search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கங்கணா ரனாவத்"

    • பா.ஜ.க. டிக்கெட் தந்தால் நான் போட்டி போடுவேன்.
    • பிரதமர் மோடி மாபெரும் தலைவர்.

    புதுடெல்லி :

    பிரபல இந்தி நடிகை கங்கணா ரனாவத் (வயது 35), இமாசல பிரதேச மாநிலத்தின் மணாலியைச் சேர்ந்தவர். அந்த மாநிலத்தில் அடுத்த மாதம் 12-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

    இந்த நிலையில், பா.ஜ.க. ஆதரவு முகம் காட்டி வருகிற நடிகை கங்கணா ரனாவத், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து கூறியதாவது:-

    எனது சொந்த மாநிலத்தின் மக்களின் முன்னேற்றத்துக்காக நான் உழைக்கிற வாய்ப்பு கிடைத்தால் அது எனக்கு பெருமை.

    என்ன நிலைமை என்றாலும், அரசு எனது பங்களிப்பை விரும்பினால், எல்லா விதத்திலும் நான் பங்கேற்பதற்கு தயாராக திறந்த மனதுடன் இருக்கிறேன்.

    பாராளுமன்ற தேர்தலில் மாண்டி தொகுதியில் இருந்து நான் போட்டியிட வேண்டும் என்று மக்கள் விரும்பி, பா.ஜ.க. டிக்கெட் தந்தால் நான் போட்டி போடுவேன்.

    இமாசலபிரதேச மக்கள், அவர்களுக்கு சேவை ஆற்றுகிற வாய்ப்பினை எனக்கு தந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன். எனவே நிச்சயமாக அது எனது அதிர்ஷ்டம்தான்.

    ஆம் ஆத்மியின் போலியான வாக்குறுதிகளுக்கு இமாசலபிரதேச மாநிலம் இரையாகாது. இந்த மாநில மக்கள் தங்கள் சொந்த சூரிய மின்சக்தியை கொண்டுள்ளனர். அவர்கள் சொந்தமாக காய்கறிகளை சாகுபடி செய்கிறார்கள்.

    எனவே இலவச திட்டங்கள், அறிவிப்புகள் எல்லாம் இங்கு செல்லுபடியாகாது.

    பிரதமர் மோடி மாபெரும் தலைவர். ஆனால் அவரும், ராகுல் காந்தியும் போட்டியாளர்கள் என்பது வருத்தம் அளிக்கும் விஷயம்.

    மீண்டும் டுவிட்டர் சமூக ஊடகத்துக்கு வருவீர்களா என்று கேட்கிறீர்கள். நான் அதில் ஓராண்டு காலம் இருந்தேன். டுவிட்டரால் அந்த ஓராண்டு காலம்கூட என்னை சகித்துக்கொள்ள முடியவில்லை. இன்ஸ்டாகிராமில் சேர்ந்து ஓராண்டாகி விட்டது. நான் ஏற்கனவே 3 எச்சரிக்கைகளை பெற்றிருக்கிறேன். எனவே நான் இன்ஸ்டாகிராமை பயன்படுத்த மாட்டேன் என்று கூறினேன். இந்த பிரச்சினையை எனது குழு கையாண்டது. இப்போது எல்லாமே சரியாகி விட்டது.

    நான் மீண்டும் டுவிட்டருக்கு வந்தால், மக்களின் வாழ்க்கை சுவாரசியமாகி விடும். என் வாழ்க்கையோ பிரச்சினைக்குள்ளாகி விடும். நான் டுவிட்டரில் இல்லாததால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது கணக்குக்கு புத்துயிரூட்டினால், நிச்சயமாக உங்களுக்கு நிறைய 'மசாலா' கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×