search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக கோப்பை ஆக்கி"

    உலக கோப்பை ஆக்கி போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. #HockeyWorldCup2018 #Argentina #NewZealand
    புவனேஸ்வரம்:

    16 அணிகள் பங்கேற்றுள்ள 14-வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ள அணிகள் லீக் ஆட்டத்தில் மோதி வருகின்றன.

    இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் அணி, 20-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் அணியை எதிர்கொண்டது.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 6-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் டிமோத்தீ கிளமென்ட் கோல் அடித்தார். ஸ்பெயின் அணியினர் பதில் கோல் திருப்ப கடும் முயற்சி மேற்கொண்டனர். பிரான்ஸ் அணியின் தடுப்பு ஆட்டக்காரர்கள் மற்றும் கோல் கீப்பர் ஆர்துர் தைப்ரே அபாரமாக செயல்பட்டு பெனால்டி கார்னர் உள்பட பல வாய்ப்புகளை முறியடித்தனர். முதல் பாதியில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

    48-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணி வீரர் அல்வரோ இக்லிசியஸ் இந்த கோலை அடித்தார். இதனால் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை ஏற்பட்டது. அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. 51-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு ‘பெனால்டி ஸ்டிரோக்’ வாய்ப்பு கிடைத்தது. இதனை ஸ்பெயின் அணியின் கோல்கீப்பர் குய்சோ கோர்டஸ் லாவகமாக செயல்பட்டு தடுத்து நிறுத்தினார்.

    முடிவில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. முதல் லீக் ஆட்டங்களில் ஸ்பெயின் அணி அர்ஜென்டினாவிடமும், பிரான்ஸ் அணி நியூசிலாந்திடமும் தோல்வி கண்டு இருந்தன.



    மற்றொரு லீக் ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் அணியுமான அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள நியூசிலாந்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் அர்ஜென்டினா அணி நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறுவது பிரகாசமாகி இருக்கிறது. அர்ஜென்டினா முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை வென்று இருந்தது. நியூசிலாந்து அணி முதல் ஆட்டத்தில் பிரான்சை சாய்த்து இருந்தது. இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா (மாலை 5 மணி), அயர்லாந்து-சீனா (இரவு 7 மணி) அணியும் மோதுகின்றன.

    16 நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை ஆக்கி போட்டி புவனேஸ்வரத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. #HockeyWorldCup2018 #India #SouthAfrica
    புவனேஸ்வரம்:

    உலக கோப்பை ஆக்கி போட்டி 1971-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்பெயினில் நடந்த தொடக்க போட்டியில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அடுத்த 2 போட்டிகள் 2 ஆண்டுகள் இடைவெளியிலும், 4-வது போட்டி 3 ஆண்டுகள் இடைவெளியிலும் நடைபெற்றது.

    1978-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக கோப்பை ஆக்கி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு நெதர்லாந்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.



    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கி டிசம்பர் 16-ந் தேதி வரை நடக்கிறது.

    இதில் 16 நாட்டு அணிகள் கலந்து கொள்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ் அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் இடத்தில் உள்ளதுமான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, சீனா அணிகளும், ‘சி’ பிரிவில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள பெல்ஜியம், 5-வது இடத்தில் இருக்கும் இந்தியா, கனடா, தென்ஆப்பிரிக்கா அணிகளும், ‘டி’ பிரிவில் நெதர்லாந்து, ஜெர்மனி, மலேசியா, பாகிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இடம் பிடித்துள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு முன்னேறும். கடைசி இடம் பெறும் அணிகள் கால்இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறும்.

    ஒவ்வொரு பிரிவிலும் 2-வது, 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றில் கிராஸ் ஓவர் முறையில் மற்ற பிரிவில் 2-வது, 3-வது இடத்தை பெறும் அணியுடன் ஒரு ஆட்டத்தில் மோதும். இதில் வெற்றி பெறும் 4 அணிகள் கால்இறுதிக்குள் நுழையும். வருகிற 9-ந் தேதியுடன் லீக் ஆட்டம் முடிவடைகிறது. 2-வது சுற்று ஆட்டங்கள் வருகிற 10, 11-ந் தேதிகளில் நடக்கிறது. வருகிற 12, 13-ந் தேதிகளில் கால்இறுதி ஆட்டமும், வருகிற 15-ந் தேதி அரைஇறுதி ஆட்டமும், வருகிற 16-ந் தேதி இறுதிப்போட்டியும் நடை பெறுகிறது.

    மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி 43 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உலக கோப்பை உச்சி முகர்ந்து இழந்த பெருமையை மீட்டெடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். 8 முறை ஒலிம்பிக் சாம்பியனான இந்திய அணி உலக கோப்பையை ஒரு முறை மட்டுமே வென்றுள்ளது. 1975-ம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த உலக கோப்பை போட்டியில் அஜித் பால்சிங் தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதன் பிறகு இந்திய அணி உலக கோப்பை போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதிகபட்சமாக 5-வது இடத்தையே பெற்றுள்ளது. கடந்த போட்டியில் இந்திய அணி 9-வது இடத்தை பிடித்தது.

