search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏரிகள் வறண்டது"

    செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் சென்னை நகரில் சப்ளை செய்யப்படும் குடிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வடசென்னையில் பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு உள்ளது.
    பூந்தமல்லி:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் உள்ளன.

    கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை. 4 ஏரிகளிலும் சேர்த்து 956 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது. (மொத்தம் 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்) தற்போதைய நிலவரப்படி ஏரிகளில் உள்ள தண்ணீரை கொண்டு இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே சென்னையில் குடிநீர் சப்ளை செய்ய முடியும்.

    இதையடுத்து மாற்று வழியை குடிநீர் வாரிய அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். சிக்கராயப்புத்தில் உள்ள கல்குவாரி தண்ணீரை சுத்திகரித்து அனுப்பும் பணி இப்போது நடந்து வருகிறது. தினமும் 3 கோடி லிட்டர் தண்ணீர் கல்குவாரியில் இருந்து எடுக்கப்படுகிறது.

    இன்னும் 3 மாதத்துக்கு தேவையான தண்ணீரை கல்குவாரியில் இருந்து எடுக்க முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    இதற்கிடையே முக்கிய ஏரியான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டும் அடியோடு குறைந்து வறண்டுள்ளது. இன்றைய நிலவரப்படி ஏரியில் 17 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது. மொத்தம் 3 ஆயிரத்து 645 மில்லியன் கனஅடி சேமித்து வைக்கலாம்.

    இன்னும் சில நாட்களில் செம்பரம்பாக்கம் ஏரி முற்றிலும் வறண்டு விடும். ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் சென்னை நகரில் சப்ளை செய்யப்படும் குடிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வடசென்னையில் பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு உள்ளது.

    கொருக்குப்பேட்டை, ஏழில்நகர், காமராஜ் நகர், பாரதி நகர், அம்பேத்கர் நகர், தண்டையார்பேட்டை, காசிமேடு உள்ளிட்ட இடங்களில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இப்பகுதிகளில் லாரிகள் மூலம் மட்டுமே தண்ணீர் சப்ளை செய்து வருகின்றனர்.

    இதேபோல் ஆதம்பாக்கம், மாதவரம், போரூர், மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இனிவரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

    தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் நீலத்தடி நீரை எடுத்து பயன்படுத்த அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.


    ×