search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒடிசாவிற்கு கனமழை எச்சரிக்கை"

    வங்க கடலில் உருவாகியுள்ள டிட்லி புயல் நாளை கரையை கடப்பதால் ஒடிசா மாநிலத்தில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #CycloneTitli
    புவனேஸ்வர்:

    வங்க கடலின் மேற்கு மத்திய பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று நேற்று புயலாக மாறியது.

    ‘டிட்லி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் தற்போது ஒடிசாவின் கோபால்பூர் நகருக்கு தென்கிழக்கே 320 கி.மீ தொலைவிலும், ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கே 270கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

    இந்த புயலானது இன்று மதியம் மேலும் அதி தீவிர புயலாக மாறியது. அது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை ஒடிசாவின் கோபால்பூருக்கு வடக்கு ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ஒடிசாவை தாக்கியதும் அந்த புயல் மீண்டும் வடகிழக்கு திசையில் திரும்பி மேற்கு வங்காளம் நோக்கிச் செல்லும். அதன் பிறகு ஒடிசா கடற்கரை பகுதியில் படிப்படியாக வலு இழக்கும்.

    புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 80 முதல் 90 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். காற்றின் வேகம் 100 முதல் 125 கி.மீ வரை அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.

    வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் அடுத்த 48 மணிநேரத்துக்கு மிக பலத்த மழை மற்றும் மிதமிஞ்சிய மழை கொட்டும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    இதையடுத்து ஒடிசா முழுவதும் வருவாய்த்துறை அதிகாரிகள் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து மக்களை உஷார் படுத்தி உள்ளனர்.


    இன்று இரவு முதலே மழை கொட்டத் தொடங்கும் என்பதால் ஒடிசாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கஜபதி, கன்ஜம், பீரி, ஜகத்சிங்பூர் மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களிலும், முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மாநில தலைமைச் செயலாளர் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    வெள்ள மீட்பு பணிக்காக 300 மோட்டார் படகுகளுடன் தேசிய பேரிடர் மீட்பு படையினரும், ஒடிசா மாநில அதிவிரைவு படை மற்றும் தீயணைப்பு படையினர், காவல்துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #CycloneTitli
    ×