search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐநா வேண்டுகோள்"

    அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு முன்பாக அரசியல் கைதிகளை விடுவிக்கும் பணியை வடகொரியா தொடங்க வேண்டும் என ஐ.நா. வல்லுநர் கேட்டுக்கொண்டுள்ளார். #TrumpKimMeeting
    ஜெனீவா:

    அடுத்தடுத்த அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகள் என கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை அதிகரித்து வந்த வடகொரியா, தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது. அணு ஆயுத சோதனையை கைவிடுவதாக அறிவித்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார்.

    அதன்பின்னர் பகைமையை மறந்து வடகொரியாவும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தைக்கும் தயாராகி உள்ளன. இந்த வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், கிம் ஜாங் அன்னும் நேரடியாக சந்தித்து பேச உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.

    இந்த சந்திப்பையொட்டி வடகொரிய அரசாங்கம், அரசியல் கைதிகளை விடுவிக்கும் பணியை தொடங்க வேண்டும் என வடகொரியாவுக்கான ஐ.நா. மனித உரிமைகள் பிரிவு அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.



    வடகொரியாவில் மனித உரிமைகள் தொடர்பான நிலவரங்களை கவனித்து வரும் ஐ.நா. சிறப்பு அதிகாரியான தாமஸ் ஓஜா குயின்டனா, ஜெனீவாவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கைது செய்யப்பட்ட மூன்று அமெரிக்கர்களை வடகொரியா கடந்த மாதம் விடுதலை செய்தது வரவேற்கத்தக்கது. இது நல்லெண்ண அடிப்படையாகும். இது படிப்படியான நடைமுறையாகவும் இருக்கலாம். ஒருவேளை அப்படி இல்லை என்றால், வடகொரியா சிறைகளை திறந்து, அரசியல் கைதிகளை படிப்படியாக விடுவிக்க வேண்டும். 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் வடகொரியாவில் சிறை வைக்கப்பட்டிருக்கலாம்.

    டிரம்ப்-கிம் ஜாங் அன் இடையிலான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். பேச்சுவார்த்தையில் மனித உரிமைகள் இடம்பெற வேண்டும். ஏனென்றால் மனித உரிமைகள், பாதுகாப்பு மற்றும் அமைதி ஆகியவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #TrumpKimMeeting
    ×