search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடலில் பாய்ந்து விபத்து"

    மைக்ரோனேசியா நாட்டில் பயணிகள் விமானம் கடலில் பாய்ந்து நேரிட்ட விபத்தில் பயணிகள், சிப்பந்திகள் அனைவரும் அதிசயமாக உயிர் தப்பினர். #Micronesian #AirNiuginiBoeing737
    பாலிகிர்:

    பசிபிக் பெருங்கடல் தீவு நாடுகளில் ஒன்று, மைக்ரோனேசியா. அந்த நாட்டின் போன்பெய் தீவில் இருந்து ‘ஏர் நியுகினி போயிங்-737’ பயணிகள் விமானம், பப்புவா நியு கினியாவின் தலைநகர் போர்ட் மாரஸ்பிக்கு நேற்று புறப்பட்டு சென்றது. இந்த விமானம், மைக்ரோனேசியாவில் உள்ள சூக் தீவின் வெனோ நகரம் வழியாக செல்லக்கூடியதாகும்.

    இந்த விமானத்தில் 35 பயணிகளும், 12 சிப்பந்திகளும் என மொத்தம் 47 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம், வெனோ நகரில் தரை இறங்கி செல்ல வேண்டும். ஆனால் தரையிறங்கும்போது, சற்றும் எதிர்பாராத வகையில் ஓடு தளத்துக்கு செல்வதற்கு முன்பாக கடலில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பயணிகள் அலறினர். இடுப்பளவு தண்ணீரில் விமானம் நின்றது.



    உடனடியாக பயணிகள், விமானத்தில் இருந்து வெளியேற தொடங்கினர். சிலர் நீந்திக் கரை சேர்ந்தனர். இருப்பினும் உள்ளூர் மீனவர்களின் மீன்பிடி படகுகள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. அந்தப் படகுகள் மூலம் பயணிகள் கரைக்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்தனர்.

    இந்த விபத்தில் பயணிகள், சிப்பந்திகள் அனைவரும் அதிசயமாக உயிர் தப்பினர்.

    விபத்துக்குள்ளான விமானத்தில் மைக்ரோனேசியாவை சேர்ந்த நாளிதழ் ஒன்றின் நிர்வாக ஆசிரியரான பில் ஜேனசும் பயணம் செய்தார். விமானம் விபத்துக்குள்ளானது பற்றி அவர் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் வீடியோவும், தகவலும் வெளியிட்டுள்ளார்.

    அவர் தனது பதிவில், “அது கனவு போல அமைந்து விட்டது. விமானம் கடலில் பாய்ந்து நின்ற இடத்தில் இடுப்பளவு தண்ணீர் இருந்தது. நெருக்கடி கால வழியாக விமானத்தில் இருந்து நாங்கள் வெளியேறினோம்” என கூறி உள்ளார்.

    ஜேம்ஸ் எயின்கெலுவா என்ற மற்றொரு பயணி கூறும்போது, “ஓடுதளத்தை அடைவதற்கு 500 மீட்டருக்கும் அதிகமான தூரம் இருந்தபோதே விமானம் கடலுக்குள் பாய்ந்து விட்டது. நல்ல வேளையாக இது பகல் நேரத்தில் நடந்தது. விமானம் கடலுக்குள் பாய்ந்து நின்றதும், எங்களை எல்லாம் மீட்டுச்செல்வதற்கு உள்ளூர் மக்கள் மீன்பிடி படகுகளுடன் வந்து உதவினர்” என கூறினார்.

    இந்த விமான விபத்து தொடர்பான படங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி, தீவிரமாக பரவின. அவற்றில் விமானம் இடுப்பளவு தண்ணீரில் பாய்ந்து நின்றது, சிறிய படகுகள் மூலமாக பயணிகள் மீட்கப்பட்டது தொடர்பான காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

    இந்த விபத்து பற்றி ஏர் நியுகினியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விமானம் கடலுக்குள் பாய்ந்துவிட்டாலும் அதில் இருந்த 35 பயணிகளும், 12 சிப்பந்திகளும் பாதுகாப்பாக வெளியேற முடிந்திருக்கிறது. பயணிகள், சிப்பந்திகள் பத்திரமாக வெளியேறுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. பலத்த மழை பெய்து மோசமான வானிலை நிலவியதுதான் இந்த விபத்துக்கு காரணம்”என கூறப்பட்டுள்ளது.

    மீட்கப்பட்ட பயணிகள், சிப்பந்திகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். குறிப்பிடத்தக்க அளவுக்கு யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

    இந்த விபத்தில் பத்திரமாக உயிர் பிழைத்தது, பயணிகளுக்கும், சிப்பந்திகளுக்கும் மிகுந்த நிம்மதியை அளித்துள்ளது. விபத்துக்குள்ளான விமானம் பப்புவா நியு கினியா நாட்டுக்கு சொந்தமானது.  #Micronesian #AirNiuginiBoeing737
    ×