் ரெய்னாவை மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்தார். கடனை திருப்பித்தராத ஆரோக்கிய கெபின்ராஜை பழிவாங்குவதற்காக இந்த கொலையில் ஈடுபட்டதாக போலீசாரிடம் அந்தோணிசாமி தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து அந்தோணிசாமியை போலீசார் கைது செய்தனர். மேலும் சிறுவன் ரெய்னா கொலை செய்யப்பட்ட தென்னந்தோப்பு தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால் இந்த தகவலை தென்தாமரை குளம் போலீசாருக்கு கன்னியாகுமரி போலீசார் தெரிவித்தனர்.

    தென்தாமரைகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையிலான போலீசார் கொலை நடந்த தென்னந்தோப்புக்கு விரைந்தனர். அங்கு உள்ள தண்ணீர் தொட்டியை பார்த்த போது அதில் சிறுவன் ரெய்னா பிணமாக மிதந்தது தெரிய வந்தது. ரெய்னாவின் உடலைப் பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதது பார்ப்பவர்களை உருக்குவதாக இருந்தது. போலீசார் ரெய்னாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கேரளாவில் கைது செய்யப்பட்ட அந்தோணி சாமியை போலீசார் கன்னியாகுமரி கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தந்தை வாங்கிய கடனுக்காக ஒன்றும் அறியாத அப்பாவி சிறுவனை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×