search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏற்காடு கோடை விழா"

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஏற்காடு கோடை விழாவை நாளை (12-ந் தேதி) காலை தொடங்கி வைக்கிறார்.
    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு 43-வது கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி நாளை (12-ந் தேதி) தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது.

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஏற்காடு கோடை விழாவை நாளை (12-ந் தேதி) காலை தொடங்கி வைக்கிறார். பின்னர் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் பேசுகிறார்.

    இந்த விழாவில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி இன்று இரவு காரில் சேலத்திற்கு வருகிறார். அப்போது சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. தலைமையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    நாளை( 12-ந் தேதி) காலை ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்கண்காட்சியை தொடங்கி வைத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதில் அமைச்சர்கள் சீனிவாசன், துரைகண்ணு, வெல்லமண்டி நடராஜன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்து கொள்கிறர்கள்.

    மாலையில் ஏற்காட்டில் இருந்து புறப்பட்டு சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வு மாளிகைக்கு வரும் எடப்பாடி பழனிசாமி மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு நடத்துகிறார்.

    13-ந் தேதி காலை ரூ.82.27 கோடி செலவில் சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானாவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

    பின்னர் மாலையில் ஈரோடு மாவட்டம் பவானியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி கார் மூலம் கோவை சென்று அங்கிருந்து விமானத்தில் சென்னைக்கு செல்கிறார்.

    ஊரக வளர்ச்சி துறை, தோட்டக்கலைத்துறை, காவல் துறை, போக்குவரத்து துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகிய துறைகள் சார்பில் கடந்த 4 நாட்களாக ஏற்காடு சுற்றுலா பகுதிகள் முழுவதும் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

    ஊரக வளர்ச்சி துறை சார்பில் 400-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், 200-க்கும் மேற்பட்ட துப்புரவு ஊழியர்கள், சுகாதார பணிக்கு 15 வாகனங்களும், 13 இடங்களில் தற்காலிக கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் வசதிக்காக சேலம் மாநகராட்சி மூலம் 3 லாரிகளில் தினமும் 2 முறை மேட்டூர் குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படுகிறது.

    தோட்டக்கலை துறை மூலம் 200-க்கும் மேற்பட்ட தோட்டப்பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். அண்ணாபூங்காவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும், கூடுதலாக புதுப்பிக்கப்பட்ட கழிப்பறைகளும் செயல்பட்டு வருகின்றன.



    இந்தாண்டு 2 லட்சம் மலர்களுடன் 10 ஆயிரம் மலர் தொட்டிகளும் தயார் நிலையில் உள்ளன. இதில் சால்வியா, மேரிகோல்டு, டேலியா, ஜெரிபேரா, பால்சம், பேன்சி ரோஜா மலர்கள் மற்றும் கொய் மலர்கள் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டு கொய்மலர்களில் விமானம், விவசாயிகள் பயன்படுத்தும் டிராக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.



    ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை யொட்டி 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை சுற்றுலா பயணிகள் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பில் 50-க்கும் மேற்பட்ட கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் ஏற்காட்டில் முக்கிய இடங்களை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் ஏற்காட்டில் இருந்து ஏற்காடு ஏரி, லேடீஸ் சீட், பகோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில் ஆகிய இடங்களை சுற்றி பார்க்க பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

    நெடுஞ்சாலைத்துறை சார்பில் 300-க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் மற்றும் சாலைப்பணியாளர்கள் மலைப்பாதைகளில் விழிப்புணர்வு பலகை, புனரமைக்கப்பட்ட தடுப்பு சுவர், மலைப்பாதை முழுவதும் சாலை தடுப்பு சுவர்களுக்கு வண்ணம் பூசப்பட்டு, ஒளி விளக்கு ஸ்டிக்கர்களும் பொருத்தப்பட்டு வருகிறது.

    போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், சுற்றுலா பகுதிகளில் 7 இடங்களில் வாகனம் நிறுத்துவதற்கான இடங்களும், அரசு, தனியார் பஸ்கள் தவிர மற்ற அனைத்து இருசக்கர வாகனம், கார், சுற்றுலா வேன்கள், கனரக வாகனங்களும் சேலம் அஸ்தம்பட்டி கோரி மேடு வழியாக ஏற்காடு வந்தடைந்து மீண்டும் கொட்டசேடு, குப்பனூர், அயோத்தியாப்பட்டணம் வழியாக சேலம் செல்ல வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மலர் கண்காட்சியை காணவரும் பார்வையாளர்கள் பயனடையும் வகையில் அரசு சார்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி வேம்பு, புளியன் உள்பட பல்வேறு மரக்கன்றுகளும் வழங்கப்படுகிறது.

    இதற்கிடையே ஏரிப் பூங்காவில் புதுப்பிக்கப்பட்ட நடைபாதை, புதிதாக கட்டப்படும் கடைகள் மற்றும் சந்தைப்பேட்டை பகுதிகளை கலெக்டர் ரோகிணி நேற்று பார்வையிட்டார். மேலும் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட உள்ள தங்கும் விடுதிகளையும் அவர் பார்வையிட்டார். அப்போது மாநில கூட்டுறவு தலைவர் இளங்கோவன், ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ. சித்ரா, ஏற்காடு முன்னாள் சேர்மன் அண்ணாதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.

    கோடை விழாவில் முதல்-அமைச்சர் பங்கேற்பதையொட்டி சேலம் புறநகர் மாவட்டத்தை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    கோடை விழாவின் தொடக்க நாளான நாளை மறுநாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் வருடந்தோறும் மே மாதத்தில் கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான கோடை விழா வருகிற 12-ந் தேதி தொடங்கி 16-ந் தேதிவரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான பணிகளில் தோட்டக்கலை துறை மற்றும் மற்ற துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    மலர் கண்காட்சிக்காக ஏற்காடு அண்ணா பூங்காவில் 10 ஆயிரம் பூந்தொட்டிகளை ஊழியர்கள் தயார்படுத்தி வருகிறார்கள். இதில் சால்வியா, மேரிகோல்டு, வின்கா, தினியா, பிரான்சி, மெடானியா, டேலியா, ஜெரியா, காஸ்மாஸ், ஜெர்பேரா, ரோஜா போன்ற ரக பூந்தொட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு வருகிறது.

    இது தவிர மலர் கண்காட்சிக்காக ஏற்காடு ரோஜா தோட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக விதவிதமான ரோஜா மலர்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

    கோடை விழாவின் தொடக்க நாளான நாளை மறுநாள் (12-ந் தேதி) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.

    இதையட்டி ஏற்காடு செல்லும் மலை சாலை தூய்மை படுத்தப்பட்டு சாலையின் நடுவில் வெள்ளை கோடு போடும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    மலை பாதைகளில் நெடுஞ்சாலை துறையினர் பராமரிப்பு பணிகளில் ஈடுபடுவதுடன் கொண்டைஊசி வளைவுகளில் வர்ணம் பூசும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 20 கொண்டை ஊசி வளைவுகளுக்கும் தியாகிகள் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதில் தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன், வீரன் வாஞ்சிநாதன், வ.உ.சிதம்பரனார், சுப்ரமணியசிவா, வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், தகடூர் அதியமான், வள்ளல் பாரி, வல்வில் ஓரி, சேரன் செங்குட்டுவன், பாண்டிய நெடுஞ்செழியன், கரிகால சோழன், அவ்வையார், கம்பர், பாரதியார், திருவள்ளுவர், கபிலர், பரணர், இளங்கோ அடிகள் ஆகியோரது பெயர்கள் எழுதப்பட்டுள்ளன.

    இந்த ஆண்டு மே மாத தொடக்கத்திலேயே கோடை விழா நடைபெறுவதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்காட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க அண்ணாப்பூங்கா, படகு இல்லம் போன்ற பகுதிகளில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டுள்ளது.

    ஏற்காட்டிற்கு முதல்வர் வருவதாலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வர இருப்பதாலும் பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    கோடை விழாவையொட்டி ஏற்காட்டிற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள் என்பதால் அவர்களின் வசதிக்காக வருகிற 12-ந் தேதி முதல் 5 நாட்களுக்கு தினமும் 50 சிறப்பு பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.


    ×