    இந்த உலக கோப்பை போட்டி தொடரில், தொடர்ந்து 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா, நெதர்லாந்து, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகியவை இந்திய அணிக்கு கடும் சவாலாக இருக்கும். இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களும், துடிப்பு மிக்க இளம் வீரர்களும் சம அளவில் இடம் பிடித்துள்ளனர். 2016-ம் ஆண்டு ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த 7 இளம் வீரர்கள் இந்த உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ளனர். தடுப்பு ஆட்டத்தில் கொஞ்சம் அதிக கவனம் செலுத்தினால் இந்திய அணி சாதிக்க வாய்ப்பு உள்ளது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் இந்திய அணி புதிய வரலாறு படைக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

    உலக கோப்பை போட்டியையொட்டி ஒடிசா மாநிலம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த போட்டிக்காக ஒடிசா மாநில அரசு ஏறக்குறைய ரூ.82 கோடி செலவிட்டுள்ளது. போட்டி நடைபெறும் ஸ்டேடியம் மற்றும் வீரர்கள் தங்கும் இடத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தொடக்க நாளான இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் பெல்ஜியம்-கனடா (மாலை 5 மணி), இந்தியா-தென்ஆப்பிரிக்கா (இரவு 7 மணி) அணிகள் மோதுகின்றன. போட்டி நடைபெறும் ஸ்டேடியம் 15 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்டதாகும். முதல் நாள் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    உலக கோப்பை ஆக்கி போட்டி இந்தியாவில் நடைபெறுவது இது 3-வது முறையாகும். 1982-ம் ஆண்டு மும்பையில் நடந்த போட்டியில் இந்தியா 5-வது இடமும், 2010-ம் ஆண்டு டெல்லியில் நடந்த போட்டியில் இந்தியா 8-வது இடமும் பெற்றது.  #HockeyWorldCup2018 #India #SouthAfrica
    உலக கோப்பை ஆக்கி போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக மன்பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். #WorldCupHockey #India #ManpreetSingh
    புதுடெல்லி:

    14-வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் வருகிற 28-ந் தேதி முதல் டிசம்பர் 16-ந் தேதி வரை நடக்கிறது.

    இதில் கலந்து கொள்ளும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறும். 2-வது மற்றும் 3 இடத்தை பிடிக்கும் அணிகள் மற்ற பிரிவில் 2-வது அல்லது 3-வது இடம் பிடித்த அணியுடன் ஒரு ஆட்டத்தில் மோதும். இதில் வெற்றி பெறும் அணிகள் கால்இறுதிக்குள் நுழையும். இந்திய அணி ‘சி’ பிரிவில் பெல்ஜியம், கனடா, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் அங்கம் வகிக்கிறது.



    உலக கோப்பை போட்டிக்கான இந்திய ஆக்கி அணியின் பயிற்சி முகாம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. இந்த பயிற்சி முகாமில் 34 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் இருந்து 18 பேர் கொண்ட இந்திய அணியை, ஆக்கி இந்தியா அமைப்பு நேற்று அறிவித்தது. அணியின் கேப்டனாக மன்பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இருந்து விலகிய சுனில், சீனியர் வீரர் ரூபிந்தர் பால்சிங் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

    இந்திய அணி வருமாறு:- கோல் கீப்பர்கள்: ஸ்ரீஜேஷ், கிருஷ்ணன் பகதூர் பதாக், பின்களம்: ஹர்மன்பிரீத் சிங், பிரேந்திர லக்ரா, வருண்குமார், கோதாஜித் சிங், சுரேந்தர் குமார், அமித் ரோஹிதாஸ், நடுகளம்: மன்பிரீத் சிங் (கேப்டன்), சிங்லென்சனா சிங் (துணை கேப்டன்), நீலகண்ட ஷர்மா, ஹர்திக் சிங், சுமித், முன்களம்: ஆகாஷ்தீப் சிங், மன்தீப் சிங், தில்பிரீத் சிங், லலித்குமார் உபாத்யாய், சிம்ரன்ஜீத் சிங்.

    அணி தேர்வு குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஹரேந்திர சிங் கூறுகையில் ‘உலக கோப்பை போட்டிக்கு சரியான கலவையிலான சிறந்த அணியை தேர்வு செய்துள்ளோம். அணி தேர்வில் சில கடினமாக முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 18 பேர் கொண்ட இறுதி அணியில் அனுபவம் வாய்ந்த மற்றும் இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். நடப்பு பார்ம் மற்றும் உடல் தகுதியின் அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் தொடர்ந்து தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். உலக கோப்பை போட்டியிலும் நமது அணி சிறப்பாக செயல்படும்’ என்றார். 
    ×