search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உதவி பயிற்சியாளர்"

    ஆஸ்திரேலிய அணி மீண்டும் உலக கோப்பையை வெல்லும் என்று முன்னாள் கேப்டனும், உதவி பயிற்சியாளருமான ரிக்கிபாண்டிங் கூறியுள்ளார். #RickyPonting
    சிட்னி:

    10 அணிகள் பங்கேற்கும் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியை வலுப்படுத்தும் விதமாக அந்த அணியின் உதவி பயிற்சியாளராக ரிக்கிபாண்டிங் நியமிக்கப்பட்டு இருக்கிறார். ரிக்கிபாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 2003 மற்றும் 2007-ம் ஆண்டுகளில் உலக கோப்பையை வென்று இருந்தது.

    இந்த நிலையில் ரிக்கிபாண்டிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கடந்த முறை நாங்கள் உலக கோப்பையை வென்றோம். இந்த முறையும் எங்களால் உலக கோப்பையை நிச்சயம் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன். தற்சமயம் உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இந்தியாவும், இங்கிலாந்தும் முன்னணியில் இருக்கின்றன. ஆனால் ஸ்டீவன் சுமித்தும், டேவிட் வார்னரும் திரும்பியதும், எங்கள் அணியும் பலம் வாய்ந்ததாக உருவெடுத்து விடும். சுமித்தும், வார்னரும் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள். அனுபவசாலிகள். நெருக்கடியான சூழலை திறம்பட கையாளக்கூடியவர்கள். அவர்கள் வந்ததும் உடனடியாக எங்கள் அணியை பார்க்க வலுமிக்கதாக தெரிய தொடங்கி விடும்.

    உலக கோப்பை போட்டி நடக்கும் இங்கிலாந்தில் உள்ள சீதோஷ்ண நிலை, எங்களது ஆட்ட பாணிக்கு சாதகமானது. அதனால் உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள பிரதான அணிகளில் ஒன்றாக ஆஸ்திரேலியாவும் இருக்கும்.

    வேகப்பந்து வீச்சாளர்கள் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் காயத்தால் அவதிப்படுவது குறித்து கேட்கிறீர்கள். பொதுவாக, அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு தங்களை எப்படி தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தெரியும். அதனால் அதுபற்றி எங்களுக்கு அதிகமாக கவலையில்லை. எங்களது கவலை சுமித், வார்னர், ஹேசில்வுட், ஸ்டார்க் ஆகிய வீரர்களை அணிக்குள் கொண்டு வந்து ஒருங்கிணைப்பதில் தான் இருக்கிறது. திட்டமிட்டப்படி எல்லாமே சரியாக அமைந்து விட்டால் எங்கள் அணி சவால்மிக்க அணியாக விளங்கும்.

    இவ்வாறு பாண்டிங் கூறினார். #RickyPonting

    ×