search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எடப்பாடி ஆதரவாளர்கள் உறுதி"

    • விரைவில் நடைபெற உள்ள பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது என அவரது திருச்சி ஆதரவாளர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்
    • தனது அரசியல் அறிவால், சாதுரியத்தால் முதல்வர் பதவிக்கு தான் தகுதியானவர் என்பதை நிரூபித்து காட்டினார்

    திருச்சி:

    திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு நிர்வாகிகள் பகுதி வாரியாக ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதன்படி ஜங்ஷன் பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் ஐயப்பன் தலைமையில் நடைபெற்றது.

    மாவட்ட மாணவர் அணி செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ரத்னவேல் பேசியதாவது:

    இன்றைக்கு தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வின் எதிர்காலம் குறித்து வாத பிரதிவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த இயக்கம் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா காலத்தில் பீடு நடை போட்டது.

    ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் இந்த இயக்கம் நிற்குமா? நிலைக்குமா? என்ற கேள்விக்குறி எழுந்தது. ஆனால் அத்தனை ஆருடங்களையும் தாண்டி எடப்பாடி பழனிசாமி கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக வழி நடத்தினார்.

    தனது அரசியல் அறிவால், சாதுரியத்தால் முதல்வர் பதவிக்கு தான் தகுதியானவர் என்பதை நிரூபித்து காட்டினார். மேலும் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்தை வெற்றியின் இடமாக மாற்றி காட்டினார்.

    ஒரு சிறந்த ஆட்சியின் அடையாளமாக சட்டம் ஒழுங்கை காப்பாற்றி, விலைவாசியை கட்டுப்படுத்தி குடி மராமத்து உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்தார்.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மூடு விழா நடத்தினார். மீத்தேன் திட்டத்தை தடுத்து நிறுத்தினார்.

    டெல்டா விவசாயிகளை பாதுகாக்க பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க. மற்றும் தி.மு.கவின் வாக்கு வித்தியாசம் 3 சதவீதம் மட்டுமே.

    இன்றைக்கு இருக்கக்கூடிய சூழலில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் ஆவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. மீண்டும் 2026 அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆவின் கார்த்திக்கேயன் பேசும்போது, அ.தி.மு.க.வில் உள்ள 99 சதவீத தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி பொது செயலாளராக வரவேண்டும் என விரும்புகிறார்கள். இன்றைக்கு தி.மு.க.வை எதிர்கொண்டு மீண்டும் அ.தி.மு.க.வை அரியணை ஏற்றும் வல்லமை எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது என்றார்.

    கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி.பரமசிவம், மாவட்ட இணைச்செயலாளர் ஜாக்குலின், துணைச்செயலாளர் வனிதா,பொதுக்குழு உறுப்பினர்கள வெல்லமண்டி பெருமாள், மல்லிகா செல்வராஜ், பாலக்கரை சதர், மாவட்ட அணி நிர்வாகிகள் எம்.ராஜேந்திரன், எம்.எஸ்.ராஜேந்திரன், கருமண்டபம் நடராஜன், தென்னூர் அப்பாஸ், அழகரசன் விஜய், ஏ.எம்.மீரான், கருடா நல்லேந்திரன், இலியாஸ், ஜோசப் ஜெரால்டு, சகாபுதீன், ஜான் எட்வர்ட் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×