search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஜினீயரிங் கவுன்சிலிங்"

    • கலந்தாய்வு தள்ளிப் போவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.
    • கவுன்சிலிங் தாமதத்தால் முதலாம் ஆண்டு என்ஜினீயரிங் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவதில் தாமதம் ஆகும்.

    சென்னை:

    அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள 460 கல்லூரிகளில் 2023-24-ம் கல்வி ஆண்டில் என்ஜினீயரிங் இளங்கலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்க 1.78 லட்சம் மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் என்ஜினீயரிங் கவுன்சிலிங் தரவரிசை பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

    இதில் திருச்செந்தூரை சேர்ந்த மாணவி நேத்ரா முதலிடத்தை பிடித்தார். 102 பேர் 200-க்கு 200 கட்ஆப் மதிப்பெண் பெற்றனர். இதில் 100 பேர் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் ஆவர்.

    என்ஜினீயரிங் கவுன்சிலிங் இன்று (ஜூலை 2-ந்தேதி) தொடங்கும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கலந்தாய்வு தள்ளிப் போவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.

    மருத்துவ கலந்தாய்வுக்கான முதல்கட்ட கவுன்சிலிங் தொடங்கிய பின்னர் என்ஜினீயரிங் கவுன்சிலிங் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    மருத்துவ சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் என்ஜினீயரிங் கவுன்சிலிங் இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதம் (ஆகஸ்ட்) முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவ கவுன்சிலிங் இந்த மாதம் 2-வது வாரம் அல்லது 3-வது வாரத்தில் தொடங்கும் என்று தெரிகிறது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, 'மருத்துவ கவுன்சிலிங்கிற்கு பிறகே என்ஜினீயரிங் கவுன்சிலிங் நடத்தப்படும். கவுன்சிலிங் தாமதத்தால் முதலாம் ஆண்டு என்ஜினீயரிங் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவதில் தாமதம் ஆகும். கவுன்சிலிங் 4 சுற்றுகளாக குறைந்தது 2 மாதங்கள் நடைபெறும்.

    ஆகஸ்ட் மாதத்தில் கவுன்சிலிங் தொடங்கினால், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் வகுப்புகள் தொடங்கும்' என்றார்.

    • 2 மாத கால பொறியியல் கலந்தாய்வு காலக்கெடுவை சந்திக்க ஜூலை மாதத்தில் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
    • கலந்தாய்வு தொடக்கத்தில் இந்த ஆண்டு சிறந்த கல்லூரிகளில் அதிக இடங்கள் காலி ஏற்பட கூடம் என்று நிபுணர்கள் கூறுகின்றார்கள்.

    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் இடங்கள் காலியாக கிடக்கின்றன.

    கொரோனா தொற்று பரவலால் கடந்த 2 வருடமாக நீட் தேர்வு முடிவு, பிளஸ் -2 தேர்வு முடிவுகள் தாமதத்தால் உயர் கல்விக்கான பொறியியல், மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை தள்ளிப் போனது.

    கடந்த ஆண்டு நவம்பர் 13-ந்தேதி வரை பொறியியல் கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டதால் சேர்க்கை தாமதமானது. காலி இடங்களை தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை கமிட்டி புதிய விதியை அறிமுகப்படுத்தி உள்ளது. அதில் பொறியியல் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் கல்வி கட்டணத்தை ஒதுக்கீடு செய்யப்பட்ட 7 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். மாணவர்கள் கட்டணம் செலுத்தாத இடங்களை காலியாக கருதி அவற்றை ஒரே சுற்றில் ஒதுக்கி நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளது.

    இந்த நிலையில் தொழில்நுட்ப படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு செப்டம்பர் 15-ந்தேதி என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) நிர்ணயித்து உள்ளதால் வருகிற கல்வி ஆண்டுக்கான பொறியியல் கவுன்சிலிங் முன்கூட்டியே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    2 மாத கால பொறியியல் கலந்தாய்வு காலக்கெடுவை சந்திக்க ஜூலை மாதத்தில் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. கலந்தாய்வு தொடக்கத்தில் இந்த ஆண்டு சிறந்த கல்லூரிகளில் அதிக இடங்கள் காலி ஏற்பட கூடம் என்று நிபுணர்கள் கூறுகின்றார்கள். மேலும் காலி இடங்களை தவிர்க்க 10 சதவீதம் கூடுதலான இடங்களை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலிடம் கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

    வருகிற கல்வி ஆண்டில் பொறியியல் கல்லூரிகளில் இணைப்பு வழங்குவதற்கான கடைசி தேதி ஜூலை 31, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 15, இது 2-ம் ஆண்டிற்கான 'லேட்டரல்' நுழைவு சேர்க்கைக்கான கடைசி தேதியாகும் என்று ஏ.ஐ.சி.டி.இ. கல்வி காலண்டரை வெளியிட்டு உள்ளது.

    இது குறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியதாவது:-

    பொறியியல் கவுன்சிலிங் தொடங்கும் முன் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நடத்துவது கடினம். தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை அறிமுகப்படுத்திய சீர்திருத்தங்கள் இருந்த போதிலும் எம்.பி.பி.எஸ். இடங்களை பெற்ற மாணவர்கள் இங்கிருந்து வெளியேறுவார்கள்.

    இதனால் சிறந்த பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு அதிக காலி இடங்கள் உருவாகும் என எதிர்பார்க்கிறோம்.

    ஜூலைக்கு முன்னதாக எம்.பி.பி.எஸ். நீட் முடிவு வராது. அதற்கு முன்னதாக பொறியியல் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பித்து இருப்பார்கள். பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் சிறந்த கல்லூரிகளை தேர்வு செய்து விடுவார்கள். மருத்துவ கவுன்சிலிங் தொடங்கும் போது அதில் கலந்து கொண்டு எம்.பி.பி.எஸ். இடங்களை தேர்வு செய்து விடுவதால் சிறந்த பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் காலியாக கிடக்கின்றன. இந்த இடங்களில் நன்கு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு சேர வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. இதனால் 10 சதவீதம் இடங்களை கூடுதலாக அண்ணா பல்கலைக்கழகம் ஏ.ஐ.சி.டி.இ.யிடம் கேட்க வேண்டும். கூடுதல் இடங்கள் பெற்றால் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×